
நேற்றைக்கு தம்பியொருவர் அழைத்து “அண்ணே ஒரு சிற்றிதழ் நடத்தலாமென்று முடிவு செய்திருக்கிறேன். அதற்கு நீங்கள் கதை தரவேண்டும்” என்று அன்புக் கட்டளை இட்டார். அவர் பேசி முடித்ததற்கு பிறகு “இப்போது எங்கே இருந்து பேசுகிறீர் ” என்று கேட்டேன். தம்பி குரலைச் சரிப்படுத்திக் கொண்டு “பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கிறேன், ஏன்” என்று கேட்டார். “உங்கள் சிற்றிதழுக்கு என்ன பெயர் முடிவு செய்திருக்கிறாய்” என்று கேட்டேன். அவன் “காற்று” என்றான். “சரி நாளை நேரில் வா சந்திப்போம்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தேன்.
அவன் தனது முடிவில் உறுதியாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு இன்று என்னை வந்து சந்தித்தான். ஒரு தேநீர்க் கடையில் அமர்ந்திருந்து பேசினோம். இதற்கு முன்பு தமிழில் வெளியான சிற்றிதழ்களை அறிந்திருக்கிறாயா? என்று கேட்டேன். “ஏன் அவற்றையெல்லாம் அறியவேண்டும், அவனது காற்று வந்து தமிழ் இலக்கியத்தையே புரட்டப்போகிறது” என கல்லாக அமர்ந்திருந்தான். அவனைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லோருக்கும் வருகிற ஆர்வம்தான் இவனுக்கு கொஞ்சம் தீவிரமாகி இருக்கிறது என்று விளங்கிக்கொண்டேன்.
இன்றைக்கு எல்லாமும் சுலபமாகி விட்டது. சமீபத்தில் ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கினார், “ஜெயமோகன் எழுதின அந்த நாவல் மாதிரி ஒரு நாவல உங்களால் தான் எழுதமுடியும். சீக்கிரமாக எழுதுங்கள்” என்பது வரை என் சகிப்புத்தன்மை பலத்தோடு இருந்தது. அடுத்து அவர் உதிர்த்தது தான் என்னைக் களேபரம் ஆக்கியது. “என்ன அதிகமா யோசிக்கிறீங்க, சும்மா நாவல் தானே எழுதுங்க” என்றார். இதுபோலவே தம்பியையும் யாரோ சிற்றிதழ் – இடை நிலை இதழ் என்று ஓதி விட்டிருக்கிறார்கள். இங்கே யாவும் சுலபமென்று அசட்டுப் போதனைகளை அள்ளியெறிய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. அவர்களிடமிருந்து விலகியிருப்பதே நமக்கு நாம் செய்யும் புண்ணியம்.
சிற்றிதழ் தம்பிக்கு சில விஷயங்களை எடுத்துக் கூறினேன். ஆனபோதிலும் அவர் உடன்படுவதாயில்லை. செப்டம்பர் மாதத்தில் காற்று வெளியாகும் என்று மீண்டும் மீண்டும் கூறினார். அவர் படைப்புக்காக பேசிய படைப்பாளிகளின் பெயரைச் சொன்னார். அவர்கள் எவரையும் நான் அறியேன். என்னுடைய நவீன இலக்கிய வாசிப்பின் வெளிக்குள் அவர்களை இன்னும் நான் அடையவில்லை. என்னுடைய வாசிப்புக் கர்வத்தின் மீது நானே அவமானத்தின் சவுக்குகளை வீசினேன். இவர்களை அறியாத வாசகனா நானென்று உள்ளத்துள் அழுதேன். அந்தத் தம்பி கொஞ்சம் கருணையோடு நடந்து கொண்டிருக்கலாம் அந்தப் படைப்பாளிகளின் கவிதைகளை வாசித்துக் காண்பித்தான். பூரட்டாதி நட்சத்திரதுக்கு சந்திராஷ்டமம் வந்தால் இப்படித்தான் என்னை நோகடிக்கும். ஒருவழியாக கவிதைகளை வாசித்து முடித்து இந்தக் கவிதையெல்லாம் பேஸ்புக்கில் பெரிய வரவேற்பை பெற்றவை என்றான். உண்மைதான் பேஸ்புக்கில் வரவேற்பு பெற்றவை என்பது இலக்கியத் தகுதியாகி வருடங்கள் ஆகிவிட்டன.
