
01
ஆக்கிரமிக்கப்பட்ட
தாயகத்தின் கடலலைகளில்
பிரளயத்தின் ரத்தம்
மரித்தவர்களின் புதைகுழியில்
துளிர்த்த சிறுசெடி
பெருங்கனவு
காற்றின் இதயத்துடிப்பில்
ஊழிச்சூறையின்
சாம்பல்
புதைத்தவைகளிலும்
புதைக்கமுடியாதவைகளிலும்
விதைத்தவைகளிலும்
விதைக்கமுடியாதவைகளிலும்
ஊதிப்பெருத்த நிணம்
பெருங்கனவின் நீரேரிக்குள்
உருகி இறங்குகிறது.
வேட்கைச் சந்தம் ஓங்கும்
இந்த யுத்தப் பாடலில்
ஏன் அதிர்கிறது
இரைதீரா படிமச் சுழல்.
ஏன் வழிகிறது
தீப்பிழம்பு.
02
படுகளத்தின்
ஓலம் அறையும்
அதிகாலைக் கனவொன்றில்
விழித்தெழும்பும்
போர்நிலத்து
மகனே!
நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்
குருதி மரபில் இந்தக் கனவு வரும்.
அது
விதிக்கப்பட்ட துயர் யுகத்தின் பரிசு
திடுமென எமை விழுங்கிய
இருட்டின் மிரட்டல்
குருதிப் புழுதியின்
பேய் மழை
பெருங்கனவுக்கும்
வெறுங்கனவுக்கும்
நாமன்றி
வேறு யார்
சாட்சி சொல்வார்?
03
எந்தக் காயங்களும் இல்லாது
இறந்து போனாள் அக்கா
அவளின் சடலத்தை புதைப்பதற்கு
இடம் தேடியலைந்தேன்.
கூடாரங்கள்
பதுங்குகுழிகள்
அழுகைகள்
காயங்கள்
எறிகணைகள் வீழ்ந்தெரிந்த
கூடாரங்களின் நெருப்பில்
அக்காவின் சடலத்தை தூக்கி வீசினேன்.
சொந்த நாடு மிச்சமுள்ள நொடியில்
எரியும் அவள் அதிஷ்டமிக்கவள்.
தகனத்தின்
தீக்கங்குகளில்
அவள் களியாடி நெளிந்த
கதையினை
எங்ஙனம் எழுதுவேன் சொல்?