அகரமுதல்வனுக்கு! 

ஆகுதியின் பல நிகழ்வுகளுக்கு வந்திருக்கிறேன். ஒருநாள் நிகழ்வில் எம். கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் மட்டும் வரவில்லை. மீண்டும் மீண்டும் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களைத்தான் கொண்டாடவேண்டுமா? இந்தத் தடவையும் மொழிபெயர்ப்பாளரா?

  • ஷபி 

 

வணக்கம் ஷபி!

ஆகுதியின் ஒருநாள் நிகழ்வுகள் பங்களிப்புக்களுக்கானவையே அன்றி எழுத்து ஊக்கத்திற்கானவை அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் படைப்பாளரின் அதுவரையிலான பங்களிப்புக்களை வாசகத்திரளுக்கு ஞாபகமுட்டுவதும், அறிமுகப்படுத்துவதுமே அதனுடைய முதல் இலக்கு. மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா அவர்களுடைய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சிலவற்றை பகிர எண்ணுகிறேன். 

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேலாக கேரளப்பண்பாட்டை தமிழ் வாசகர்களுக்கு தனது மொழிபெயர்ப்பு பங்களிப்பின் மூலம் கையளித்தவர் நிர்மால்யா. அவருடைய மொழிபெயர்ப்பு பணிகளை நினைத்தால் ஒருகணம் தலைவணங்கித்தான் எழவேண்டும். நான் அவரைக் கொண்டாடுவதன் மூலமாக இன்றைக்கு இலக்கியத்திற்குள் நுழைகிற வாசர்களுக்கு நிர்மால்யா என்பவரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். அவர் தமிழுக்கு உவந்தளித்த இலக்கியங்களின் வழியாகவே மலையாள இலக்கியத்தின் பண்பை ஒரு தமிழ் வாசகரால் தொகுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று வாசிப்புக்குள் நுழையும் பலரும் தங்கள் ஸ்கிரோலில் டைம்லைன் காண்பிக்கும் எழுத்தாளர்களையே முதலும் இறுதியுமாக வாசிக்கிறார்கள். எழுத்தாளர் என்றால் எழுதுவதை விடவும், முகநூலில் இருக்கவேண்டுமென கருத்துச் சொல்லும் வாசகர்கள் இன்று இருக்கிறார்கள். இந்தச் சூழலிலேயே நிர்மால்யா அவர்களுக்கான நிகழ்வினை ஆகுதி முன்னெடுத்தது. நிர்மால்யா அந்த நிகழ்வினை மறுக்க கூடுமென்பதால், எம். கோபாலகிருஷ்ணன் மூலமாக அதனைச் சம்மதிக்க வைத்தேன்.

முந்தைய தலைமுறை படைப்பாளிகள் பலருக்குமிருக்கிற பிரச்சனை “என்னது எனக்கு நிகழ்வா, வேண்டாம்” என்கிறார்கள். நினைத்துப் பாருங்களேன் முப்பது வருஷம் என்பது என்னுடைய வயது. அவ்வளவு ஆண்டுகள் உழைத்த ஒருவர் தனக்கொரு நிகழ்வு நடைபெறுகிறது என்றதும் வேண்டாம் என்கிறார். ஏனெனில் அவர்கள் இந்தப் பாராட்டையோ, கொண்டாட்டத்தையோ எண்ணி பங்களிக்க வந்தவர்கள் அல்ல. தொடர்ந்து மொழியில் ஏதேனும் ஒரு சிறந்த பணியைச் செய்வதை ஒரு வேள்வியாகக் கொண்டிருக்கிறார்கள். நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பில் வெளியான தட்டகம் நாவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறுபதிப்புக் கண்டிருக்கிறது. இன்னொரு நூலும் இருக்கிறது “மனிதனுக்கு ஒரு முன்னுரை” அந்த நூலினையும் வாசகர்கள் படிப்பதற்கு பேரவா கொண்டிருக்கிறார்கள்.

மொழிபெயர்ப்பாளர் என்றால் எழுத்தாளரைவிடவும் தகுதி குறைந்தவர் என்று உங்களைப் போல சிலர் எண்ணலாம். எனக்கு அப்படியான தகுதி பேதங்கள் இதில் இல்லை. இருவரும் வேறு வேறு நிலையிலிருந்து மொழிக்கும் இலக்கியத்திற்கும் தங்களை அளிப்பவர்கள். தமிழ்ச் சிறுகதையின் பிதாமகனான புதுமைப்பித்தன் தொடக்கம் பல எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்புக்களை செய்திருக்கிறார்கள். என் நேசத்திற்குரிய தி.ஜானகிராமன் மொழிபெயர்த்த அன்னை என்கிற நாவலை நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள். ஏனெனில் கிரேசியா டெலடாவும், தி. ஜானகிராமனும் முகநூலில் இல்லையல்லவா. 

