01

கெளதாரிகளையும் மணிப்புறாக்களையும் கவணால் வேட்டையாடுவான் தம்பி. உந்தச் சின்னச் சீவனுகள கொண்டு பாவத்த தேடாத என்பாள் அம்மா.மணிப்புறா இறைச்சியின் உருசைக்கு ஈடில்லை. தம்பியின் கவணை அவனைத் தவிர யாரும் தொடக்கூடாது. கவணுக்கு அணியும் கற்களை சேமித்து வைக்கும் ஷெல் பெட்டியையே யாரும் திறந்து பார்க்ககூடாது. தம்பியை அம்மா வேடுவன் என்றுதான் அழைப்பாள். அவன் கண்ணில்படும் ஓணான், அணில், பச்சைப் பாம்பென எல்லாவற்றையும் வித்தியாசம் பாராமல் கொன்றுபோட்டான். தம்பிக்கு அப்போது ஒன்பது வயதாகியிருந்தது. பள்ளிக்கூடம் போவதற்குச் சுணக்கப்பட்டான்.

காலையில் எழுந்தால் வயிற்று வலியென சாட்டுச் சொல்லுவான். பின்னர் ஒரு ஊடு பார்த்து இப்ப சுகமெனக்கு என்று சொல்லிக்கொண்டு கவணை எடுத்து வலது தோள்பட்டையில் அணிவான். ஷெல் பெட்டிக்குள்ளிருக்கும் கற்களை கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு ஒரு திசையில் நடக்கத்தொடங்குவான். அவன் திரும்பிவருகையில் ஒன்றுக்கு மேற்பட்ட இரையோடு வருவான். “நீ பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருந்து காட்டுவாசியாய் ஆகப்போறாய் இருந்து பார்” அம்மா திட்டுவதைப் பொருட்படுத்தாமல் பறவைகளின் தோலையுரிப்பான்.

குழந்தைப் பருவத்திலேயே இழுப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தம்பியை அம்மா தண்டிப்பதேயில்லை. “இழுப்புக்காரன் அழக்கூடாது. மூச்சடக்கி போய்டும்’ என்பாள். ஆனால் தம்பியின் குழப்படிகள் கூடிக்கொண்டே போனது. குளிப்பது கிடையாது. வியர்வை நாற பற்றைகளுக்குள்ளும் பாழடைந்த வீடுகளுக்குள்ளும் கவணோடு நடந்து திரிந்தான். அவனின் இரண்டு கண்களும் கவணின் இலக்கிலேயே இருந்தன. அவன் பசிகொண்ட குலத்தின் இறுதிக் குழந்தையைப் போல இரைக்காய் அலைகிறான் எனத்  தோன்றும்.

ஒருநாள் இரண்டு மர அணில்களோடு வீட்டிற்கு வந்தான். நான் முதன்முறையாக அன்றுதான் அவற்றினைப் பார்க்கிறேன். அவன் இரண்டு மர அணில்களையும் தோலுரிக்க ஆயத்தமானான். பெரிய சட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக போனான். அதன் இறைச்சி உருசை எனக்குப் பிடிக்கவில்லை. அவன் கொன்ற பாவத்தை தின்று போக்கும் தவிப்போடு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான்.

அன்றொரு நாள் இரவாகியும் தம்பியைக் காணவில்லை. அம்மா வீட்டின் படலையைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். வீட்டிற்குள் எரிந்துகொண்டிருந்த லாம்பு  வெளிச்சத்தில் பாடப்புத்தகங்களை படித்துக்கொண்டிருந்தேன். அம்மா வீதியால் செல்பவர்களிடம் தம்பியைக் கண்டீர்களா என்று விசாரித்துக் கொண்டிருந்தாள். இரவு ஒன்பது மணிக்கு மேலாகியது. தம்பியைக் காணவில்லை அம்மாவும் நானும் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தேடிக்கொண்டு போனோம். பிறகு சனங்கள் ஒன்று கூடி திசைதோறும் பிரிந்து தேடினர்.

