நீண்ட நாள் கழித்து நண்பரொருவர் தொடர்பு கொண்டார். அவருக்கு பல அரசியல் அபிப்ராயங்கள் உண்டு. அவற்றை நான் எப்போதும் சீண்டியதில்லை. ஏனெனில் சீண்டக்கூட தகுதியற்றவை அவை. சிலவேளைகளில் நண்பர் இலக்கியப் பக்கம் பேச்சைத் திருப்பி “அங்கே என்ன நடக்கிறது” என்று உசாவல் செய்வதுண்டு. அவர் இறுதியாக வாசித்த இலக்கியம் சாண்டில்யனின் கடல் புறா என்று எப்போதோ சொன்னது எனக்கு ஞாபகத்தில் உள்ளது.

ஆனால் இலக்கிய வம்புகளை அளவில்லாமல் பேசுவார். ஜெயமோகன் கதை எழுதுவதை நிறுத்திவிட்டாரென்று கேள்வி, நீங்க ஏதாவது அறிந்தீர்களா தோழர்? என்று ஒருமுறை கேட்டார். உங்கள் அளவுக்கு இலக்கியத்தோடு பிணைப்பாக இருந்து செய்திகளை அறிய முடியுமா அய்யா என்று வம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். பிறகொரு நாள் “உங்க நாஞ்சில் நாடன் நல்லா இருக்காரா, இடையில்  ஒரு உரை கேட்டேன் புதிதாக ஒன்றுமில்லையே” என்றார். வந்த கோபத்தில் “உங்கள் அளவுக்கு நாஞ்சிலுக்கு தமிழ் தெரியாது, அவரை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லி தொடர்பை துண்டித்தேன். பிறகு கொஞ்ச நாட்கள் இலக்கியம் பேசியதில்லை. அரசியல் பேச முனையும் போது அழைப்பைத் துண்டித்து பிறகு பேசுகிறேன் என்று குறுந்தகவல் அனுப்பி வைப்பேன்.

அவரை நான் தோழரென விளிப்பதில்லை என்பதில் அவருக்கு கொஞ்சம் மன நோ. மரியாதைக்குரிய எம்மான்      ப. ஜீவானந்தமும் தோழர்,  நீங்களும் தோழரா? என ஒருமுறை கேட்டேன். அந்த நண்பர் ஜீவானந்தமென்றால் யார்  என்று கேட்டார். அதன்பிறகு அவர் அழைத்தும் எடுப்பதில்லை. இன்றைக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை, நண்பரின் அழைப்பை எடுத்துவிட்டேன்.

“தோழர் வணக்கம், செளக்கியமா”

“வணக்கம் நல்லாய் இருக்கிறேன். நீங்கள் சுகமா”?

உங்க தமிழக் கேட்டா எல்லாம் சுகம் தானென்று சிரித்தார். பிறகு சில அரசியல் சரவெடிகள். அதிரடிகள். உக்ரைன்,ரஷ்யா , ஈழம், திராவிடம், தமிழ்தேசியம், பெண்ணுரிமை, ஆகமம், சனாதனம், சித்தர், புத்தர் என பேச்சு எங்கெங்கோ போனது. இடையில் சூழலியலையும் தொட்டுக்கொண்டார். சர்வலோக நிவாரணி போல, அரசியலிலுள்ள சர்வ சிக்கலுக்கும் தீர்வு வைத்திருப்பவர் என்று தன்னைத் தானே மார் தட்டிக்கொண்டார். இந்தத் தோழரை உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஏனெனில் இவரைப் போல எனக்கே நான்கு பேரைத் தெரியும்.

