தர்மப்பசு ஒற்றைக்காலில் நிற்கும் காலத்தை கலியுகம் என்பார்கள். நாம் நின்று கொண்டிருப்பதும் அதே யுகத்தில்தான். தர்மம் என்பது எந்தக் காலத்து அடிசில் என்று கேட்பவர்களும் நம்மில் உளர். அதனாலேயே தர்மம் குறித்து மேடைகளிலும், ஊடகங்களிலும் வழங்கப்படுகிற போதனைகளும் பாவனைகளாய் வேஷம் தரித்திருக்கின்றன. இயற்கை அப்படியில்லை. அதற்கு வேஷமோ, முழக்கமோ தெரியாது. ஆனால் அது தர்மத்தோடு நிகழ்கிறது. “தர்மம் தலை காக்கும்” என்பதையெல்லாம் மறந்தொழிந்து போனோம். இப்படித்தான் அந்தப் பசுவை ஒற்றைக்காலில் நிற்க வைத்திருக்கிறோம். வெறும் உலகியலில் மட்டுமல்ல அறிவுச்சூழலிலும் கலியுகம்தான் போலும்!

சமீப காலங்களில் அறிஞர்கள் என்று சபைகளில் அறிவிக்கப்படும் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஆய்வாளர்கள் புற்றீசல்கள் போல எங்கிருந்து கிளம்புகின்றனரோ! அப்புறம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் நலிந்தவர்களா என்ன! ஒரு கதையை எழுதி, இலக்கிய இணையத்தளமொன்றில் வெளியானதும் வியாசர் எல்லாம் தனக்கு எம்மட்டு என்று கேட்கிறார்களே. என் ஒற்றைக்கதைக்கு முன்பாக மகாபாரதம் எல்லாம் எம்மாத்திரம் சகாவே – என்று கேட்ட ஒரு எழுத்தாளர் என்னுடைய நட்பில் இருந்தார். இந்தக் கேள்விக்குப் பிறகு அந்த நட்பை நீட்டிக்க விரும்பாத என்னையே எனக்குப் பிடித்தது.

காந்தி, பாரதி, சங்ககாலம், சங்கத்துக்கு முந்தைய/ பிந்தைய காலம், கல்வெட்டு, நாட்டாரியல், மானுடவியல் என நீளும் எண்ணுக்கணக்கற்ற தளங்களில் ஆய்வாளர்கள் என்று நம்பப்படும் சிலரின் அறிவை நினைத்தால் திக்கென்று இருக்கிறது. ஆய்வு என்பது அவ்வளவு எளிமையானதில்லை என்று அறிந்திருப்பதால் தான் என்போன்றோருக்கு இந்த நோவு வருகிறது. இதுமட்டுமா! இன்று கவிஞர்களைப் பார்க்கிலும் எண்ணிக்கையில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பெருகிவிட்டனர். “நான் கவிஞர் அல்லது எழுத்தாளர்  இல்லையா, என்னை ஏன் அந்த மூத்த எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கவில்லை? இதில் உள்ளரசியல் இருக்கிறது” என்று போர்க்கொடி தூக்கும் முகநூல் பதிவர்களின் பெருக்கமும் நிகழ்ந்துவிட்டன. களை பெருகி, பயிர் அழிக்கும் காலமிது.

கலியுகமப்பா! கலியுகம்!

சமீபத்தில் காந்திய ஆய்வாளர் என்று அறியப்படுகிற ஒருவரின் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே பல நூல்களில் எழுதப்பட்ட தகவல்கள், அதனைச் சுருக்கி சுருக்கி வேறெந்தப் புதிய அணுகுமுறையோ, ஆற்றலோ அல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும் தொகுப்பு. இந்த நூலின் பின்னணியில் அந்த ஆசிரியர் பற்றிய குறிப்பில் இவர் ஒரு காந்திய ஆய்வாளர் என்று அடையாளமிடப்பட்டிருந்தது. இவரது ஏனைய நூல்கள் என்ன என்று தேடினால், முதல் புத்தகமே இதுதான் என்கிறார்கள். வேதனை! இப்படியானவொருவரை காந்திய ஆய்வாளர் என்று விளிப்பவர்களை நினைத்தால் நம் சாத்வீகத்திற்கு பங்கம் ஆகிவிடும். போகட்டும். பாரதிக்கும் இது போன்ற ஆய்வாளர்கள் வாய்க்கப் பெற்றுள்ளனர். அதனை நினைத்தால் நெஞ்சில் உதிரம் வடியும். குறிப்புக்களைத் தேடித் தொகுப்பதை மட்டுமே செய்பவர்  பதிப்பாசிரியரே அன்றி ஆய்வாளர் அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