தம்பியைக் கண்டுபிடித்து அதிகாலையில் வீட்டிற்கு கொண்டுவந்தோம். அவனுக்கு சுயநினைவில்லை. ஆனால் தனது வலது கையில் கவணைப் பிடித்தபடியே இருந்தான். தேடிச்சென்ற ஒரு பிரிவினர் அவனை பனங்கூடலில் கண்டுபிடித்தனர். சிறிய பனையொன்றின் கீழேயுள்ள செம்பாட்டு மண்மேட்டின் மீது அவன் உறைந்து போயிருந்தானம். அவனுக்கருகில் சென்று அவனை அழைத்தபோதும் அவன் அசட்டை செய்யாமல் பனைமரத்தின் உச்சியையே பார்த்தபடியிருந்தானாம்.

அம்மா இரும்பைக் காய்ச்சி நீருக்குள் அமுங்கப்பண்ணினாள். அந்த நீரெடுத்து தம்பியின் முகத்தைக் கழுவினாள். அவனில் எந்த இயல்பும் திரும்பவில்லை. “பிள்ளையில ஏதோ கெட்டது தொத்திட்டுது” எனப்பயந்த அம்மா கதறி அழத்தொடங்கினாள். தம்பியின் மேனியிலிருந்த சிறுகீறல் காயங்களில் ஊன் வழிவது மாதிரியிருந்தது. அப்போது அவன் இயல்பாக அசைந்தான். காயங்களில் இருந்து வழியும் திரவத்தை விரலினால் தொட்டு நக்கி நல்ல தேன் என்றான். அம்மா கூச்சலிட்டு அழுதாள். மரங்களை விட்டு பறவைகள் எழுந்து பறந்தன. அம்மா ஆறுதலற்று சித்தம் கலங்கி தம்பியின் முன்னே அமர்ந்திருந்தாள்.

விடிந்ததும் தம்பியைக் கண்டுபிடித்த பனங்கூடலுக்கு சென்றேன். அவனிருந்த மண் மேட்டில் காலடித் தடங்களிருந்தன. சந்தேகப்படும் படியாக அங்கு எதுவுமில்லை. இரண்டு கவண் கற்கள் சிதறிக்கிடந்தன. நான் அந்தக் கற்களையெடுத்து கண்களுக்கு அருகில் கொண்டு வந்தேன். ஒரு கல்லினுள்ளே குருதிக்கடல் பொங்குவதைக் கண்டேன். அக்கல்லிலிருந்து கசியும் குருதியின் நறுமணம் பிசுக்கேறியிருந்தது. அச்சத்தில் சிறுநீர் பிரிந்து அப்படியே குந்தினேன். வானத்தின் அடிவயிறு என்னை அழுத்தியது. என்னைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் எழுப்பினேன். வார்த்தைகள் அவிழ்ந்து உதிர்ந்தன. கல்லுக்குள் அலையெழுப்பும் குருதிக்கடலின் மீது சூரியன் நிமிர்வது மட்டும் தெரிந்தது. என் பாதங்களில் காட்டு மரங்களின் வேர்கள் படர்ந்தன. ஒரு பெண்ணின் கூந்தல் வாசத்தில் கொப்புகள் முளைத்தன. உச்சிக்கொப்பில் வண்ணத்துப்பூச்சியாய் ஆகியிருந்தேன். கைபிடித்தானியம் போல இரண்டு கற்களையும் சுமந்திருந்தேன்.

02

அந்தச் சம்பவத்திற்கு பிறகு தேய்பிறை நாட்களில் மட்டும் தம்பியின் உடல் மெலிந்துவிடும். அவனை “ஒல்லித் தேரை” என்று கூப்பிட்டால் ‘போங்கோடா பூழலி மக்களே” எனத் தூஷணை பொழிவான். கிளிப் பொந்திருக்கும் பனைமரங்களின் கீழே நின்றுகொண்டு அண்ணாந்து பார்த்துகொண்டே நிற்பான். வெய்யில் மழையென்று இல்லாமல் போயிற்று. ஷெல் பெட்டிக்குள் இருந்த கற்களை எடுத்துக்கொண்டு கவணோடு வெளிக்கிடத்தொடங்கினான். அம்மா அவனைப் போகவேண்டாமென கையெடுத்துக் கும்பிட்டாள். தம்பி கடவுளைப் போல யார் கும்பிட்டும் கரைகிறவன் கிடையாது. அவனுக்குள் பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கியதும் வீட்டை விட்டு பறந்துவிடுவான். அந்தக் கல்லின் மீது எனக்கொரு ஈர்ப்பு இருந்தது. அது என்னோடு கதைப்பதற்கு பாஷை பழகுகிறது என்று தோன்றியது. குருதிக்கல் எங்களைக் கைவிடாத ஒரு சக்தியென நம்பத்தொடங்கினேன். அதனால் குருதிக் கடல் பொங்கும் கல்லை பாவிக்காத கிணற்றின் முதல் படிக்கட்டில் மறைத்து வைத்தேன்.

