தமிழ் விக்கி – பெரியசாமி தூரன் விருது – 2023 விழாவில் நாதஸ்வர தவில் இசை நிகழ்வு நடைபெறவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அறிவியக்கப் பண்பாட்டுத் தளத்தில் தீவிரமாக இயங்குபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது நிகழ்வில் மங்கல இசை வாத்யங்களின் சேர்க்கை ஒரு புதிய பண்பாடாகத் தொடரவேண்டும். இலக்கிய நிகழ்வுகளில் எப்போதும் ஒருவகையான இறுக்கம் கூடி வருவது எதனால் என்று அறியேன். அந்த இறுக்கம் எதற்கும் எதிர்வினையாற்றாமல் கூட்டம் முடியும் வரை அமர்ந்திருப்பதற்கு சிலருக்கு உதவக்கூடும். ஆனால் சில நிகழ்வுகளில் ஒட்டுமொத்த கூட்டத்தினரும் இறுக்கமாக அமர்ந்திருப்பது, எங்கிருந்து பெற்ற அனுபவம் என்றுதான் தெரியவில்லை.

“தீவிர இலக்கியவாதிகளுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்க வேண்டுமப்பா” என்று சிலவேளைகளில் நக்கலாகச் சொல்கிறவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். அதற்காக வாய்போன திசையெல்லாம் வார்த்தைகளைத் தூவும் இலக்கியப் பெறுமதி அறியாதவர்களை  அழைத்து வந்து கூட்டத்தின் இறுக்கத்தை தளர்த்தவா முடியும்? இறுக்கமாக இருந்தாலும் இலக்கியம் பேசப்பட்டால் போதுமென்று நினைக்கும் தரப்பு என்னுடையது.  ஆகுதி ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் அதுபோன்ற பிடிவாதங்களை பேணுகிறேன். ஆனால் இந்த இறுக்கத்தை தளர்த்த உருப்படியான சேர்க்கைகள் வேண்டுமெனவும் விரும்புகிறேன்.

நாதஸ்வர தவில் இசை அறிவிப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பொறாமையாக இருந்தது.  ஆகுதி நடத்திய விழாவொன்றிற்காக இதுபோன்றதொரு  முன்னெடுப்பை விருப்பத்துடன் செய்ய எண்ணினேன். பிறகு அது கைகூடாமல் போயிற்று.  எனக்கும் நாதஸ்வர தவில் இசைக்கும் சிறுவயது முதலே பெரிய பிணைப்பு இருக்கிறது. ஈழத்து கோவில் திருவிழாக்களில், மங்கலச் சடங்குகளில் எப்போதும் நாதஸ்வர – தவில் இசைக்கு முதன்மை இடம்.  என்னுடைய ஆச்சிக்கு கலை (அருள்) வந்து ஆடுகிற போது தவில் வித்துவான்களிடமும் ஒருவகையான ஆட்டம் பிறக்கும். அவர்கள் தங்களது இசையால் தெய்வத்தை ஆடச்செய்யும் வல்லபர்கள்.

அளவெட்டி, இணுவில், தாவடி, மாவிட்டபுரம், கைதடி, சாவகச்சேரி என்று யாழ்ப்பாணத்துக்கு  தவில் நாதஸ்வர இசை மரபுகள் இருக்கின்றன. தவில் மேதைகளான வி.தட்சணாமூர்த்தியையும் அவர் மரபில் வந்த வி. புண்ணியமூர்த்தியையும் நாதஸ்வர மேதைகளான பஞ்சமூர்த்தி, கானமூர்த்தி, அளவெட்டி என்.கே பத்மநாதனையும் இன்று உலகு முழுதையும் தங்கள் வித்துவத்தால் ஆச்சரியப்பட வைக்கும் குமரன், ஈழநல்லூர் பாலமுருகன் ஆகியோரையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  ஈழத்துக்கும் – தமிழ்நாட்டிற்கும் இருக்கக்கூடிய பிணைப்புக்களில் இசை மரபினால் உருவான உறவு நிலை ஒரு கலை வரலாறு என்பதை அரிதிலும்  அரிதானவர்கள் அறிவார்கள்.

என். கே. பத்மநாதன்

சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் நிகழ்ந்த  விழாவொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தவில் நாதஸ்வர வாத்யக் கலைஞர்கள் அழைக்கப்படவில்லை. அவரிடம் ஏன் என்று கேட்ட போது, தவில் எல்லாம் பழைய பேஷன் என்றார். எனக்கு ரத்தக் கொதிப்பு வந்தது. இந்த மடையரிடம் மல்லுக்கட்டி என்ன ஆகப்போகிறது என்று விட்டுவிட்டேன். நமக்கென இருக்கும் உன்னதமான மரபுகளை எல்லாம் “பழைய பேஷன்” என்று கைவிட்ட தலைமுறையை நம்மரபுகள் தாயுள்ளம் கொண்டு மன்னிப்பருள வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

பெரிய சாமி தூரன் எழுதிய கீர்த்தனைகளை இரண்டு மணிநேரம் வித்துவான்கள் வாசிக்க இருக்கிறார்கள். இந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே விருது விழாவிற்கு செல்ல வேண்டும். நாதஸ்வர தவில் இசையைக் கேட்டு பழக்கமில்லாதவர்கள், இதனை தங்களின் முதல் அனுபவமாக கொள்வார்களென்றால் கொடுத்து வைத்தவர்கள்.

