சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.

குமரகுருபரர்

இரண்டாயிரத்து இருபத்தாறாம் ஆண்டு பிறந்துவிட்டது. இன்னும் பல ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதற்கான நம்பிக்கைகளை அழைத்து வந்திருக்கிறது. ஏற்கனவே எண்ணியவற்றை துரித கதியில் நிறைவேற்றவும் வேண்டும்.  சென்ற ஆண்டில் அபுனைவுகளை மட்டுமே வாசித்தேன். விதிவிலக்காக மூன்றோ நான்கு புனைவு நூல்கள். இந்த ஆண்டு மறுபடியும் புனைவுகள் வாசிக்கவேண்டும். ஏற்கனவே வாசித்த மனதுக்கு நெருக்கமான அனைத்து நாவல்களையும் எடுத்துவைத்திருக்கிறேன். இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பான சில அரிதான நாவல்களை இன்னும் நான் வாசித்ததில்லை. அவற்றை எல்லாமும் வாசிக்கவேண்டும்.

ஜெயமோகன் எழுதிய காவியம் நாவலை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அதுதான் இந்த ஆண்டின் முதல் வாசிப்பு என்றுகூட கொள்ளலாம். பத்து அத்தியாயங்களைக் கடந்திருக்கிறேன். குலமொன்றின் கதை. கனவுகளும் தழும்புகளும் பல மாயக்கதையாகி நிழல்களாக எழுகின்றன. என்னுடைய குடும்ப பின்னணியோடு கூடிய சில ஒற்றுமைகள் அந்த நாவலில் உள்ளன. மீஸான் கற்கள், மய்யழிக் கரையோரம் ஆகிய நாவல்களை பல தடவைகள் வாசித்திருந்தாலும் இந்தாண்டும் வாசிக்கவேண்டும். தமிழில் தி. ஜானகிராமனின் நாவல்கள் அனைத்தையும் வாசிக்க இருக்கிறேன். சென்ற ஆண்டிற்கும் முதல் ஆண்டு அசோகமித்ரன் சிறுகதைகளை மொத்தமாக வாசித்து முடித்தேன். விளக்கிற்கு திரித்தூண்டி மாதிரி எனக்கு வாசிப்பு. ஒளியை மொழியால் பெறுகிற வரமது.

நூல்வனம் பதிப்பகத்தின் மூலம் வெளியாகவிருக்கிற “சதா வஸந்தம்” குறுநாவல்கள் தொகுப்பினை நிறைவு செய்யவேண்டும். அதுபோலவே இன்னொரு புனைவு நூலும் வெளிவரக் காத்திருக்கிறது. அதற்கான தொடக்க வேலைகளை ஆரம்பித்துள்ளேன். இன்னும் இனியவைகள் நிகழ்ந்தேறும் வருடமென நம்புகிறேன். ஒவ்வொரு பருவத்திலும் எழுத்தின் மீதான தீவிரம் சிதறாமல் குவிகிறது. எழுதும் மனத்திற்கு தேவையான கொந்தளிப்புகளும், அலைக்கழிப்புகளும் என்னிடம் அதிகமாகவே உள்ளன.

அம்மம்மா மூக்குத்தியோடு கனவில் வருகிற நாட்களில் எல்லாம் உள்ளம் தகித்து ஏனென்று தெரியாமல் தட்டழிந்து ஒரு கதையில் கொண்டே விழுத்துகிறது. அப்படியொரு கதை எழுதி முடித்ததும்  கனவு தடயமற்று அழிந்துவிடுகிறது. என் எழுத்தை வழிநடத்துவது தொன்மம். அது என் குலம் தொழுது வணங்கி எழுந்த தெய்வம்.  என் அம்மாவிடம் நீண்ட காலமாகவிருக்கும் சீலையொன்றில் வீசுகிற வாசனையே எனக்குத் துணையாகவிருக்கும் கதைக்கொழுந்து. அது என் மூதாதைகளின் உலராத வியர்வை. அவர்களின் எச்சில் வீச்சம். என்னையே நானொரு விதையெனே எண்ணி நிலமெனும் மொழியை முட்டித்திறக்கையில் துளிரென விரியும் என் ஜீவிதம்.