அம்மாவுக்கு தம்பியின் நடத்தைகளில் கரவு வந்தது. அவனை நினைத்தழுதாள். அவனுக்கு காவல் செய்து நூலொன்றைக் கட்டவேண்டும் இல்லையெனில் அவன்ர சீவனுக்கு கெட்டது நடந்துவிடுமென சொன்னாள். தம்பியைக் கூட்டிக்கொண்டு செல்ல முடியாததால் நானும் அம்மாவும் கிளிநொச்சியிலிருந்து அக்கராயன் குளத்திலுள்ள பேயாடி மணியத்தின் வீட்டிற்குச் சென்றோம். தம்பி கவணோடும் கற்களோடும் வெளிச்சம் சிதற நிழல் மிதித்து நடந்தான். வீடு தனித்திருந்தது. கிணற்றின் படிக்கட்டில் மறைத்து வைத்திருந்த குருதிக்கல் அசைந்து நீருக்குள் விழுந்துவிடுமென மனதுக்குள் இடிந்துவிழும் ஆகாயத்தை அள்ளியெறிய முடியாமல் தவித்தபடியிருந்தேன். அம்மா பேயாடி மணியத்தை முழுமையாக நம்பினாள்.

அக்கராயன் குளத்திலிருக்கும் பேயாடி மணியம் மந்திர சக்தியுடையவர். அவரோட மந்திரக்கட்டுக்கு அடங்காதது எதுவுமில்லை என்று அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். நாங்கள் பேயாடி மணியத்தின் வீட்டிற்குள் நுழைந்த போது ஏற்கனவே நிறையப் பேர் அங்கிருந்தனர், எங்களை வரவேற்ற படுகிழவனொருவர் ஓரிடத்தில் எங்களை அமரச் சொன்னார். சிலர் வந்தவேலையை முடித்துக் கொண்ட மிகவேகமாகவும் பதற்றமாகவும் அங்கிருந்து சென்றனர். அவர்களிடமிருந்து இழப்பின் சிறகடிப்பு கண்ணீரைத் தெறித்தது. பேயாடி மணியத்திற்கு முன்னால் நானும் அம்மாவும் அழைக்கப்பட்டோம். அங்கு எங்களைத் தவிர யாருமிருக்கவில்லை. பேயாடி மணியம் தனக்கு முன்னால் மிளாசி எரியும் கற்பூர நெருப்பில் தனது விரல்களை வாட்டிக்கொண்டிருந்தார். தம்பி சிலவேளைகளில் மணிப்புறாவை நெருப்பில் வாட்டுவது ஞாபகத்திற்கு வந்துபோனது. அம்மா நடந்தவற்றை சொல்லத்தொடங்கியிருந்தாள். பேயாடி மணியம் எல்லாவற்றையும் கேட்டு முடித்தார். பிறகு என்னைப் பார்த்துக் கேட்டார்.

ஏன் தம்பியைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமெல்லே?.

“அவன் வரமாட்டான். இப்பவும் கவணை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு வெளிக்கிட்டிருப்பான்”

என்னத்த கூடவா அடிக்கிறான்?

அதுதான் மணிப்புறா… நல்ல உருசையாய் இருக்கும்.

அதெல்லாம் சரி. அவன்ர மேலில இருந்து வந்தது உண்மையிலேயே தேனா? நீ நக்கிப் பார்த்திருக்க வேண்டியது தானே?

நக்கிப் பார்த்தனான். எங்கட செட்டிகாட்டு பொந்து தேனோட ருசி.

அம்மா அவரைப் பார்த்து “நீங்கள் தான் என்ர பிள்ளையைக் காப்பாற்ற வேணும்’ என்று கையெடுத்துக் கும்பிட்டாள். பேயாடி மணியம் கற்பூர நெருப்பில் மீண்டும் விரல்களை வாட்டினார். கையில் இரண்டு மஞ்சள் நூலை எடுத்து நீறள்ளிப் பூசினார். பிறகு நிறைய வார்த்தைகளாலும் ஒலிகளாலும் அந்த நூலை எச்சில்படுத்தினார். நாங்கள் பேயாடி மணியத்தின் வீட்டிலிருந்து வெளியேறினோம். தம்பியின் வலது கையிலும் இடது கணுக்காலிலும் இரண்டு நூல்களையும் கட்டச்சொன்னார். அம்மா பயணத்தில் கேட்டாள்.

