நான் அகரமுதல்வன். பிறந்தது 1992 ஓகஸ்ட் 11ம் தேதி. தீவிரமாக சைவ வழிபாட்டையும் அனுட்டானங்களையும் கடைப்பிடிக்கும் குடும்பப் பின்னணி. “நீறில்லா நெற்றி பாழ்” என்று சொல்லும் நிறைய சொந்தக்கார ஆச்சிகளால் வளர்ந்தவன். அம்மா இறைபக்தி கொண்டவள். உலகியலின் நெருக்கடியையும், கசப்பையும் சந்தித்து அவமானம் எனும் தீயூழ் அவள் மீது ஆணிகளாய் அறையப்பட்ட போழ்தும் தத்தளிப்பற்று, பதற்றமற்று பிள்ளைகளை வளர்த்தெடுத்தவள். மாபெரும் தாய் . அவளின் பிள்ளையென நினைக்குந்தோறும் அடைகிற பெருமையாலும், நிமிர்வாலும் தான் இப்படியொரு கம்பீரமான மொழியைக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கிறேன் என்று தோன்றுகிறது. சொந்தக்காரர்கள் நக்கலாக என்னைப் பற்றிச் சொல்லுகையில் ” உவன் அம்மாவின்ர பிள்ள” என்பதுண்டு. மீண்டும் ஒருதடவை “என்னைப் பேணும் அம்மையே ” என்பேன்.
நான் பிறந்த 1992 ம் ஆண்டு ஈழத்தின் போராட்டக்களம் புதிய திருப்பங்களையும், தன்மையையும் பெற்றிருந்த காலம். வீரயுகத்தின் வெற்றி அத்தியாயங்கள் பெரிதாக நிகழ்ந்த வண்ணமிருந்தன. என்னுடைய ஐந்து வயதில் முதல் இடப்பெயர்வை சந்தித்தேன். அம்மாவின் சட்டையைப் பிடித்தபடி வெறித்திருந்த ஊரின் பாதையால் அடைக்கலம் தேடிச்சென்று கொண்டிருந்தேன். மொத்த ஊர்ச்சனங்களும் மூட்டை முடிச்சுக்களோடு நடந்து நடந்து எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் இருந்தது. அம்மா அடிக்கடி “ஹெலி வந்தால் கீழ விழுந்து படுத்திடோணும் , என்னப்பன்.” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நாங்கள் ஒரு தேவாலயத்திற்குள் சென்று அடைக்கலம் ஆனோம். அங்கு ஏற்கனவே பெருந்தொகையான சனங்கள் குவிந்திருந்தனர். “இதுதான் கிளாலி வேதக்கோயில்” என்று அம்மா சொன்னாள். நான் பதுங்குகுழிக்குள் பிறந்து, இடப்பெயர்வில் வளர்ந்து, இனப்படுகொலைக் களத்தில் மீதமிருந்த ஈழத்தின் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன்.
போர் இடப்பெயர்வு காரணமாக பல பள்ளிக்கூடங்களில் படித்தேன். ஆனாலும் பள்ளிக்கூடச் சூழல் எப்போதும் எனக்கு ஒத்துவரவில்லை. நான்காம் வகுப்பிலேயே கவிதைகளை எழுதினேன்.பள்ளிக்கூடத்து சஞ்சிகையில் கவிதைகள் வெளியாகின. என்னுடைய பள்ளி ஆசிரியர்களில் பலருக்கு நன்றிக்குரியவனாக இருக்க வேண்டுமென்று நாள்தோறும் எண்ணிக்கொள்வேன். ஆசிரியர் தவசோதிநாதன் என்கிற ஆசிரியப் பெருந்தகை என் வாழ்வில் நிகழ்த்திய குறுக்கீட்டினால் தான் ஆளானேன். நானொரு கல்லாகவே அவர் காலடியில் கிடந்தேன் என்றாலும் அவரது கையில் உளி இருந்தது. அவர் என்னை செதுக்கினார் என்று நினைக்கையிலும் பேறு பெற்றிருக்கிறேன். அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவன் நான். அவரே என் கலை வேட்கையைத் தீவிரப்படுத்தியவர்.
சைவத்தின் மீது தீராத பற்றுக்கொண்டதும் அதனை பற்றிக்கொள்ளவும் வழிவகுத்தது “சைவ அறநெறி வகுப்புக்கள்” அன்றி வேறில்லை. சைவ நாற்பாதங்களில் நான் தேர்ந்தெடுத்தது “சரியை” என்கிற முதலாவது படியைத்தான். சிவன் என் ஆண்டான்.
எளியனல் தீப மிடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
டளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.