பண்பாட்டு ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியை அறிந்திருப்பீர்கள்! அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வியப்பளிக்கும் புரிதல்களையும், சிறந்த கருத்துருவாக்கங்களையும் தமிழ்ச் சூழலில் பிரசவித்திருக்கின்றன. அ.கா.பெருமாள் அவர்களின் உழைப்புக்கும் கள ஆய்வுகளுக்கும் நிகராக வேறு உதாரணங்கள் உண்டோ, இந்தப் பாமரம் அறிகிலேன்!. ஆ. சிவசுப்பிரமணியனின் எத்தனையெத்தனை நூல்கள். வியப்பும் பெருமையும் அடையும் வரலாற்றின் கசப்பான பக்கங்களையும் தோலுரித்துக் காண்பித்தவர். தொ. பரமசிவன் அவர்களின் “அழகர் கோயில்” ஆய்வு, காலம் முழுதும் நிலைக்கவல்லது. காந்தி என்கிற அவதார புருஷரை தனது ஆய்வுகளின் வழியாக நம்மிடம் அழைத்து வருகிற ராமச்சந்திர குஹாவின் அருஞ்செயல்களை எண்ணினால் மலைப்பாக இருக்கிறது. நம் கோவில்களின் கல்லெல்லாம் கதை சொல்லும் என்று நமக்கு அறிவூட்டிய குடவாயில் பாலசுப்ரமணியன் கல்வெட்டு ஆய்வுகளும் வரலாற்று ஆய்வுகளையும் எண்ணி எண்ணி வியக்கிறேன். கரசூர் பத்மபாரதி என்கிற ஆய்வாளர் நரிக்குறவர் இனவரைவியல் , திருநங்கையர் சமூக வரைவியல் ஆகிய இரண்டு மிகமுக்கியமான ஆய்வுகளை நமக்குத் தருவித்திருக்கிறார். இப்படியான பெருமைகொள்ளும் நிரையும் நிறையும் கொண்டது தமிழ் அறிவுச்சூழல். இன்னும் எத்தனையோ பெயரை இங்கே குறிப்பிட முடியும்.

பிறர் ஆய்வுகளை வாசித்து மனப்பாடம் செய்து இன்னொரு மேடையில் ஒப்பிப்பதால் ஒருவர் ஆய்வாளர் ஆகிவிடும் அற்பச் சூழலிது. தர்மம் மலிந்து போனபின் ஞானம் எங்கே பிழைக்கும் என்பதெல்லாம் தெரிகிறது. ஆனால் மனத்தில் பிலாக்கணம் கொதிப்பது நிற்கவில்லையே!

ஒரு கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தேன். என்னுடன் உரையாற்ற ஆய்வாளர் ஒருவரும் அங்கிருந்தார். அவரது ஆய்வுகளை வாசிக்கும் அளவுக்கு கும்ப ராசியானாலும் ஜென்ம சனி என்னைப் பாதிக்கவில்லை. தனக்கு இணையான ஆய்வாளர் யாரும் தமிழில் இல்லை என்பதே அவரது மூடநம்பிக்கை. ஏனையவற்றில் அவரொரு முற்போக்கர். என்னுடைய நெற்றியில் நீறு அணிந்திருந்தேன். நீங்கள் ஒரு இலக்கியவாதி இப்படி நீறணியலாமா என்று புன்னகையோடு கேட்டார்.

அணியலாமே! நான் முதன்மைக்கும் முதன்மையான எனது இலக்கிய முன்னோடியாக கருதும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் என எல்லோரும் அணிந்தார்கள். என்னுடைய பேயவள் – காரைக்கால் அம்மை அணிந்தாள். இலக்கியவாதி நீறணியக்கூடாது என்று மொழியின் ஆசாரக்கோவையின் எந்தவொரு ஒழுக்க விதியும் கூறவில்லை என்றேன்.

ஆய்வாளர்  ஆசாரக்கோவை என்கிற சொல்லை குறிப்பெடுத்துக் கொண்டே, “நான் எதற்கு மணிவாசகர் எழுதிய ஆசாரக்கோவையையும், திருப்பாவையையும் வாசிக்க வேண்டும்” கேட்டார். ஒரு சைவராக இருந்தும் ஆசாரக்கோவைக்கும் மணிவாசகருக்கும் தொடர்பை ஏற்படுத்த முடியாத என் போதத்தை யான் என் செய்வேன்! அமைதியாக இருந்துவிட்டேன்.

அன்று அவருடைய உரையைக் கேட்டிருந்தால், தமிழின் உன்னதமான ஆய்வாளர்களும் அறிஞர்களும் வெட்கித்ருப்பார்கள். வரலாற்றுத்தகவல்களில் அவ்வளவு பிறழ்வுகள். மொழி சார்ந்தும் அதனது இலக்கியம் சார்ந்தும் அவரது அறியாமையை அறிய முடிந்தது. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஆசாரக்கோவையையே மணிவாசகரின் திருவாசகத்தோடு இணைத்தவர் இல்லையா இந்த தகைசால்! – கலியுகமப்பா கலியுகம்!