கோயில் திருவிழாக்களில் வாசிக்கப்படும் மல்லாரி இசை உருப்படியை விளங்கிக் கொள்ள, மனம் லயிக்க ஒருவர் இறைபக்தியோடு இருக்கவேண்டும். ஏனெனில் மல்லாரிகளுக்கு இடையில் வித்தியாசத்தைக் கண்டு கோயிலுக்குள் இப்போது என்ன கிரியை நடக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. தெய்வம் வீதியுலா சென்று திரும்பி அலங்காரம் களைந்து பள்ளியறைக்குச் செல்லும் முன் வாசிக்கப்படும் ஊஞ்சல் பாட்டைக் கேட்டு, நெக்குருகி கண்ணீர் மல்கும் சிவனடியாராய்  நின்ற எனது சுவட்டை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன்.

நாதஸ்வர வித்துவான்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பவர்கள். அவர்களுடைய உடல் மொழியிலும் ஒரு சுருதி  இருக்கும். நனைந்த சீவாளியை கழற்றி வேறொரு சீவாளியை தெரிவு செய்யும் சில நிமிடங்களில் எத்தனையோ நுணுக்கம் பார்ப்பார்கள். அணைசு வழியே நீர்ப்பாம்பாக கீழிறங்கும் ஸ்வரநீரைக் கண்டு உள்ளம் பெருகியவன் நான். அவர்கள் மேனியில் வியர்வையாய் வழிந்தோடும் ஜவ்வாது வாசனைக்கு எத்தனையோ நாத அசைவுகள் இருக்கும்.

ஆனால் தவில் வித்துவான்கள் வேறு விதமானவர்கள். சாகசம் அறிந்தவர்கள். தங்களது புலமை பொருந்திய வித்துவங்களால் கூடியிருக்கும் பக்தர்களை ரசிக்க செய்பவர்கள். மங்கலம் என்றால் மங்கலம். உக்கிரம் என்றால் உக்கிரம். துள்ளல் என்றால் துள்ளல். அமைதி என்றால் அமைதி. என்ன வேண்டும் உன் தெய்வத்துக்கு என்று கேட்பவர்கள். வெளியுலாவிற்கு சுவாமியை அழைத்துச் சென்று வடக்கு வீதியில் நின்று “மேளச் சமா ” செய்யும் இரவுகளில் தீவட்டி ஏந்திநின்று பார்த்ததில் வாழ்வுக்கு சுகம் சேர்ந்தது. சாமி வந்து ஆடுபவர்களுக்கு தவில்காரர்கள் தங்களது இசையால் கட்டளை இடுவார்கள். அவர்களுக்கு தெய்வம் அந்த உரிமையை வழங்கியிருக்கிறது என்பாள் ஆச்சி.

பெரியசாமி தூரன் விருது விழாவில் பங்கேற்கும் நாதஸ்வர தவில் கலைஞர்களை பணிந்து மகிழ்கிறேன். தவில் வித்துவான் கலைமாமணி தலைச்சங்காடு டி. எம். ராமநாதன் அவர்களின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அவர் உலகறிந்த வித்துவான். அவருடைய சொந்தக்காரர்கள் எனக்கு நெருக்கமானவர்கள்.  உண்மையில் இது போன்றதொரு பண்பாட்டு முன்னெடுப்பு  அவர்களுடைய அனுபவத்திலும் புதிதாகவே இருக்குமென நினைக்கிறேன்.

கலைமாமணி தலைச்சங்காடு டி. எம். ராமநாதன்

ஏனென்றால் ஒரே மாதிரியான கீர்த்தனைகளை, திரைப்பாடல்களை,  பக்திப்பாடல்களை விடுத்து இந்தப் புதிய வெளியில் பிரவேசம் கொள்கிறார்கள். தமிழுக்கு தொண்டாற்றிய ஒருவரின் எழுத்துக்களை இசைக்கிறோம் என்கிற முதல் பெருமையே அவர்களை ஆசிர்வதிக்கும்.

பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கும் இலக்கிய அமைப்பு விஷ்ணுபுரம் என்றால் மிகையில்லை. செயல் ஒன்றே இலட்சியம் என்பது  விஷ்ணுபுரம் அமைப்பினரின் இயங்குசக்தி.  அறிவியக்கப் பரப்பில் ஆய்வுகள் மூலமாக பணிபுரியும் எழுத்தாளர்களை கெளரவிக்கிறார்கள். இந்தச் செயலின் மூலம் பெருந்திரளுக்கு எழுத்தாளர்கள் தெரிய வருகிறார்கள். இந்த ஆண்டு விருதினைப் பெறும் இலக்கிய ஆவணப்பதிவாளர் மு. இளங்கோவன், ஆய்வாளர் சிவசங்கர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

Loading
Back To Top