
அகரமுதல்வனுக்கு! தொடர்ந்து இன்னொரு மொழிபெயர்ப்பாளர் குறித்த முழுநாள் நிகழ்வை ஆகுதி முன்னெடுக்கிற அறிவிப்பை பார்த்தேன். தமிழில் எழுதும் படைப்பாளிகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ளலாம் அல்லவா?
- பாரதி மோகன்
அன்பின் பாரதி மோகன்!
எனக்குத் தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் வழியாகவே ஏனைய மொழியின் படைப்புக்களை வாசிக்க முடியும். இந்திய மொழிகளில் தமிழில் வெளியான பெருந்தொகை மலையாள இலக்கியங்களை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டு சி.வி. இராமன்பிள்ளை எழுதி, தமிழில் பத்மநாபன் தம்பி மொழிபெயர்த்த “மார்த்தாண்ட வர்ம்மா” நூலினை வாசிக்கவுள்ளேன். அப்படித்தான் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வருகிற மொழிபெயர்ப்புக்களையும் வாசிக்கிறேன்.
ஆனால் என் துர்அதிஷ்டம் எல்லாமும் சிறந்த மொழிபெயர்ப்பாக அமைவதில்லை. தமிழில் நிகழும் அளவுக்கு வேறு எங்கேனும் இப்படியானதொரு அசட்டையான மொழிபெயர்ப்பு கலாச்சாரம் தோன்றியிருக்குமாவெனத் தெரியவில்லை. இன்றைக்குச் சூழலில் வருகிற பெருமளவிலான மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வாங்கவே பயமாகவிருக்கிறது. சில மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் அளவுக்கு தமிழும் தெரிந்திருக்கலாம் என்பதே என் கவலை.
ஆனால் ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்புலகின் மாஸ்டர் என்றால் மிகையில்லை. எத்தனை எத்தனை கடுமையான வடிவங்கள் கொண்ட புத்தகங்களையும் அநாயசமாக தமிழுக்கு அழைத்து வந்தவர் அவர். நான் மதிக்கத்தக்க இன்னொரு மொழிபெயர்ப்பாளர் அகிலன் எத்திராஜ். “நேர நெறிமுறை நிலையம்” என்ற அவரது மொழிபெயர்ப்பில் இருந்து “பசியாறும் மேஜையில் வரை” எல்லாமும் மிக முக்கியமான புத்தகங்கள். அவரையும் கொண்டாடவேண்டும். ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த விஜய நகரம் வரைக்கும் சிறந்தவைகள் தான். ஆகுதி ஒருவரை கொண்டாட விரும்புவதன் பின்னணியில் முதன்மையாக இருப்பது அவர்களின் பங்களிப்பில் சிறப்பு இருக்கவேண்டும். இதுவரை இல்லாதவொரு உயரத்தை, பங்களிப்பை தமது துறையில் அவர்கள் ஆற்றியிருக்கவேண்டும்.
நீங்கள் கடந்த இரண்டு வருடங்களாகவே இலக்கிய உலகிற்குள் வந்திருப்பவர் என்று உங்களின் கேள்வி மூலம் அறிய முடிகிறது. ஆகுதி இதற்கு முன்பாக நிகழ்த்திய நிகழச்சிகளை தேடிப்பாருங்கள்.
நன்றி.