பேச்சின் இறுதியாக ஆகுதி சார்பில எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒருநாள் கருத்தரங்கு நடத்துறதா கேள்விப்பட்டேன். எனக்கு நீங்க அழைப்பிதழ் அனுப்பவில்லையே என்று சுட்டிக்காட்டினார்.  இலக்கிய நிகழ்வு, அதுதான் உங்களுக்கு அனுப்பவில்லை என்றேன். நண்பருக்கு நான் பதில் அளிக்கும் நாகரீகம் புரியாமல் “அவரு நல்ல ரைட்டரா” என்று கேட்டார். ஆமாம், ஆனால் உங்கள் அளவுக்கு இலக்கியம் அறிந்தவர் இல்லையென நினைக்கிறேன் என்றேன். “அது எப்படி, அதற்கெல்லாம் வாய்ப்பிருக்காது. நானெல்லாம் சாண்டில்யன்ல மூழ்கி, கல்கியில நீச்சல் பழகின ஆளுங்க. இந்த ரைட்டர்ஸ்க்கு அதெல்லாம் பிடிக்காது. எம்.கோபாலகிருஷ்ணன் எந்தவூருங்க? என்றார்.

“தமிழ் விக்கி இருக்கு நீங்க அதில போய் படியுங்க. நிறைய விபரம் இருக்குமென்று சொல்லிவிட்டு அவரின் பேச்சைத் துண்டிக்க முனைந்தேன். ஆனால் அவர் விடுவதாயில்லை.

“நீங்க கூட்டம் நடத்தினா அதில ஏதேனும் செய்தி இருக்குன்னு சொல்றாங்களே, இந்த வருஷம் இவருக்கு ஏதேனும் விருது வருகிறதா” என்று தவிக்க தவிக்க கேட்டார்.

“விருது என்றாலே உங்களுக்கு சும்மாவே தவிப்பு வந்துவிடுகிறது பார்த்தீர்களா, இவர்களெல்லாம் எந்த அங்கீகாரத்துக்கும் முண்டியடித்து தம்மை முன்னிறுத்தாத தலைமுறைக்கார எழுத்தாளர்கள்” என்றேன்.

இவரோட அரசியல் கொள்கை என்னவென்று சொல்லுங்களேன் என்றார்.

இலக்கியமென்று நினைக்கிறேன்.

நண்பருக்கு எனது பதிலில் திருப்தி இல்லை. இலக்கியம் எப்படி அரசியல் கொள்கையாக இருக்க முடியுமென்று கேட்டார். இலக்கியம் அரசியலாக இருக்கும் போது, அரசியல் கொள்கை ஏன் ஒருவருக்கு இலக்கியமாக இருக்ககூடாது என அவரே ஏதோவொன்று சொல்லி அதிருப்தியைத் தகர்த்தார். சரி தோழர் நிகழ்வில் சந்திக்கலாம் என்றார்.

எந்த நிகழ்வு?

அதுதான் ஆகுதி ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புலகம் ஒருநாள் கருத்தரங்கில் என்றார்.

நான் அமைதியாக இருந்தேன்.

சரி தோழர், நான் வரல. சுருதி தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

“நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். வாருங்கள்” என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன்.

***

இந்த நண்பரைப் போல வீண்வம்பர்கள் பலருண்டு. இலக்கியத்தை அறியாமல் அவமதிப்பவர்கள். எழுத்தாளர்கள்  என்றால் இவர்களுக்கெல்லாம் ஒருவித ஏளனம். கசப்புகளால் சூழப்பட்டு எழமறுப்பவர்கள். வறட்டுவாத அரசியல் தரப்புக்களால் ஈர்க்கப்பட்டு இலக்கியத்தின் சாரத்தை அறியத் துணியாதவர்கள். கொள்கைகளின் வழியாக மொழியின் உன்னதங்களை கைவிட்டவர்கள். தொல்மரபின் துடியொலிகளை கேட்க விரும்பாத  அபாக்கியர்கள். இவர்களிடம் இலக்கியத்தைப் பற்றி ஒரு சொல்லும் பேசுவதில்லை என்பது என் கொள்கை. இலக்கிய உலகில் நடப்பவற்றை அறிந்து வைத்திருந்து, தம்மையொரு அறிவியக்க ஆளாக காண்பிக்க முயல்கிறார்கள். இவர்களுக்கு எல்லாமும் கிசுகிசுக்கள் தான்.