சிவன் அடியார்க்கு எளியனாய் ஒழுகி, திருக்கோவில்களில் நல்ல விளக்கிட்டு , மலர்கொய்து, மெழுகி, திருவலகிட்டு, திருமுறைத் திருப்பதிகம் பாடியபடி பொருள் சேர் புகழை ஓதி வாழ்த்தி, திருக்கோவிற்கண் உள்ள அசையா மணி போன்ற விளக்கமிக்க பெரிய மணிகளை அடித்தல், திருமுழுக்குக்கு வேண்டிய திருத்தநீர் முதலியன கொணர்தல் என்று திருத்தொண்டு புரியும் தாசமார்க்கத்தை எளியேன் தீவிரமாக ஆக்கிக்கொண்டேன். நான் உலகியலில் அம்மாவின் பிள்ளை. சைவத்தில் அப்பரின் பிள்ளை. பதிகங்களை வாசித்து, பொருள் விளங்கி ஓதவும் பயின்றேன். பண்ணிசை கற்றேன். “சைவமும் தமிழும்” என்பது வெறுமென இரண்டு சொற்களால் ஆனதல்ல, அதுவொரு பண்பாட்டு எழுச்சியின் முன்வைப்பு என்று உணர்ந்தேன். “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற அப்பரின் இந்தத் தேவார வரியை ஈழப்போராட்டம் காசி ஆனந்தன் வரிகளாக நினைத்துக் கொண்டது.
சைவத்தொண்டுகள், பிரசங்கங்கள் , பதிகம் ஓதுதல், பிள்ளையார் கதை படித்தல், திருவெம்பாவை ஊருலா என வாழ்வு கொஞ்சம் குளிர்ந்துமிருந்தது. போர், இடப்பெயர்வு, அமைதி, இயக்கம், இராணுவம், படுகொலைகள், உரிமை, ஒடுக்குமுறை என்பவற்றோடு வாழவும் வேண்டியிருந்தது. உரிமைக்காக குரல் எழுப்புபவர்களும், உயிர் துறப்பவர்களும் பூசிக்கவேண்டியவர்கள் என்று கருதினேன். ஒடுக்குமுறைக்கு எதிராக தனது கையை உயர்த்தி கல்லெடுத்து வீசுபவர்களை ஆராத்திக்கலாம் என்று தோன்றியது. நிம்மதியான வாழ்வுக்காய் எல்லோரும் காத்திருந்தார்கள். “கண்ணீரோடே விதைக்கிறவர்கள், கம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்று பைபிளில் குறிப்பிடுவதைப் போல தமிழர்கள் நாம் கண்ணீரோடு விதைத்துக் கொண்டே இருந்தோம். கம்பீரத்தோடு அறுக்கும் நாட்கள் வசந்தம் போல் வரும்.
2006லிருந்து கவிதைகளையும், சிறிய குறிப்புக்களையும் தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தேன். இலக்கியம் வாசிப்பதை தினப் பொறுப்பாகவே ஆக்கிக்கொண்டேன். அரசியல், இலக்கியம், போன்ற விவாதங்களில் ஆர்வத்துடன் பங்கு கொண்டேன். இலக்கியம் என்பது என்ன? போராட்டக்களத்தில் எழுதப்பட்ட கவிதைகளை வாசித்து நண்பர்கள் மத்தியில் விவாதித்தேன். என்னை இலக்கியத்தில் முழுதளிப்பது என எப்போது தீர்மானித்தேன் என்று நினைவில்லை. ஆனால் தொடர்ந்தும் எழுதி வந்தேன். பிறகொரு நாள், அந்தப் படைப்புக்கள் அனைத்தும் எங்கள் நிலத்தைப் போலவே என்னிடம் இருந்து இல்லாமல் போயின. தீயின் நாக்குகள் அவற்றைச் சாம்பலாக்கின.
புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழத்தொடங்கிய நாள் தொடக்கம் இலக்கிய வாசிப்பின் தீவிரத்தை அதிகப்படுத்தினேன். வேள்விக்கு முழுதளிக்கும் அர்ப்பணிப்போடு இலக்கியத்தைக் கருதினேன். தொடர்வாசிப்பின் மூலம் நவீன இலக்கியத்தைக் கண்டடைந்தேன். தமிழ்ச் சிற்றிதழ்களான கணையாழி, உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, குறி, தொனி என்று எல்லாவற்றையும் வாசித்து உருவாக்கிகொண்டேன். எனக்கு இவற்றையெல்லாம் அறிமுகப்படுத்தியவர் நான் அப்பா என்றழைக்கும் புருஷோத்தமன் அவர்களே. அவருடனான இலக்கிய உரையாடல்கள் மறக்கமுடியாதவை. தீவிர இலக்கியப் பாதையில் என்னை கைப்பிடித்து அழைத்து வந்த தலைசிறைந்த இலக்கிய ஹிருதயர் அவர். அவரின் மகன் தான் அருவி திரைப்பட இயக்குனர் அருண்பிரபு.