பேயாடி மணியம் வீட்டில சனத்தைப் பார்த்தனியே, ஆரவை எண்டு விளங்குதோ?

எல்லாருக்கும் பிரச்சினை இருக்கும் தானே?

‘இவங்கள் சண்டைக்கு பிடிச்சுக்கொண்டு போய்டுவாங்கள் எண்டு தங்கட பிள்ளையளை காட்டுக்குள்ள மறைச்சு வைச்சிருக்கிற சனம். காவலுக்கு வந்து போகுதுகள். இப்ப பேயாடி மணியத்துக்கு தான் வன்னிக்குள்ள கிராக்கி. ஆனால் இயக்கம் இதைக் கேள்விப்பட்டுதோ அவ்வளவு தான் கதி” என்றாள் அம்மா.

“இயக்கத்திட்ட இருந்து பேயாடி மணியத்தைக் காப்பாற்ற அவருக்கொரு காவல் வேணுமே, அதை  ஆர் செய்து குடுப்பினம்” என்று கேட்டேன். அம்மா உள்ளுக்குள் சிரித்தாள்.

தம்பி இரண்டு மணிப்புறாக்களை அடித்துவந்து நெருப்பில் சுட்டுத் தின்றுகொண்டிருந்தான். அம்மாவைப் பார்த்ததும் வந்து சாப்பிடு என்று கூப்பிட்டான். அம்மா காலைக்கழுவி முடித்து வீட்டிற்குள் நுழைந்தாள். நான் கிணற்றுப்படிக்கட்டில் வைத்த குருதிக்கல்லைத் பார்க்க ஓடோடிப் போனேன். கிணறு முழுக்க அதே மாதிரியான கற்கள் நிரம்பிக்கிடந்தன. குருதியின் நறுமணம் மேலேறிக்கொண்டிருந்தது. படிக்கட்டில் கிடந்த கல்லை எடுத்துக்கொண்டு வேறொரு இடத்திற்கு ஓடினேன்.

03

அம்மா பலவந்தப்படுத்தி இரண்டு காவல் நூல்களையும் தம்பிக்கு கட்டிவிட்டாள். அவனிலிருந்து வழியும் தேன் வாசம் வீசத்தொடங்கியிருந்தது. அம்மா ஒவ்வொரு நாளும் அவனது வலதுகையையும், இடது கணுக்காலையும் பார்த்தாள். நூலை அறுக்கக்கூடாதென சத்தியம் வாங்கிக்கொண்டாள். நான் கல்லைக்கொண்டு ஒரு பனைமரத்தின் கிளிப்பொந்தில் மறைத்து வைத்தேன். பேயாடி மணியத்திடம் இந்தக் கல்லின் கதையைச் சொல்ல மறந்துவிட்டது குறித்து என்னையே நொந்து கொண்டேன். பின்னர் இப்படியொரு விஷயத்தை எப்படிச் சொல்வது என சமாதானம் செய்துகொண்டேன். அம்மாவிற்கு தெரியாமல் ஒருநாள் பேயாடி மணியத்தைப் பார்க்கப் போகவேண்டுமென நினைத்தேன். தம்பி வீட்டிற்குள் இருக்காமல் சுற்றிக்கொண்டே திரிந்தான். வாய்க்காலுக்கு அருகிலே உள்ள புல்மேடையில் சென்று படுத்துக்கொண்டான். அம்மா திடீரென ஒருநாள் தம்பியை அழைத்துக்கொண்டு எங்கேயென்று சொல்லாமல் போய்வந்தாள். அதன்பிறகு அவனுக்கு அம்மாவின் மீது தாளாத கோபமிருந்தது. எரித்துப் பொசுக்கும் அவனின் பார்வையால் அம்மா நடுநடுங்கினாள். அம்மாவிடம் கேட்டேன்.

“எங்கையம்மா அவனைக் கூட்டிக்கொண்டு போனியள், அவன் இவ்வளவு கோபமாய் இருக்கிறான்.”