எழுத்தாளர் எஸ்.ராவின் புதிய நாவலுக்கு “மண்டியிடுங்கள் தந்தையே” என்று தலைப்பிட்டிருக்காருன்னு ஒரு ரகசியத் தகவல், அவர் தந்தையின்னு யாரைச் சொல்லறாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அதை யார்கிட்டையும் சொல்ல மாட்டேன் என்று நண்பர் சொன்ன போது அதே நாவல் வெளிவந்து இரண்டாம் பதிப்பு கண்டுவிட்டது. நண்பருக்கு நாவல் வெளியான செய்தி எங்கேயோ தடைப்பட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இந்த வம்பர்களுக்கு இலக்கியம் கடலை மிட்டாய் போல, நாளில் செரிமானப் பிரச்சனை நேர்ந்தால்  இப்படி ஏதேனும் ஒரு கிசுகிசுவை எடுத்துக் கடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் மெய்யாக இலக்கியத்தை அணுகுபவர்கள் வேறொரு வெளிச்சத் திசையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதுவொரு வேள்வியாக இருக்கிறது. நாளும் பொழுதும் கிடைக்கும் நேரங்களில் உலகியலின் இயந்திர நசிவிலிருந்து மறைந்து வாழ்கிறார்கள். எழுத்தாளர் எஸ்.ரா எழுதிய கதாவிலாசம் படித்துவிட்டு இலக்கியத்திற்கு வந்தவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அந்தப் புத்தகத்திற்கு நன்றியுடையவர்கள் தாமென்று சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

இங்கே இலக்கியம் என்பது பாவனைகளாலும், பம்மாத்துக்களாலும் வளர்க்கப்பட்டதல்ல. பசியாலும் பட்டினியாலும் அணையாத தீபமாய் ஏற்றிவைக்கப்பட்ட ஒரு நடுகல்லில் தமிழ் இலக்கியம் என்ற பெருமை ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. பசியாலும் வறுமையாலும் அலைக்கழிக்கப்பட்ட புதுமைப்பித்தன் என்கிற வரலாற்றுச் சோதியை மறந்தா போவோம் நாம்!

எழுத்தாளனைக் கொண்டாடுதல் என்பது ஒரு பண்பாடு. சாதாரணனை விடவும் விசேடமானவன் எழுத்தாளன். மொழியைப் போற்றுவதற்கு நிகரான செயல் எழுத்தாளனை ஆராதிப்பது. அது என்னுடைய மரபூர்ந்த செயல். குருக்களுக்கு அளிக்கும் வணக்கம். நான் முனிமேடு என்றதொரு சிறுகதை தொகுப்பின் மூலமே எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனைக் கண்டடைந்தேன்.  ஒரு எழுத்தாளனை வாசிப்பதன் வழியாகவே கொண்டாடும் வாசக கர்வம் என்னுடையது. அதன்பிறகு அவருடைய அம்மன் நெசவு, மணல்கடிகை போன்ற நாவல்களை அடைந்தேன். எம்.கோபாலகிருஷ்ணனின் புனைவுலகம் பற்றிய மதிப்பீடுகளை பொதுவெளியில் விரல்விட்டு எண்ணிவிடலாம். இது தமிழ் இலக்கியச் சூழலில் நிகழும் தொடர் ஊழ். இப்படித்தான் எத்தனையோ அரும்படைப்பாளிகளை அசட்டைப் புழுதியால் மூடிய சிறுமையர் நாம். முப்பதாண்டுகளுக்கு மேலாக சோரம் போகாத படைப்புக்களை தருகிற எழுத்தாளர் இவர். அம்மன் நெசவு நாவலை வாசித்து நண்பர்களிடம் பறைசாற்றியதுமுண்டு.

அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, மாயப்புன்னகை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசை. எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தி.  இங்கே எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஆகுதி விழா எடுப்பதென்பது வெறுமென ஒரு எழுத்தாளனுக்கான மரியாதை  அல்ல. அவர்கள் எழுதத் தொடங்கிய காலத்துக்குமான மரியாதை.  இலக்கியம் இலட்சியவாதமாய் அவர்களிடம் இருந்தது.