இன்று இலக்கியத்தை புதிதாக கண்டடைய எண்ணும் புதிய வாசகர்கள் இவ்வளவு களைகளையும் சுழிகளையும் சாதுரியமாக நீந்திக்கரையேற வேண்டியுள்ளது. தலை மூடும் அளவுக்கு களை எழுந்த களத்தில் நற்திசை தொடுவதெல்லாம் மாபெரும் சவால். இன்று இன்ஸ்டாகிராம் வழியாக தமிழின் நவீன கவிதையின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியுமென எத்தனிக்கும் வீணர்களை எனக்குத் தெரியும். “அன்பென்பது என்ன – இன்னும் நீ சுவைக்கத்தராத உன் விஷம்” மாதிரியான கசடுகள் பகிரப்பட்டுக் கொண்டே உள்ளன. ஆஹா! என்னே கவிதை! என்று வேறு பின்னூட்டங்கள் இடப்படுகின்றன.

சிறந்தவற்றை அல்ல நல்லவற்றைக் காண்பதுவே அரிதாகிவிட்ட சூழல் இது. முகநூல் வழியாக தோன்றிய ஒரு அழிவுச் சுழி. அங்கிருந்த மெல்ல நாளேடுகள் வரைக்கும் சமூக ஊடகங்களின் கசடுகள் வந்தேறுகின்றன. இவற்றையெல்லாம் கடந்தும் ஒருவர் சிறந்த இலக்கியங்களை நோக்கி வந்தடைகிறார் என்றால் அந்த வாசகர் மிக முக்கியமானவர். அப்படியானதொரு திரளை நோக்கித்தான் இலட்சியமிக்க நற்செயல்களை கையளிக்க மெய்யான அறிவுஜீவிகள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசாரக்கோவைக்கும் திருக்கோவைக்கும் வித்தியாசம் தெரியாத மொழி ஆய்வாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஒருபடி மேலானவர்கள் இந்த வாசகர்கள். அவர்கள் புதிய வெளிச்சத்தை நோக்கி வருகிறார்கள். தம்மை ஒரு பண்பாட்டு நடவடிக்கைக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். வாசிப்பை ஒரு வேள்வியாக கருதுகிறார்கள். அப்பழுக்கற்ற தமது தேடல் மூலம், மொழியில் நிகழும் வாழ்வை வாழ்ந்து விடத்துடிக்கிறார்கள். தம்மை எப்போதும் இலக்கியத்தைக் கொண்டாடும் ஒருவகையான களிப்புடன் எதிர்கொள்கிறார்கள். நான் மேற்கூறிய பாதிவெந்த பாவனை அறிவுஜீவிகளை இவர்கள் எளிதில் அடையாளம் காண்கிறார்கள். வாழும்                 தி. ஜானகிராமன், வாழும் கு. அழகிரிசாமி என்று தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொண்டு அலையும் வீணர்களை எளிதில் நிராகரிக்கிறார்கள். இன்னொரு வகையில் கரையேறி வந்தபின் தம்மை மூடிநின்ற களைகளை இந்த வாசகர்களே அகற்றித் தள்ளுகிறார்கள். இவர்களைத்தான் நான் மிகவும் நம்புகிறேன்.

ஏனெனில் இவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் கலைக்கு குருவைத் தேடுகிறார்கள். மாணாக்கருக்கு இருக்கக் கூடிய மெய்யான பணிவும் ஞானத்தை ஏந்தத்துணியும் ஆற்றலும் இவர்களிலும் எல்லோருக்கும் வாய்க்காது. வாசிக்க வாசிக்க அறிவுச் சேகரத்தில் குவிந்திருக்கும் தகவல்களும் தெரியும் என்கிற மமதையும் சிலரை இங்கிருந்தும் நீக்கிவிடும். ஒளியை நோக்கி தவமிருப்பவர் கண்களைத் திறவாதிருப்பதைப் போல குருவிடம் நடந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் அறிய வேண்டும் என்றால் அதுபோலொன்று தேவையே இல்லை என எண்ணுவோர் அடைந்த உயரம் என்று எதுவும் இல்லை.

சமீபத்தில் “ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்கிற உ.வே.சாமிநாதையர்  அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தேன். தமிழில் குருமரியாதைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் அந்த நூல் எழுதப்பட்டிருக்கும் முறையே ஒன்றெனலாம். குருவின் அடையாளத்தை மாணவர் சொல்லச் சொல்ல வரைந்த ஓவியமே இன்று வரலாற்றுக்கு கையளிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் உருவமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா! – ஆச்சரியம் தான்.

என் தலைமுறையில் எழுதப் புகுந்தோர் பலரும் தானொரு சுயம்பு என்கிறார்கள். இந்தச் சுயம்பு பெருமையைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் காலத்தின் இடையிலேயே நிழல் போல தடமற்று அழிந்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் குருவணக்கத்தை மறந்தவர்கள் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  “நீங்கள்  என்ன வீட்டிலுள்ள பழசுகள் மாதிரி.. என்று சலித்தார்கள்.

கலியுகமப்பா! கலியுகம். வாய்பொத்திக் கொள்கிறேன்.

 

 

Loading
Back To Top