லோகமாதேவியின் கட்டுரைகளையும் கடிதங்களையும் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வாசித்திருக்கிறேன். இவ்வளவு உற்சாகமாக எழுதிக்கொண்டிருப்பவர் இலக்கிய வாசிப்பை மட்டுமே தனது வேலையாகக் கொண்டிருக்கலாமென்று கருதினேன். பின்னர் பெரியசாமி தூரன் விருது விழா – 2022 ல்  அமர்வின் விருந்தினராக இருந்தார். அவரிடம் தாவரவியல் சார்ந்து சிறந்ததொரு உரையாடல் நிகழ்ந்தது. அவருடைய கள அனுபவங்கள் வியப்பாகவே இருந்தன. அவரிடமிருந்து வந்த பதில்கள், கல்வித்துறையில் இருப்பவர்களின் ஆயத்தமான பதில்களைப் போல அல்ல. நிலத்தை அறிந்து தலைமுறைக்கு புகட்டுகிற ஒரு பொறுப்பின் குரலாகப் பேசினார். ஒருவகையில் மனிதர்கள்  தாவரங்களோடு பாராட்ட வேண்டிய  எல்லையற்ற பொறுப்பை அரங்கத்தில் உள்ளவர்களுக்கு உணர்த்தினார். அன்று நான் அறிமுகமாகிக் கொள்ளவில்லை.

பின்னர் அதே ஆண்டில் நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்து பேச வாய்ப்புக் கிடைத்தது.  அவருடைய  “அதழ்” https://logamadevi.in/ இணையத்தளத்தில் துறைசார்ந்த கட்டுரைகளை வாசித்தேன். கவனிக்கப்படவேண்டிய ஆளுமை. அதழ் இணையத்தில் அவர் எழுதிய மாதுளை என்ற கட்டுரையை அதற்கான சான்றாக முன்வைக்க முடியும். கல்விப்புலத்தில் உள்ளவர்களின் வறட்சியான மொழியோ, கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடும் பாவனையான தகவற்பெருக்கோ இல்லாத கச்சிதமான கட்டுரைகளை எழுதுகிறார். அவரிடம் இதனைக் கூறும் போதெல்லாம் தன்னடக்கமாக பதில் அளிப்பார். லோகமாதேவியின் துறைசார்ந்த கட்டுரைகளுக்கும் இலக்கிய அனுபவஞானக் கட்டுரைகளுக்கும் மொழியளவில் வித்தியாசமில்லை. கூறல் முறையில் சில எளிமைகளைப் பேணுகிறார். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய உலகுக்கு கிடைத்த ஒரு புதிய சக்தியாக லோகமாதேவி புனைவுகளை எழுதவேண்டும். இப்போது அவரின் கட்டுரைகளின் ஒரு தொகுதியை விஷ்ணுபுரம் பதிப்பகம் “ஸாகே” என்ற தலைப்பில் வெளியீடு செய்திருக்கிறது.

சமீபத்தில் கோவை புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்த போழ்து பொள்ளாச்சியிலிருக்கும் லோகமாதேவியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  கோவையிலிருந்து காலை ஏழுமணிக்கே எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார், மிச்சிகன் மூர்த்தி, நூல்வனம் மணிகண்டன் ஆகியோருடன் சென்றேன். மூர்த்தி பொள்ளாச்சியை அடைந்ததும் வீடு எங்கே என்று கேட்டார். லோகமாதேவி அனுப்பி வைத்த லொக்கேஷன் திருச்சி தாண்டி எங்கேயோ காண்பித்தது. மூர்த்தியின் மனம் திகிலடைந்தது. பின்னர் லோகமாதேவியின் புதல்வர் அளித்த லொக்கேஷனை பின்தொடர்ந்து வீடடைந்தோம்.

எனக்கு இப்போதெல்லாம் அசைவ உணவின் மீது தீவிரமான விலகல் மனநிலை. வீட்டில் கூட “மீன் வாங்கவோ? என்று கேட்டால் வேண்டாமென்று தலையாட்டி விடுகிறேன். என்னை நன்கு அறிந்த நண்பர்கள் இந்தத் தகவலை அண்டப்புழுகு என்கிறார்களாம். உண்டு களித்து உறங்கியதெல்லாம் ஒரு காலமென்று சொல்லும் மனநிலைக்கு வந்தடைந்து விட்டேன். ஆனால் லோகமாதேவியின் வீட்டில் காலை விருந்து ஏற்பாடாகியிருந்தது. என்னோடு வந்திருந்த மிச்சிகன் மூர்த்தி உணவில் சைவர். நூல்வனம் மணிகண்டன் அளவுச்சாப்பாட்டுக்காரர். லக்ஷ்மி சரவணகுமாருக்கு கடல் உணவு ஆகாது. எனக்கு நெருக்கமாய் இருந்த எல்லா அசைவ உணவுகளிளிருந்தும் நானே இப்போது விலகியிருக்கிறேன். ஆனால் லோகமாதேவியின் வீட்டு விருந்தில் அந்த விலக்கத்தை பேணமுடியாது போயிற்று. அவர்கள் விருந்தோம்பும் இயல்பினர். வீட்டில் உள்ள அனைவரும் வரவேற்றுச் சென்றனர். உணவு மேசைக்குச் சென்றதும் அசைவத்தின் தந்திகள் அதிரத் தொடங்கின. வெட்கங்கெட்ட விலகல்தனம்.