நான் பலவிதமான கொந்தளிப்பில் இருந்த நாட்கள் அவை. உடல்ரீதியாக உளரீதியாக மருத்துவ சோதனைகளை செய்து கொண்டிருந்த காலம். என்னை ஆற்றுப்படுத்தும் மனிதர்களை சந்திக்க காத்திருந்தேன். அதில் முதன்மையானவர் புருஷோத்தமன். என்னோடு நெருங்கிப்பழக விரும்பிய சகோதாரனாகவும் தோழனாகவும் எழுத்தாளர் ஜீவகரிகாலன் என்னைச் சந்தித்தார். அவர் இலக்கியம் பற்றிய விவாதங்களையும், கோட்பாடுகளையும் என்னிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.
வாசிப்பதற்கு புத்தங்களை பரிந்துரை செய்து கொண்டே இருந்தார். போர் இலக்கியம் உலகளாவிய ரீதியில் எப்படியெல்லாம் உருவாகி வந்திருக்கிறது என்று பேசுவார். போரை – பேரழிவை முன்னிறுத்தும் ஓவியங்கள் குறித்து என்னிடம் பேசினார். உண்மையில் அந்நாட்களில் ஜீவகரிகாலன் என்கிற ஒருவரை சந்தித்தது என்னுடைய நல்லூழ். பின்னர் இரவிரவாக கவிதைகளைப் பேசிக்கொண்டே இருப்போம். நமக்கிடையில் இருந்தது எல்லாம் வெளிச்சமான வார்த்தைகள். ஆனால் நீ கடந்து வந்த இருளைப் பேசவேண்டுமென ஓதிக்கொண்டே இருந்தார். ஜீவகரிகாலன் வழியாகவே எனக்கு முதல்நிலை வாசகத் திரள் ஏற்பட்டது. எல்லோரும் என்னைத் தம்பி என்று அழைத்தார்கள். பின்நாட்களில் யாவரும் நண்பர்களாக ஆகியவர்கள் அனைவருக்கும் நான் தம்பி அகரமுதல்வன் தான். கவிஞர் வேல்கண்ணன் பரிந்துரைத்த புத்தகங்களை வாசிப்பதே எனது தலையாய வேலையாகப் பார்த்தேன். யாவரும் நண்பர்கள் – என்னுடைய குடும்பம் ஆனார்கள்.
“அத்தருணத்தில் பகைவீழ்த்தி” கவிதை நூலுக்கு ஜெயந்தன் விருது வழங்கப்பட்டது. என்னுடைய எழுத்தூழியத்திற்கு புலம்பெயர்வு வாழ்வில் கிடைத்த முதல் விருது. எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்பட்ட அந்த விருதினை பெற்றுக் கொண்டு நான் ஆற்றிய அந்த உரையில் ” இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள், நவீன கவிதையின் கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்று எனக்குத் தெரியும். நடுவர்கள் ஒரு சிறுவனை ஊக்குவிக்கும் முகமாக இதனை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன்” என்று பேசினேன். பிறகு ஜெயந்தனின் மகன் ஓவியர் சீராளனோடு நட்பு வளர்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே ஜெயந்தனின் கதைகளைத் தேர்ந்தெடுத்தேன்.
“அறம் வெல்லும் அஞ்சற்க ” கவிதைத் தொகுப்பு வெளியான நாட்களில் பலரின் கவனமும் ஊக்கமூட்டலும் வந்து சேர்ந்தது. அறிஞர் கோவை ஞானி என்னை அணைத்து ஆசிர்வதித்தார். அந்த நூல்வெளியீட்டு விழா பெரியார் திடலில் உள்ள”அன்னை மணியம்மை” அரங்கத்தில் நடந்தது. கவிஞர் குட்டி ரேவதி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இலக்கிய கவனத்தை அந்த நூலின் மீது சரியாக முன்வைத்தார்கள். அந்தக் கவிதை தொகுப்பினை வாசித்த எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உணர்வு மேலிடப் பேசினார். பிறகு அவருடன் நெருக்கமான நட்பு தோன்றியது. ஆற்றுப்படுத்தும் லாவகம் தெரிந்த மனிதர் அவர். என்னுடைய கொந்தளிப்பையும் வெறுமையையும் புரிந்து கொண்ட மூத்த அண்ணன் என்று பாரதி கிருஷ்ணகுமாரைச் சொல்லலாம். என் வாழ்வு நெடுக கலந்த ஒரு மானுடன் பாரதி கிருஷ்ணகுமார். நான் கவிதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதில் அவருக்கு உடன்பாடு கிடையாது. “கதை எழுது தம்பி” என்பார். நான் தலையை மட்டும் அசைத்துவிட்டு இருப்பேன்.
