
01
வைகறையில்
உதிர்ந்த
முற்றத்து
மலரை
ஆடி அசைந்து
பழிக்கும்
கிளையின்
மீது
வந்தமர்ந்தது
வண்ணத்துப்பூச்சி
மண்ணில்
அசைந்து
காற்றில்
மிதந்து
பறக்கிறது
உதிர்ந்த
மலர்.
02
மீண்டும் மீண்டும்
ஒரேயொரு பாடலை
எங்கிருந்து அள்ளிவருகிறது
இந்தக் காற்று
புழுதியில் இழையும்
இந்த ராகத்தையும்
முள்ளுச் செடிகளில் பூக்கும்
இந்த வரிகளையும்
நினைவின் பனிக்குடத்திலிருந்து
உடைத்து எடுத்ததுதான்
என்
தொல்கதை.