சமுத்திரக் கரையின் பூந்தோட்ட மலர்களிலே தேன்குடிக்க அலையும் பிரமிளின் வண்ணத்துப்பூச்சி நான்தான். பிரமிள் என் மூதாதை. அவர் எனக்களித்தது தேனாய் இனிக்கிற சமுத்திரம் ஒன்றை. வண்ணத்துப்பூச்சியும் கடலும் என்ற அந்தக் கவிதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எவ்வளவு நேர்மறை எண்ணம் கொண்ட சித்திரம் அது. தமிழ்க் கவிதையில் பிரமிள் உருவாக்கியிருக்கும் ஆழத்தின் நுனியைக் கூட இன்னும் சிலர் கண்டடையவில்லை.

வேளை சரிய, சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்ந்தது. முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது என்று எழுதியதைப் போலவ் என் எழுத்தும். எல்லையற்ற நொம்பலங்களைச் சுமந்த வாழ்வில் உவர்த்த சமுத்திரத்தை தேனாய் இனிக்கச் செய்யும் மகரந்தங்களை என்னிடம் தந்திருப்பது இந்த எழுத்தும் மொழியும் தான். “எழுதுகோலும் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்றதெல்லாம் தெய்வ வாக்கு அன்றோ பாரதியே!

“மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம் – போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே” என்று தொடங்கும் திருவெம்பாவைப் பாடல் திருமாலும் நான்முகனும் காணாத மலையினை கண்டுவிட்டோம் என்று உணர்ந்தவர்களைப் போன்று பொய் சொல்பவர்களை சீண்டித் தொடங்குகிறது. இலக்கியச் சூழலிலும் அதுபோன்ற பொக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். எழுத்து ஒரு செய்முறை உத்தி மட்டுமேயென கூறுவோரிடம் நீங்கள் அந்த மலையை உண்மையாகக் கண்டவர் இல்லையெனச் சொல்லத் தோன்றும். ஆனால் அவர்களுக்கு அந்தப் பொக்கமே துணை. அதை உடைத்துவிட்டால் அவர்களின் வெறுமை தெரிந்துவிடும் என்பதால் விலகிவந்துவிடுவேன்.

எனக்கு எழுத்தும் இலக்கியமும். “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே” என்பதைப் போலானது. பழமைக்கும் பழமையான புதுமைக்கும் புதுமையானது.  நான் மொழிக்கு தர நினைப்பது இதனைத்தான். ஏனெனில் எனக்கு மொழி அழகியல் மட்டுமேயானது அல்ல.

அது யுகம் யுகமாய் என்னிடம் குருதி கேட்கும் தெய்வம். என் நிலமெங்கும் மொழியால் நிகழ்ந்தது தீப்பிரளயம். முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதிய வீதிகளில் அம்மா என்னைக் கருவினில் சுமந்தாள். எனக்கு மொழியும் குருதியும் ஒன்று. சிங்கள இனவெறியர்களால் தெற்காசியாவின் அறிவுச்சுரங்கமான யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிர் துறந்த தமிழறிஞர் தாவீது அடிகளை நாள்தோறும் நினைத்துக் கொள்வேன். சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும் -எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று பாடிய ஈழக்கவி க.சச்சிதானந்தன் என்னுடைய முதுகிழவன் அன்றோ.

பவுணன் ஊதி ஊதித் தணல் வளர்த்து தங்கம் செய்விப்பதைப் போல எழுத வேண்டும். அணையாத தணலிடை தங்கம் மின்னுவதைப் போல மொழியாகும். வாழ்வும் ஆகும். புத்தாண்டே வருக!  புலரும் உன் விழிகளில் மங்கலங்கள் நிலைக்கட்டும்! கலையின் மீது ஒரு கனல் வண்டென அமர்ந்து ஒளிர்க! என் மகரந்தங்கள் எடுத்துச் சென்று மொழியில் அமர்க! தீயால் மலர் சுடர்ந்து கனவுகள் எழுக!  கனவுகள் வெல்க!

 

Loading
Back To Top