பின்னர் ஒரு படத்திற்கு வசனம் எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அந்த படப்பிடிப்பில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்களோடு அமர்ந்து பேச வாய்ப்புக் கிட்டியது. அந்தச் சந்திப்புத் தான் என்னைப் புனைவுக்குத் தள்ளியது. வேலா ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டே இருந்தார். “முதல்வன் புனைவு எழுதுங்கள், நீங்கள் தான் எழுதவேண்டும். தாமதிக்காமல் எழுதத் தொடங்குங்கள்” என்றார். அதன் பிறகுதான் கதைகளை எழுதத் தொடங்கினேன்.
என்னுடைய முதல் சிறுகதையான ” பைத்தியத்தின் தம்பி” உயிர் எழுத்து சிற்றிதழில் வெளியானது. எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அழைத்துப் பேசினார். இனப்படுகொலைக்குப் பின்பான இலக்கியத்தில் உங்களுடைய கதைகள் பெயர் பெறப்போகின்றன என்றார். ஒரு முன்னோடியின் தட்டிக்கொடுத்தலாக அதனை எடுத்துக் கொண்டேன். அடுத்த கதை “நிலமதி” ஆனந்த விகடன் இதழில் வெளியானது. பாரதி கிருஷ்ணகுமார் மூலமாக ஆசிரியர் ரா.கண்ணன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். கதையை அனுப்பி அடுத்தடுத்த வாரமே வெளியானது என்று நினைவு. பிறகு கணையாழி இதழில் தொடர்ச்சியாக எழுத வாய்ப்புக் கிடைத்தது. ஆசிரியர் ம.ராஜேந்திரன் அவ்வளவு உறுதுணையாக இருந்தார். கணையாழி ஒரு சிற்றிதழ் மட்டுமல்ல, ஒரு இலக்கியப் பண்பாட்டு மரபு என்பதை அறிவேன். தமிழ் இலக்கியத்தில் கணையாழி தொன்மம். கணையாழி அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் அப்படித்தான் எண்ணியிருக்கிறேன்.
நான் எழுதுவது ஒருவகையில் வரலாற்று அவசியமென எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் தனிப்பேச்சில் சொன்னார். என்னுடைய இரண்டாம் லெப்டினன்ட் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் பிரபஞ்சன் பேசியது அதன் நீட்சியாகவே அமைந்தது. மொழிபெயர்ப்பாளர் அகிலன் எத்திராஜ் அவர்கள் சென்னையில் வசித்த நாட்களில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து என்னுடைய கதைகளைப் பற்றி உரையாடி, அதன் உள்ளார்ந்த கொதிப்பை வார்த்தைகள் எப்படி வெளிப்படுத்துகின்றன என்று சொல்லி உற்சாகப்படுத்துவார்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னுடைய கதைகளைப் பற்றி எழுதி புதிய தன்மையில் இலக்கிய கவனத்தை உருவாக்கினார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்னுடைய பாட்டன். அவர் என்னைப் பார்த்துக் கொள்கிறார். என்னுடைய தொடக்க கதைகள் இலக்கிய ரீதியாக பலவீனமாக இருந்த போதும், அதனை சுட்டிக்காட்டி என்னைச் செம்மைப் படுத்தியவர். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய கதைகள் என்னை வெகுவாகப் பாதித்தன. என்னுடைய முதல் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதி துணை நின்றார். எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் என்னுடைய கதைகள் குறித்து எழுதிய முன்னுரையே இன்று என்னுடைய படைப்புலகத்தின் ஒட்டுமொத்த சித்திரமாக வாசகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் என்னுடைய இரண்டு சிறுகதைகளை தனது தளத்தில் வெளியிட்டு அதுகுறித்து விவாதிக்கப்பட்ட கடிதங்களையும் பிரசுரம் செய்தார். அந்தக் கதைகள் வெளியானதன் பின்னர் என்னுடைய கதைகள் அதிகமான வாசகர்களைச் சென்றடைந்தது. விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பின் 2022ம் ஆண்டு கலந்துரையாடல் அமர்வில் விருந்தினராக அழைக்கப்பட்டேன்.
2014 முதல் ஆகுதி -பதிப்பகத்தை நடத்தி வருகிறேன். மிக மிகக் கூர்மையான இலக்கிய நிகழ்வுகளை “ஆகுதி” ஒருங்கிணைக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் சென்னையில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டண உரை நிகழ்வினை ஆகுதி மூலமாக முன்னெடுத்தேன்.