இன்று எதுவுமற்ற எல்லாவற்றையும் முன்னிலைப்படுத்தும் தந்திரங்கள் இலக்கியத்திலும் நிகழ்கின்றன. எளிய குறுக்குவழிகளில் அடையாளங்கள் பெறுகிற ஆர்ப்பரிப்பில் ஒரு தொகையினரின் கூச்சல். இலக்கியத்தரம் விற்பனையில் அளவிடப்படும் சந்தை மலினங்களாய் அறிவிக்கப்படுகின்றன. விருதுகள் அழுகிய பழங்களைப் போல வீதிக்கு வீதி அள்ளி வீசப்படுகின்றன. எம்.வேதசாகயகுமார் என்றால் யார்? அப்படி என்ன எழுதியிருக்கிறார் என்று கேட்பவர் வளர்ந்து வருகிற விமர்சகராக அறியப்படுகிறார். எஸ்.பொன்னுத்துரை என்கிற பெயரை நன்றாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கதைகளை வாசித்ததில்லை என்பவர் இலக்கிய வளர்ச்சி பற்றி கட்டுரை எழுதி பரிசில் வாங்குகிறார். இங்கு எல்லாமும் டைம் லைன் விளம்பரங்களாக ஆகிவிட்டன.

இந்த தீயுழுக்கு நடுவிலும் மேன்மையான வாசிப்பின் வழியாக இலக்கியத்தை கண்டடையும் ஒரு பெருந்திரள் இத்தலைமுறையில் உருவாகியிருக்கிறது. அவர்கள் ஒரு நிரையில் தமது வாசிப்பைத் தொடர்கிறார்கள். செவ்வியல் (Classic) இலக்கியங்களைக் கண்டடைகிறார்கள். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், ஜி.நாகராஜன், தி.ஜானகிராமன், மு.தளையசிங்கம், எஸ்.பொன்னுத்துரை, கே. டானியல் என  இன்னும் பற்பல இலக்கியக்காரர்களை  வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை நோக்கியே ஆகுதி செயல் புரிகிறது. நான் மேலே கூறிய அந்த நடுகல்லுக்கு வணக்கம் செலுத்தும் அருகதை இவர்களுக்குத் தானிருக்கிறது.

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு இப்படியொரு விழாவினை நடாத்தவேண்டுமென்பது என்னுடைய வாசக விருப்பம். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இதுபற்றி பேசிவந்திருக்கிறேன். காலம் இப்போதுதான் இப்பெருவாய்ப்பை வனைந்து தந்திருக்கிறது. என்னுடைய அணுக்கமான நாவல்களில்           “அம்மன் நெசவு” முதன்மையானது. தொன்மம் சக்தி கொண்டது. அம்மன் நெசவு என்கிற நாவலும் தொன்மமுடையது. சொந்த நிலம் பிரிந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் புலம்பெயர்ந்த இனக்குழுவின் கதை.  எம். கோபாலகிருஷ்ணனை இன்னொரு ஆழமான பார்வையில் நோக்கினால் புலம்பெயர்ந்த படைப்பாளியாகக் கூட வகைப்படுத்தலாம்.

இந்நிகழ்வில் பங்கெடுக்கும் உரையாளர்கள் யாவரும் நவீன இலக்கியத்தோடு பிணைப்புக் கொண்டோர் என்பதை அடையாளமிட்டு சொல்லவேண்டியதில்லை. ஊரறிந்த இலக்கியக்காரர்கள். புதிய தலைமுறையின் சங்கமமாக முழுநாளும் அமைகிறது. வாசிப்பின் வழியாக ஊற்றெடுக்கும் அவதானங்களை, அழுத்தம் திருத்தமாக முன்வைக்க கூடிய உரையாளர்கள்.  ஆகுதியின் ஒருநாள் கருத்தரங்கு என்கிற செயல் இந்நிகழ்வின் மூலமாக இன்னொரு மாட்சி பெறுகிறது. இந்நிகழ்விற்கு உறுதுணை வழங்கும் விமலம் மெஸ் உணவகத்திற்கும்,  ஊடக அனுசரணை வழங்கும் சுருதி தொலைக்காட்சியினருக்கும், நிகழ்வின் அழைப்பிதழை வடிவமைப்பு செய்த நூல்வனம் மணிகண்டன் அவர்களுக்கும் நன்றி.

 

Loading
Back To Top