
நான் சிறுவனாகவிருந்த போது நடந்தது இது.
அம்மாவுக்குத் திடீரெனக் கொடுங்காய்ச்சல் பிடித்தது. தரையிலிருந்து உடல் எழுந்துவிடுமாற்போல நடுக்கம். உடலைச் சாக்குப்பையால் மூடினாலும் குளிர் போகவில்லை. கண்கள் இடுங்கிவிட்டன. நன்றாக உலர்ந்து கன்னங்கள் குழியாகியிருந்தன. ஒருநாள் மாலையில் பூட்டம்மா நீறு போட்டு எல்லாமும் சரியாகிவிடும் என்றாள். அவளின் வாக்குக்கு எங்களுடைய குலம் தலைசாய்க்கும். காய்ச்சலும் மெல்லச் சாய்ந்தது. அம்மா காலையிலேயே எழுந்திருந்தாள். நடுக்கம் விலகியிருந்தது. வாய்க்கச்சலும் களைப்பும் இருக்கிறது என்றாள். அடுப்புக்கரியால் பல்லைத் தீட்டி முகம் கழுவினாள். விறாந்தையில் அமர்ந்திருந்தவளுக்கு பனங்கட்டியும் இடிச்ச கோப்பித்தண்ணியும் கொடுத்தோம். ஆவி பறந்தது. கொதிக்க கொதிக்க மிடறு மிடறாய் குடியுங்கோ என்று சொன்னேன். பனங்கட்டியை கடித்தவள் முதல் மிடறைப் பருகினாள். அடுத்து சில நொடிகளில் மொத்தப்பனங்கட்டியையும் வாய்க்குள் போட்டுவிட்டு ஒரே மிடறில் கொதிக்கும் கோப்பித்தண்ணியை ஊற்றினாள்.
அடுத்த கணமே எல்லாவற்றியும் வெளியேற்றியது அம்மாவின் உடல். அவளது நெற்றியின் இரண்டு பக்கத்தையும் அழுத்திப் பிடித்தபடியிருந்தேன். மஞ்சளும் சிவப்புமாய் மெழுகுப்பாணியென சத்தி எடுத்தாள். அவளுடலில் காய்ச்சலை உணர்ந்தேன். கழுத்தில் புறங்கை வைத்துப்பார்த்தேன். கடுமையாக வேர்த்திருந்தும் சுட்டது. அம்மாவுக்கு காய்ச்சல் என்றேன். அவளால் எதுவும் சொல்லக்கூட முடியவில்லை. அப்படியே படுக்கவைத்தோம். அன்றைக்கு மாலையில் செல்லமணிப் பரியாரியிடம் கொண்டு போகலாமென எண்ணினோம். ஆனால் மதியம் அம்மாவுக்கு உடல் வியர்த்து காய்ச்சல் நின்றது. பசிக்குது என்று அரற்றத்தொடங்கினாள். நடப்பது எதையும் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அம்மாவுக்கு எதுவும் நடந்து விடக்கூடாதென கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தேன்.
அன்றைக்கு மைமலில் பூட்டம்மாவின் வீட்டிற்கு மறுபடியும் அம்மாவை அழைத்துச் சென்றோம். அறைக்குள் இருந்து வெளியே வந்தவளின் கையினில் கற்பூரத்தட்டு, இன்னொரு கையில் வேப்பிலைக் கொத்தும் இருந்தது. பூட்டம்மாவின் கண்களில் சாதிப்பின் புன்னகை இருந்தது. அவனின்றி அணுவும் அசையாது என்பதெல்லாம் இவளைப் பாத்தமாத்திரத்தில் பொய்யாகிவிடும். சர்வமும் சக்தியே. ஈரம் உலராத அவளது நீளக்கூந்தலில் அன்று வழமைக்கு மாறாக ரத்தச்சிவப்பில் செம்பருத்தி சூடியிருந்தாள். அம்மாவின் தலையில் வேப்பிலையால் அடித்தாள். தீயள்ளி உடலில் போட்டுக்கொண்டவளைப் போல அம்மா துடிதுடித்தாள். மீண்டும் வேப்பிலை அம்மாவின் உச்சியில் சத்தமிட்டபடி இறங்கியது. அடிபட்ட பாம்பின் உடலைப் போல எங்கே நெளிகிறது, எங்கே நிமிர்கிறது என்று தெரியாமல் ஊர்ந்து துடித்தாள் அம்மா. அப்படியே மெல்ல மெல்ல அவள் அடங்கிக் கிடந்தாள்.