இன்றைக்கு வெவ்வேறு பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகி வருகிற படைப்புக்களை வாசித்து வருகிறேன். பலரும் மொழிபெயர்ப்பு துறைக்கு புதியவர்கள். தங்களுடைய வாசிப்பின் விருப்பு வெறுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மொழிபெயர்ப்பைச் செய்வதை விடவும் அதிகமாக பதிப்பகங்களின் விருப்பத்திற்கே நூல்களை மொழிபெயர்க்கிறார்கள். அப்படியான செயலிலும் கூட பலரும் சிறப்புற பணியை மேற்கொள்கிறார்கள். சமீபத்தில் நான் வாசித்து இசபெல் அயேந்தே அவர்களின் “கடலின் நீண்ட இதழ்” நாவல் வியப்பளித்தது. ஸ்பானிய மொழியிலிருந்து சுபஸ்ரீ பீமன் மொழிபெயர்த்திருந்தார். ஆச்சரியமான வாசிப்பு ஒழுக்கு கொண்ட மொழியாக்கம். என்னுடைய பரிந்துரையின் பேரிலேயே சில பத்து பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும். பத்து புத்தகங்களை நானே வாங்கி பரிசளித்திருக்கிறேன்.

ஒரு வேலையாக மொழிபெயர்ப்பைச் செய்பவர்களின் ஆக்கங்களை நான் வாசிப்பதில்லை. பல தடவைகள் கசப்பான அனுபவங்களே வாசிப்பில் எஞ்சின. பிற மொழிகளின் பல வணிக எழுத்துக்களை மொழியாக்கம் செய்து இங்கே கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்று எண்ணுமளவுக்கு அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சில பதிப்பகங்கள் அவற்றை தமது பெருமையாக எண்ணி முன் வரிசையில் வைக்கவும் செய்கின்றன. இன்னும் சிலர் இரண்டு புத்தகங்களை மொழிபெயர்த்து விட்டு இந்த தமிழ்ச் சமூகம் தங்களை கவனிக்க மறுத்துவிட்டதென்று பிலாக்கணம் வைக்கிறார்கள்.

இந்த ஆண்டு தனது முதல் நூலினை வெளியிட்ட எழுத்தாளர் ஒருவர், தேநீர் கடையில் வைத்து அலுத்துக் கொள்கிறார். “இந்தச் சமூகத்திற்கு எழுதத்தான் வேண்டுமா என்று யோசிக்கிறேன். கண்காட்சியில் ஏழு புத்தகங்கள் தான் விற்றுள்ளன” என்று பொங்குகிறார். அந்தப் புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். அது நூறு பக்கத்தை நிரப்பிய தட்டச்சு குப்பை. ஆனால் அவர் சலித்துக் கொள்வதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இவர்களுக்கு அதிர்ச்சி அடைந்தால் என் மொத்த வாழ்வையும் அதிர்ச்சிக்கு தானம் பண்ண வேண்டியதாகிவிடும்.

இங்கே எல்லாமும் அவசர கதியில் கிடைக்கவேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்ப, துரித உணவகங்களைப் போல துரித அங்கீகாரங்களை வழங்கும் இலக்கிய அமைப்புக்களும் நிறையவே உள்ளன. ஆனால் ஆகுதி அப்படியான தீச்செயலை செய்யாது. அது செய்ய விழைவது ஏற்கனவே நிகழ்ந்திருக்கும் அற்புதங்களையும், அதனை நிகழ்த்தியவர்களையும் கொண்டாடி, அதன் வழியாக நாம் வந்தடைந்திருக்கும் தூரத்தை உணர்வதைத்தான். இன்னொரு வகையில் அது நன்றி செலுத்த விரும்புகிறது. 

இன்றைக்கு எம். எஸ் மாதிரியான ஒரு மொழிபெயர்ப்பு முன்னோடி இருந்திருந்தால் அவரை நான் சிரசில் ஏற்றிக் கொண்டாடியிருப்பேன். நான் வாசிப்பின் வழியாகவே இவர்களைக் கண்டடைகிறேன். பண்டமாற்று மாதிரி எனக்கு நீயொரு விருப்பக்குறியீடு வழங்கு உனக்கு ஒன்று அளிக்கிறேன் என்ற எந்த கீழ்மையான நிபந்தனை ஒப்பந்தங்கள் இல்லாத இலக்கிய வெளியொன்று என் அந்தரங்கத்தில் இருக்கிறது. அங்குதான் இவர்களை சந்திக்க இயலும். அப்படித்தான் ஆர். சிவகுமார் அவர்களையும் சந்தித்தேன்.

நீங்கள் வாய்ப்பிருந்தால் பெப்ரவரி மாதம் இருபத்தியிரண்டாம் திகதி இந்த நிகழ்விற்கு வாருங்கள். அடுத்த முறையும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு நடத்தவேண்டுமென்று சொல்லிவிட்டுச் செல்வீர்கள். வருக வருக.

Loading
Back To Top