உங்களுடைய காற்று வரட்டும், ஆனால் அதனை சிற்றிதழ் என்று அழையாதீர்கள், வேறு பெயர் ஒன்றை கண்டுபிடிக்கலாம் என்றேன். அவன் ஒத்துவருவதாயில்லை. கையில் இரண்டு மூன்று இதழ்களை எடுத்து வந்திருந்தான். அவை அளவில் சிறிய வணிக இதழ்கள். அதில் ஒன்றைக் காண்பித்து இந்தளவு சின்னதாய் இருக்கும் இதழுக்கு, சிற்றிதழ் என்று பெயர் சூட்டாமல் பெரிய இதழ் என்று அழைக்க நான் என்ன பைத்தியக்காரனா என்று கேட்டார். எதுவும் பேசவில்லை. அந்தத் தம்பியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கு வெளியாகும் இலக்கிய இணைய இதழ்கள் பல. அவற்றுள் இலக்கியத்தில் பாதிப்பைச் செலுத்துகிற இணைய இதழ்கள் விரல்விட்டு எண்ணிடக்கூடியவைதான். எந்த மெனக்கடல்களும் இல்லாமலல் படைப்பாளிகள் அனுப்பும் ஆக்கங்களை பதிவேற்றம் செய்வதே இணைய இதழ்களின் பணியென்று சிலர் கருதியிருக்கூடும். உண்மையில் இலக்கிய இதழ் என்றால் அதற்கென்று ஒரு தனித்துவ செயற்பாட்டு அடையாளம் வேண்டும். அதில் வெளியாகும் படைப்புக்களில் ஒரு எழுத்துமுறை திரண்டு வந்திருக்க வேண்டும். நவீன இலக்கியத்தின் சிற்றிதழ் மரபு அறிந்தவர்களுக்கு நான் சொல்லவருவது எளிதில் விளங்கும்.
எழுத்து, பிரக்ஞை ,கசடதபற, கொல்லிப்பாவை, லயம், முன்றில், அட்சரம், சொல்புதிது, இனி, கல்குதிரை, தமிழினி, புதுயுகம் பிறக்கிறது, கணையாழி, உயிர் எழுத்து, உயிர்மை, காலச்சுவடு,தீராநதி என்று எழுத எழுத பெருகிக் கொண்டே இருக்கும் இந்த மரபுகள் தங்களுடைய எழுத்துமுறையை ஓரளவுக்கு நிலை நிறுத்தின. படைப்புக்கள் தேர்வுக்கு உள்ளாகி ஏற்கவும் மறுக்கவும் செய்யப்பட்டன. ஒரு படைப்பாளி தனது படைப்பு வெளியாகும் நாளுக்காக தவமிருந்தான். அது வெறுமென வெளியாவது என்பதல்ல. தன்னை ஒரு மரபு ஏற்றுக்கொண்டது என்று உள்ளூரக் கொண்டாடுவதற்காகவும் தான்.
இன்றைக்கு அது போன்ற எந்தப் பண்பாடும் அவ்வளவு தீவிரமாக இல்லை. இணைய இதழ்களுக்கு இத்தனை கதைகள், மொழியாக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று ஒரு கணக்கிருக்கிறது. அதனை வெற்றிடமின்றி முழுமைப்படுத்தி மாதம் மாதம் வெளியிடுகிறார்கள். ஆனால் அரிதிலும் அரிதாக சில இணைய இதழ்கள் மட்டுமே தங்களின் இலக்கிய அணுகுமுறையை, தரத்தை எந்த சமரசமும் இன்றி செய்து வருகிறார்கள். அவர்களைக் காலம் கொண்டாடும்.
அந்தத் தம்பிக்கு இந்த மரபுகளை அறிய விருப்பமில்லை. இலக்கியம் ஒரு அஞ்சலோட்டம் எனும் பேருண்மையை ஏற்க மறுக்கிறார். ஒருவகையில் சிற்றிதழ் என்பது படைப்பாளிகளின் ரத்தத்தால் அச்சிடப்படும் உன்னதமான கனவு என்றேன்.
சிற்றிதழ் தம்பி கொஞ்சம் கதி கலங்கி என்ன என்று கேட்டான்.
நீங்கள் சிற்றிதழ் என்று நினைப்பது சிறிய அளவிலான இதழே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் உண்மையில் சிற்றிதழ் ஒன்றை நீங்கள் நடத்த விரும்பினால் நவீன இலக்கியத்தில் உங்களுடைய வாசிப்பு, அதனுடனான பிணைப்பு என்பவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் கவிதைகள் என்று வாசித்த ஒன்றைக் கூட இவை கவிதை என்ற இலக்கியத்தில் வராது என்று கண்டுபிடிக்கும் தருணம் வரை சிற்றிதழ் கனவை விட்டொழியுங்கள் என்றேன். நான் இவ்வளவு காட்டமாக சொல்லியும் அந்தத் தம்பி இப்படி அந்த உரையாடலை முடித்துக் கொண்டான்.
“நீங்கள் ஊக்குவிக்க மறுக்கிறீர்கள். உங்களுடனான அடுத்த சந்திப்பில் எனது கையில் “காற்று” சிற்றிதழ் இருக்கும். அதனை வைத்துக் கொண்டு நாமிருவரும் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். அதனை முகநூலில் பதிவேற்றம் செய்தால் எனக்கும் காற்றுக்கும் ஒரு இலக்கிய வெளிச்சம் கிடைக்கும். உங்களுடைய பங்களிப்பாக இது மட்டுமே போதும். நன்றி” என்றான்.
தேனீர் குடித்தும் கசந்தபடி விடைபெற்றேன்.