“கொஞ்ச நேரத்தில எழும்பினதும், கொம்மாவை வளவுக்குள்ள கூட்டிக்கொண்டு போய் வீரபத்திரர் பீடத்தில விட்டு கற்பூரம் கொளுத்து. அதுக்கு முதல் அவளின்ர காலடி மண்ணை எடுத்து பீடத்தில வைச்சு தண்ணியால ஊத்திக் கழுவு” என்றாள் பூட்டம்மா.
எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை. யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என்று அக்கா பயந்து போயிருந்தாள். நான் அழத்தொடங்கிவிட்டேன். “ஏனடா பேயா அழுகிறாய். நான் சொல்றதைச் செய்” என்றாள் பூட்டம்மா. அம்மா எழுவதற்கு முன்பாகவே நாங்கள் வளவுக்குள் போவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாயிருந்தோம். கமலம் அத்தையின் வாழைத்தோட்டத்துப் பாத்தியைக் கடந்து போவது பாம்புகளை ஏறிக்கடப்பது போல. வகைதொகை இல்லாமல் பாம்புகள் திரியும் வாழைத் தோப்பு.
ஆகவே டோர்ச் லைட் இரண்டும் அங்கே தேவைப்படும் பொருட்களையும் எடுத்துக்கொண்டோம். அம்மா எழும்புவதற்காக நாங்கள் காத்திருந்தோம். நான் சிறிய விசிறியொன்றால் அம்மாவின் முகத்தை வேர்க்கவிடாமல் விசுக்கியபடியிருந்தேன். அரை மணிநேரத்திற்குப் பிறகு அம்மா எழுந்து “எனக்கு பசிக்குது” என்றாள். பூட்டம்மா அழைத்துச் செல்லுங்கள் என்று உத்தரவு சொன்னாள். அம்மாவைச் சாக்கினாலும் போர்வைகள் இரண்டினாலும் போர்த்திக் கொண்டு அழைத்துச் சென்றோம். நாங்கள் புறப்பட்டதும் வாசலில் நீர்தெளித்து விளக்கு வைத்தாள் பூட்டம்மா.
எங்களுடைய குலம் துளிர்த்த இடத்தை வீரபத்திரர் வளவு என்கிறார்கள். அம்மாவின் மூதாதையர்கள் எல்லோருக்கும் அந்த வளவு பிணிதீர்க்கும் ஸ்தலம். அதற்காக இரவிலெல்லாம் அங்கே செல்வது எவராலும் முடியாத காரியம். இருட்டில் ஏதேதோ அசைவுகள், எங்கிருந்து கேட்கிறதென தெரியாத சப்தங்கள். விரிசடையாய் நின்றிருக்கும் ஆலம் விழுதுகளை பற்றியேறும் வேட்கையோடு பாம்புகள் எம்பி எம்பி நிலத்தில் விழும். ஒருநாளிரவு இராணுவத்தின் சுற்றிவளைப்பு நேரத்தில், அந்த வளவில் பதுங்கியிருந்த அண்ணா பார்த்தவொரு அனுபவத்தை என்னிடம் பகிர்ந்திருக்கிறான். ஒரு சின்னஞ்சிறு குழந்தை வளவின் நடுவே மரத்தின் கீழே நின்றபடி அழுதிருக்கிறது.
கொடுமிருளில் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு அண்ணாவோடு இருந்த போராளி யாரோ குழந்தையோடு தப்பி வந்திருக்கிறார்கள், அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென எழும்பியிருக்கிறார். ஆனால் அண்ணாவுக்கு வளவைப் பற்றித்தெரியும், அவன் வேண்டாமென மறுத்திருக்கிறான். ஆனாலும் அவர் கேட்கவில்லை. மண்ணில் ஊர்ந்து ஊர்ந்து குழந்தை அழுகுரல் கேட்கும் மரத்தடி வரை வந்திருக்கிறார். அங்கே சத்தம் மட்டும் கேட்கிறது. யாருமில்லை. அந்தப் போராளி கிடந்தபடியே அண்ணாவை அழைத்திருக்கிறார்.
அப்படியே உடலைத் திருப்பி ஊர்ந்து வா என்றிருக்கிறான் அண்ணா. ஆனால் அடுத்தகணம் அவனுக்கு முன்னால் ஒரு சின்னஞ்சிறு சிறுமி பட்டுப்பாவாடை கட்டி அந்த விழுதைப் பற்றும் நோக்கோடு மண்ணிலிருந்து எம்பிக்குதித்ததை அண்ணா தூரத்தில் இருந்தபடி பார்த்திருக்கிறான். மற்ற போராளி அங்குதான் இருந்திருக்கிறார். அவருக்கு ஏதும் தெரியவில்லை.
