
01
உறக்கத்தில்
அழுது
விழித்து
விரல்களை
அசைத்து
முலைகளை
பற்றுகிறது.
அம்மா
கண் திறந்து
அணைத்ததும்
முட்டி
முட்டி
அருந்துகிறது
நடுநிசி
மலர்.
02
உறக்கத்தில்
புன்னகைத்து
உதடுகளைச் சுழித்து
கண்களைச் சிமிட்டி
கைவிரல்களை அசைத்து
கால்களை உதைந்து
எங்கு நிகழ்ந்தபடியிருக்கிறது
இக்குழந்தை.
03
என் ப்ரிய புதல்வ!
நேற்றைக்கு தணிந்த
சூரியனை
கூந்தலில் சூடியபடி
இன்றைக்கு
கிழக்கு வாசலில்
எழுந்து வருபவள்
உன் அன்னை.
இன்றைக்கும் ஒளிந்து
நாளைக்கும் வருவாள்
அவள்தான்
உன்
சூரியன்.