அம்மா பதில் சொல்ல மறுத்துவிட்டாள். தம்பியைக் கேட்டால் அவன் சொல்லப்போவதில்லை.

ஒருநாள் இரவு நித்திரையிலிருந்து கண்களை விழித்தவன் கவணை எடுத்துக்கொண்டு எனக்கு சேதி கிடைத்துவிட்டது. நான் வெளிக்கிடுகிறேன் என்று சொல்லிப் புறப்படத் தயாரானான்.

அம்மா அவனை கட்டியணைத்து அழுதாள். “ஏன் மோனே இப்பிடியெல்லாம் கதைக்கிறாய். உனக்கு என்ன நடந்தது? ஆர் உன்னில நிக்கிறது” என்று கேட்டாள்.  “நான் போகவேணும் என்னை விடுங்கோ” என்று தம்பி சொன்னான். அம்மாவின் அணைப்பை உதறிக்கொண்டு அவன் வீட்டின் படலையத் திறந்து ஓடிப்போனான். அம்மா லாம்பை பிடித்துக் கொண்டு அவனின் பின்னால் ஓடிப்போனாள். ஊரெழுந்தது. அம்மாவின் கையில் கிடந்த லாம்பு அணைந்ததும் அம்மா பெருத்த வெளிச்சமாகி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன்.

அம்மா….நில்லுங்கோ என்று கத்தியும் அவள் கேட்பதாயில்லை. தம்பியின் பின்னால் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். “கல்லை மறைத்து வைத்திருக்கும் பனைமரத்திற்கு ஓடிப்போ. நீ மறைத்து வைத்திருக்கும் அந்தக் கல்லையெடுத்து உன் தம்பியிடம் குடு. அவனைக் காப்பாறு  என்று எனக்குள் எழுந்த குரல் யாருடையது? என்னைப் பிளந்து பிய்த்தெறிந்தது.

இரவின் நித்திரை முறிகிறது. மூசும் காற்றில் காவோலைகள் வீழாத வருத்தத்தோடு சத்தமெழுப்புகின்றன. ஒரு உடும்பு பனையில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  குருதிக்கல்லை எடுப்பற்காக பனையில் ஏறத்தொடங்கினேன். நெஞ்சை வைத்து ஏறமுடியாதளவுக்கு பனை மேனி கொதித்தது. இருளின் நரம்பினில் நடுங்கியேறும் புழுவென என் கண்கள் குருடாகிப்போயின. ஒரேகணம் துயரின் அதீதம் என்னைத் தன்னந்தனியே கைவிட்டது. பனையின் நடுவே பறந்து தடுமாறும் கிளியைப் போலிருந்தேன். விடிவதற்கு முன்னர் தட்டுத்தடுமாறி குருதிக்கல்லை எடுத்து இறங்கமுடியாமல் அப்படியே இருந்தேன்.  என்னைக் காணாது தேடிக்கொண்டிருந்த அம்மாவும் தம்பியும் ஊரவரும் காலையில் பனைமரத்தில் கண்டனர். அம்மா தலையிலடித்து அழுகிறாள் என்பதை உணர்ந்தேன். எனக்கு கண் தெரியாமல் போயிற்று என்னைக் கீழே இறக்கிவிடுங்கள் என்று குரல் கொடுத்தேன். நான் பனையிலிருந்து இறங்கியதும் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு யாவும் அந்தகாரமாய் ஆயிற்று. அம்மா அழுது கொண்டே கேட்டாள்.

ஆர் தம்பி உன்னைக் கூட்டிக்கொண்டு போனது? இரவு என்னோட தானே படுத்திருந்தனி எப்பிடி எழும்பிப் போனி?

அம்மா நான் எங்க போனான். தம்பி கவணை எடுத்துக்கொண்டு போறான். அதுக்கு பிறகு நீங்கள் லாம்பைத் தூக்கிக்கொண்டு ஓடினியள். உங்களுக்கு ஞாபகமில்லையே?

உனக்கென்னப்பன் விசரே! தம்பியும் நானும் பிள்ளையை காணேல்லயெண்டு தேடிக்கொண்டிருக்கிறம். நீ என்ன இப்பிடிச் சொல்லுறாய்?