அக்கா டோர்ச் வெளிச்சத்தை பின்னாலும், நான் முன்னாலும் பரப்பி அம்மாவை வாழைத்தோப்பு வழியாக வளவுவுக்கு அழைத்துச் சென்றோம். அம்மா வேலியைக் கடந்து உள்ளே வரும்போதே வீரபத்திரர் பீடத்து கூரையிலிருந்து ஏதோ மண்ணில் விழுந்த சத்தம் கேட்டது. நான் டோர்ச்சை அடித்துப்பார்த்தேன். நாகம். சரியான உருப்படி என்றேன். “இதுதான் குஞ்சியாத்தையின்ர பெட்டைக்குட்டி. பொல்லாத சக்தி” என்றாள் அம்மா. திக்கில் காற்று எழுந்தது.
ஆலெழுப்பும் ஓசையே வேட்டை நாயின் உறுமல் போலவிருந்தது. அம்மாவின் தடம் விழுந்த மண்ணை எடுத்து வீரபத்திரர் பீடத்தில் வைத்து, தண்ணீரால் கழுவித் துடைத்தோம். கற்பூரம் ஏற்றி அவளும் நாமுமாக வணங்கினோம். அம்மா வீரபத்திரனே என்னைக் காப்பாத்திப் போடு என்றாள். அம்மாவின் அந்தச் சத்தமே அவள் பழைய நிலைக்குத் திரும்புகிறாள் என்று அறிவிப்பதைப் போலிருந்தது. கற்பூரம் அணையும் வரை காத்திருந்தோம். கொடியில் ஆடும் சேலைகள் போல ஆலம் விழுதுகள் காற்றில் அலைக்கழிந்தன. அம்மா தன்னுடைய கூந்தலை அவிழ்த்து மீண்டும் முடிந்து கொண்டாள். காற்றெழுந்த திகைப்பில் அணைந்தது கற்பூரம். அம்மாவை அழைத்துக் கொண்டு மீண்டும் பூட்டம்மாவின் வீட்டுக்கு நடக்கலானோம்.
“இப்ப சுகமாயிருக்கோ அம்மா” அக்கா கேட்டாள்.
“கொஞ்சம். ஆனா உடம்பெல்லாம் இரும்பேற்றி அடிச்சது மாதிரிக்களைப்பு இருக்கு. என்னில ஆரோ தோறையள் ஏவி இருக்கிறாளவே. என்னில நிக்குமே அவையளிண்ட விளையாட்டு ” என்றாள்.
நாங்கள் பூட்டம்மாவின் வீட்டை அடைந்த போது அம்மாவுக்கு எல்லாமும் அகன்றிருந்தது. பூட்டம்மா எங்களை உள்ளே வருமாறு கதவைத் திறந்தாள். அம்மாவுக்கு குடிக்க சூடான கோப்பிதண்ணி கொடுத்தாள்.
“என்னடி இப்ப சுகமாயிருக்கோ, பயந்திட்டியோ?” என்று கேட்டாள்.
என்ன நடந்திருக்குமென அவளால் ஊகிக்க முடியாதிருந்தது. “எனக்கு ஆரோ வைச்சிட்டினம் என்று நினைக்கிறேன். ஆனால் அது எனக்கு வேலை செய்யுமோ, அவையளுக்குத்தான் அது திரும்பும்” என்றாள்.
பூட்டம்மா கைகொட்டிச் சிரித்தாள். “விசரி உனக்கு வைக்கவும் இல்லை, எடுக்கவும் இல்லை. நீ வீரபத்திரரோட பீடத்தைக் கழுவும் போது அவரில உன் கால் பட்டிருக்கு, அது தெரியாமல் நீ இருந்திருக்கிறாய்” என்றாள்.
அம்மா நிலமிருந்து எழுந்தாள். ஒற்றைக்காலை அந்தரத்தில் தூக்கி கதவை உடைத்து திறந்தாள். அவள் கமலம் அத்தையின் வாழைத் தோப்பை தாண்டி வளவுக்குள் ஓடிப்போனாள். நான் அவளின் பின்னால் போக முனைந்த போது, பூட்டம்மா என்னை வழிமறித்தாள்.
அம்மா…..என்று அவள் போகும் திசையைக் காண்பித்து அழுதேன்.
“போறது உன்ர கொம்மாவில்லை. அது எங்கட காளி. அமைதியாய் இரு” என்றாள் பூட்டம்மா.