கொங்குநாட்டின் விருந்தோம்பலில் விசேட உணவென அழைக்கப்படும் சந்தகம் பரிமாறப்பட்டது. இடியப்பம் போன்றது. அதனைக் குழைக்க தேங்காய்ப்பால் வழங்கப்பட்டது. கொஞ்சம் சீனியும் போட்டு உண்டால் உள்ளம் உருகத்தான் செய்கிறது. மனிதர்க்கு தாய்ப்பால் போல ஈழத்து உணவிற்கு தேங்காய்ப்பால் என்றால் மிகையில்லை. சந்தகம் முடிந்ததும் இட்லியை நான் தெரிவு செய்து கொண்டேன். அவரவர்க்கு பிடித்த உணவுகள். கோழிக்குழம்பு, மட்டன் வறுவல், மீன்குழம்பு, இறால் வறுவல் என்று வகை வகையாக அடுக்கப்பட்டன. அவித்த முட்டை வேறு. நூல்வனம் மணிகண்டன்  அன்றைக்கு முதல்நாள் இரவு தூங்கும் போது, நாளை முழுவதும் தயிர்சாதம் தான் சாப்பிடவேண்டுமென்று சொன்னதை நினைத்துக் கொண்டேன். நான் அசைவ உணவை நோக்கி உள்ளே ஓதினேன், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை”.  ஒவ்வொரு உணவும் உருசையோடும், அன்போடும் சமைக்கப்பட்டிருந்தன. நண்பர்கள் வேண்டாமென மறுத்த “இறால் வறுவல்” இதம் கூடியிருந்தது. இத்தனை ருசியை வைத்துக் கொண்டு பின்புறமாக நீந்தாதே இறாலே என்று சொல்லி உண்பதைத் தவிர என்னால் எதுவும் செய்ய ஏலாது.

“மச்சம் சாப்பிட்டால் வெத்திலை போடு மோனே, செமிபாட்டுக்கு உதவும்” என்கிற ஆச்சியின் இந்தக் கூற்றை வாழ்வில் பின்பற்றுகிறேன். ஆனால் அதற்கு முன்பாக நாமெல்லோரும் சேர்ந்து தேனீர் அருந்தினோம். பிறகு வெற்றிலை போட்டுக் கொண்டு உலக விஷயங்களைப் பற்றி பேசினோம். லோகமாதேவியின் சகோதரர் விஜி இப்போதும் இளைஞராகவே இருக்கிறார். என்னைவிடவும் வடிவாக இருக்கிறார் என்று சொன்னால் நான் கோபித்துக் கொள்ளாத அளவுக்கு வசீகரமாய் இருக்கிறார். அவர் தனது வயதைச் சொன்னதையும் சின்னதாக அதிரச் செய்தேன். விஜி இயல்பான மனிதர். அன்பின் புன்னகையால் தலைகோதும் வல்லமை பெற்றவர். அவருக்கும் சிறிதளவில் இலக்கிய பரிட்சயம் உண்டு.

நாங்கள் இலக்கிய உலகத்தினது அசைவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வெற்றிலை போட்டுக்கொண்டு பேசுவதில் எனக்கெல்லாம் ஒரு மரபு இருக்கிறது. எனது வம்சத்தில் ஆச்சிமாரும், அப்புமாரும் வெற்றிலையோடு தான் இருந்தார்கள். என்னுடைய தந்தை எனக்களித்த வாசனை வெற்றிலைதான். இப்போதெல்லாம் வெற்றிலையை மடித்து அதக்கத் தொடங்கும் போது, ஒரு தடவை சொந்த நிலத்தின் வாசனை சுவாசக்கோளங்களில் கொடியெனப் படர்வதை உணர்ந்து கலங்கியிருக்கிறேன். அன்றும் அப்படித்தான். காலம் அந்தக் காலையை மறக்கமுடியாமல் ஆக்கியது.

விஜி ஒரு தனித்துவமான ஆள். பேசும் தன்மை, சொல்லும் பகிடிகள் எல்லாமும் சுவாரஸ்யமானதாக இருந்தன. அவருக்கும் இலக்கியர்களுக்கும் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். பிறகு சில இலக்கியச் சீண்டல்களை மாறி மாறித் தொடுத்துப் பார்த்தோம். அது ஒரு நீள் சரமென முடிவற்றுப் போகும். இடையில் முழமறிந்து துண்டிக்கத் தெரியவேண்டும். அங்கிருந்த எல்லோரும் முழமறிந்தவர்கள். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அந்தக் கயிற்றுக்கட்டிலில் உறங்கிவிடுவோமென  அச்சப்பட்டு  புறப்பட்டோம். லோகமாதேவியின் வீட்டுக்குச் செல்லும் போது பழங்களை வாங்கிச் சென்றேன். திரும்பி வரும்போது நாங்கள் எல்லோரும் அவரது சகோதரர் விஜியின் அன்பையும், புன்னகையும், இயல்பையும் நாவற்பழங்களை போல சேமித்து வந்தோம். இனிமை இனிமை.  ஒட்டிய மண்ணை ஊதாமலே உண்டு விழுங்கும் நாவற்பழங்கள்.

லோகமாதேவியின் வீட்டின் முன்பாக ஒரு கல்லிருக்கை இருக்கிறது. வானம் கறுத்து மழை பெய்யாது குளிர் காற்று வீசும் ஒரு பகல் வேளையில் தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்” நாவலை வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அந்த வீட்டின் சூழலே ஒரு சூழலியல் நாவலைப் போல தான் இருக்கிறது. சந்தகம் என்றால் தமிழில் மகிழ்ச்சி என்றொரு பொருள் அளிக்கிறது அகராதி.

அன்று எங்கள் எல்லோருக்கும் சந்தகம்.

 

 

 

Loading
Back To Top