அம்மாவைக் கட்டியணைத்தேன். அவள் மேனி பனை போல கொதித்தது. என்னுடைய தலையை தடவிக்கொண்டு ஏதோ எங்களைப் போட்டு அலைக்கழிக்குது என்றாள். தம்பி கவணை எடுத்துக்கொண்டு படலையத் திறந்து வேட்டைக்கு போகிறான். கல்லில் கசியும் குருதியின் ஈரலிப்பை உணர்ந்து அதனைத் தொடுகிறேன். கையில் குருதி படுகிறது. அதனால் கண்களை கசக்கினேன். வெளிச்சம். ஒரு சொல்லைப்போல கண்களில் விரிந்தது.

“எனக்கு பழையபடி கண் தெரியுது” எனக் குரல் எழுப்பினேன். தம்பி இரண்டு மணிப்புறாக்களை இரையாக்கி வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான்.

04

நான் இந்தக் குருதிக்கல்லை யாரிடமும் காட்ட விரும்பவில்லை. ஆனால் அதனை தூக்கி வீச விரும்பினேன். இந்தக் கல்லினால் தான் இவ்வளவு துயரமும் நேர்கிறதென நினைத்தேன். கல்லை மறைத்து வைத்திருக்கும் இறங்குப்பெட்டியைத் திறந்தேன். அதனை எடுத்து கடலில் வீசிவிடத் துணிந்தேன். குருதிக்கல் எந்த இரத்தக்கசிவுமற்று இருந்ததை தடவிப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நான் கையினில் ஏந்தினேன். கல்லில் குருதிக் கடல் பொங்கி இரைகிறது. பிசுக்கேறிய குருதியின் நறுமணம் நுரைத்தது. வீட்டிற்குள் நுழைந்த தம்பி எனது கையிலிருக்கும் கல்லைப் பார்த்ததும் “என்ர கவண் கல்லை ஏன் எடுத்தனி”? என்று கேட்டான். என்னால் எதுவும் சமாளிக்கமுடியவில்லை. இது கவண் கல்லில்லை குருதிக்கல் என்றேன். அவன் அந்தக் கல்லைப் பறித்துக்கொண்ட தனது கவணோடு வீட்டை விட்டு மூர்க்கம் தள்ளிய வேகத்தோடு வெளியேறினான். அவனோடும் சத்தம் என்னுடைய செவிகளுக்கு துர்ஒலியைத் தந்தது.

மீண்டும் அம்மாவும் நானும் தம்பியைத் தேடத்தொடங்கினோம். அவனைக் காணாது அம்மா துடியாய் துடித்தாள். கிராமத்துச் சனமும் காடுகளுக்குள் தேடிக்களைத்தனர். குருதிக்கல்லோடு வெளியேறிய தம்பியை எங்கெல்லாமோ தேடித்தேய்ந்தோம். நாட்கள் ஓடின. அவனைக் காணவில்லை. பேயாடி மணியத்திடம் கேட்டால், “அவன் ஒரு யுகத்தின் கல்லோடு ஆழிக்குள் இறங்கிவிட்டான். என்றோவொரு நாள் பேரலையைப் போல எழுந்து வருவான்” என்றார். அம்மாவுக்கு சித்தம் பிசகிவிட்டது. பேயாடி மணியம் சொல்லும் ‘யுகத்தின் கல்” என்றால் என்ன மோனே என்று அம்மா அழுதபடி கேட்டாள்.

யாதுமாகி நின்ற போர்க்காளியின் முன்னால் நழுவிப்போன “எங்கள் விடுதலை” என்றேன்.

கடைசி அலை ஓய காத்திருக்கும் மாளாத் தவிப்போடு அம்மா சொல்லத் தொடங்கினாள் “யுகத்தின் கல் எனப்படுவது எங்கள் விடுதலை”. “யுகத்தின் கல் எனப்படுவது  எங்கள் விடுதலை”.

உப செய்தி

தம்பிதம்பி என்று அவனை அழைத்த எனது குரல் இந்து சமுத்திரத்தினுள்ளே ஊடுருவி எதிரொலிக்கிறது. தம்பியின் கவணும் ஷெல் பெட்டியிலிருந்த கற்களும் படகொன்றின் அருகே தனிமையிலிருகின்றன. காலம் பற்றி எரிகிறது. மல்லாந்து கிடக்கிறது நிலம். அதன் சடலத்தில் “யுகத்தின் கல் எனப்படுவது  எங்கள் விடுதலை”. என்றெழுதிய தம்பியின் கையெழுத்தில் சீழ் கோர்த்திருந்தது.

Loading
Back To Top