
கிளை
அசைக்கும்
பறவை
சிறகை
உதிர்க்க
காற்றின்
ரூபம்
மலர்கிறது.
***
கண்ணீர் ததும்பும்
பாடலோடு
நடைமேடை
அந்தகன்.
நகரத்தின் புழுக்கத்தில்
பசியோடு
ஒலிக்கின்றன
வாத்யங்கள்.
சில்லறைகள்
கணீரென,
ராகம் குழம்பியும்
தாளம் சிதறியும்
அவனது
கண்ணீர் ததும்பும்
பாடல்
முடியாது நீள்கிறது
நடைமேடையில்.
***
என்னுடைய ஜன்னல்
எப்போதும் திறந்திருக்கிறது.
இரவுகளில்
பகல்களில்
எப்போதும்
திறந்திருக்கும்
ஜன்னலில்
இப்போது தான்
வந்தமர்கிறது
மகரந்த
ஈரத்தோடு
வண்ணத்துப்பூச்சி.