
அன்புள்ள அகரமுதல்வனுக்கு!
நானொரு கல்லூரி மாணவன். திருவாசகம் குறித்து உங்கள் இணையதளத்தில் எழுதப்பட்டிருந்ததை வாசித்தேன். நான் திருவாசகத்தில் புயங்கன் ஆள்வான் புகழினை வாசிக்க உங்கள் ஆலோசனைகள் என்ன? உங்களை போன்றே இலக்கியமே வாழ்க்கை என வாழவே விழைகிறேன். நீங்கள் என் ஆசான்களில் ஒருவர். நன்றி
அன்புடன்
ச.பச்சையப்பன் பிரபு
அன்பின் பச்சையைப்பன் பிரபுவுக்கு!
உங்களின் கடிதம் ஒருவகையில் மனமகிழ்ச்சியைத் தருகிறது. திருவாசகத்தை வாசிக்க வேண்டுமென உளத்துள் விருப்பம் தோன்றுவதே இறையருள். அப்படித்தான் மொழி ஒருவரை ஆசீர்வதிக்கும். “வளர்கின்ற நின் கருணைக் கை” என்ற நீத்தல் விண்ணப்ப பாடலைப் போல இறையினதும், மொழியினதும் கருணைக் கரம் உங்களைப் பற்றிக்கொண்டு விட்டதென எண்ணுகிறேன். நீங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால் நாளொன்றுக்கு தலா இரண்டு பாடல்களென வாசிக்கலாம்.
இதுவரைக்கும் வெளியான திருவாசக பொழிப்புரைகளில் ஆரம்ப நிலை வாசகருக்கும், பக்தருக்கும் புலப்படும் வகையில் பதிப்பிக்கப்பட்ட “திருவாசகம் – எல்லோருக்குமான எளிய உரை” மரியாதைக்குரிய முனைவர். ப. சரவணன் அவர்களின் புத்தகம்தான். சந்தியா பதிப்பகம் சிறப்புற வெளியிட்டிருக்கும் இந்த நூலைவிடவும் சிறந்த வழிகாட்டி இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் இந்த புத்தகத்தினை வாங்கி ஒவ்வொரு பாடல்களாக வாசித்து வரலாம்.
இன்னொன்று தொடர்ந்து திருவாசக வாசிப்புக்காக புலனத்தின் வழியாக இயங்கும் “திருவாசகம் என்னும் தேன்” குழுவினரோடு இணைந்து கொள்ளலாம். அந்தக் குழுவின் ஸ்தாபகரான அன்புக்குரிய திருமிகு உ. முத்துமாணிக்கம் அவர்கள் திருவாசகத்தை நவீன இலக்கிய உரையாடலைப் போல, தொடர்ந்து வாசித்தும், விவாதித்தும் வருகிறார். அவரோடு இணைந்தும் நீங்கள் திருவாசக வாசிப்பில் பங்கெடுக்கலாம்.
எல்லாவற்றையும் விட மிகமுக்கியமானது. நீங்கள் பக்தி என்கிற ஆற்றல் உடையவராக இருந்தால் மட்டுமே அதில் ஈடுபடுங்கள். “அவன் அருளாலே அவன் தாள் வணங்குவது”தான் பக்தி. உங்களுக்கு அதில் ஏற்பு இருப்பின் முன்நகருங்கள். கீதம் இனிய குயிலே என்று தொடங்கும் “குயில் பத்து” வரிசையின் முதல் பாடலை வாசியுங்கள்.
“எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில், பாதாளம் ஏழினுக்கு அப்பால் சோதி மணிமுடி சொல்லில், சொல்இறந்து நின்ற தொன்மை” என்று பாடுகிறார் மணிவாசகர். நீங்கள் சொல் இறந்து நின்ற தொன்மை பொருந்தியவரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியத்தை வாசிக்க தொடங்குகிறீர்கள் என்ற விழிப்பும், பெருமையும் கொண்டு தொடங்குங்கள். மங்கலங்கள் பெருகட்டும்!
நன்றி.