சொந்தக்கிராமத்திற்கு செல்வதென முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அதிகாலைக்கு முன்பாகவே சைக்கிளில் புறப்பட்டேன். இடம்பெயர்ந்து வீதிகளின் இருமருங்கிலுமுள்ள வயல்களில் சனங்கள் கூடாரம் அமைத்து உறங்கியிருந்தனர். வட்டக்கச்சியையும் தர்மபுரத்தையும் இணைக்கும் பாதையில் சைக்கிளை வேகமெடுத்து உழக்கினேன். குன்றிலும் குழியிலும் துள்ளிப்பாய்ந்தது. வீட்டில் என்னைத் தேடும் போது, நான்கைந்து நாட்களாக கடுமையான மோதல் நடைபெற்ற உக்கிரமான போர்க்களமாயிருக்கும் சொந்தக்கிராமத்திற்குள் புகுந்துவிடுவேன். எல்லையிலேயே போராளிகள் மறித்து திருப்பியனுப்பக்கூடும். வட்டக்கச்சியை ஊடறுத்து இரணைமடுவை அடைந்தேன்.  அங்கிருந்து இன்னும் அரைமணி நேரம் செல்ல வேண்டியிருந்தது. சூனியம் எழுப்பிய புழுதியில் வெறுமை குடித்திருந்தது ஊர்.

போராளிகளின் நடமாட்டம் தெரிந்தது. கனரக ஆயுதத்தைத் தாங்கிய வாகனமொன்று விரைவொலியோடு போனது. எறிகணைகளால் சேதமுற்ற மரங்களில் புள்ளினங்கள் இசைத்தன. போராளிகள் இருவர் மரங்களடர்ந்த பகுதியில் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் சைக்கிளை நிறுத்தினேன். “எங்கே போகிறீர்கள்?” என்று அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே போகுமிடம் சொன்னேன். “கடுமையான சண்டை நடக்கிற இடம். இஞ்சையெல்லாம் வரக்கூடாது. திரும்பிப் போங்கோ” என்றனர். “இப்போதுதான் சண்டை நடக்கவில்லையே, கொஞ்சத்தூரம் தானே இருக்கிறது. போய்விட்டு மதியத்திற்குள் திரும்புகிறேனே” என்றேன். இல்லை நீங்கள் உள்ளே செல்லமுடியாது என்று அழுத்தமாகச் சொன்னார்.

சைக்கிளைத் திருப்பினேன். எனக்குத் தெரிந்த ஒரு கள்ளப்பாதையிருக்கு, அதால போனால் முறிகண்டிக்கு கிட்டவா போய்டலாம் என்று தோன்றியது. மணல் அடர்ந்திருந்த பாதை. சைக்கிளை உழக்கமுடியாது போனது. நடக்க ஆரம்பித்தேன். திரும்பி வரும்போது சைக்கிளை எடுக்கலாமென புதருக்குள் மறைத்து வைத்தேன். நான் சொந்தக்கிராமத்திற்குள் நுழையும் போது விடிந்தது. கோயில் கிணற்றில் நீரள்ளிக் குடித்தேன். நாவல் மரத்தின் கீழிருந்த வீரபத்திரர் பீடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் குழுமிப்பறந்தன. அணில்கள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. “போரைச் செவி கொள்ளாத உயிரினங்களின் நித்தியம் முறையீடற்று புலருகிறது போலும்!”. இன்னும் இரண்டு குச்சி ஒழுங்கைகள் தாண்டினால் அவளுடைய  வீடு வந்துவிடும். நான் நடக்கத் தொடங்கினேன். நினைவென்னும் தீத்தாழியில் கால்கள் பதிகின்றன. உடல் மீது காட்டுத்தீயின் சுவாலை. இதயம் சக்கராவக புள்ளாய் வருந்துகிறது.

எங்கள் வீட்டின் முற்றத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்து பள்ளமொன்று தோன்றியிருந்தது. அந்தப் பள்ளத்தினுள்ளே இறங்கி நான்கு குட்டிகளை ஈன்றிருக்கும் நாயின் தாய்மை வாசம் போர்முனையின் கந்த நெடியை அற்றுப் போகச்செய்திருந்தது.  வீட்டின் அடுப்படி பகுதி மிச்சமிருந்தது. ஏனைய பகுதிகளை தீயுண்டிருந்தது.  பள்ளத்திலிருந்த நாய்க்குட்டிகளைப் பார்த்தேன். கண்விழித்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும். வாயில் கறுப்பு விழுந்த வெள்ளைக்குட்டியொன்று தலையுயர்த்தி என்னையே பார்த்தது. துக்கத்தில் வெந்து தகிக்கும் வீட்டிற்குள் நுழையவே மனம் ஒப்பவில்லை. ஆசை ஆசையாக அம்மா வளர்த்த மல்லிகைப் பந்தலின் அஸ்தியில் துவக்குச் சன்னத்தின் வெற்றுக்கோதொன்று  கிடந்தது. அதுதான் நம்நிலத்தின் விதிமலர். பற்றுவதற்கு எந்தத் துரும்புமற்று எங்ஙனம் இந்த ஊழியைக் கடப்போமோ! “கடப்போமா?” மீண்டும் என்னையே கேட்டுக் கொண்டேன்.

எங்களுடைய வீட்டிலிருந்து பிரதீபாவின் வீட்டுக்கு ஒரு ஒழுங்கை தாண்டவேண்டும். அங்குதான் போகவேண்டும். அதற்காகவே இவ்வளவு தூரம் வந்தேன். என்னைப் போராளிகள் யாரேனும் கண்டுவிட்டால் முதலில் சந்தேகப்படுவார்கள். அரச ஆழ ஊடுருவும் படையணிச் சேர்ந்தவர் என சுற்றிவளைத்துப் பிடிக்கவும் செய்வார்கள். எது நேர்ந்தாலும் சந்திப்பேன். எது நேர்ந்தாலும் தாங்குவேன். பிரதீபா!

கிளிநொச்சி முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற கலைவிழாவொன்றிலேயே பிரதீபாவை முதன்முறையாக சந்தித்தேன். கரம் சுண்டல் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். இரட்டைப் பின்னலோடும் சிறுத்த நெற்றியில் பிறை போன்றதொரு பொட்டும் தரித்திருந்த அவளுடைய கண்கள் நித்திய அதிருப்தியால் சோர்ந்திருந்தன. எதுவும் கைகூடாத நலிவின் பாரத்தில் அவளது முகம் அழுந்தியிருந்தது. படபடப்பில் தத்தளித்து வெளியேற்றும் மூச்சை விடவும் சிரமப்படுகிறாள் என்றே தோன்றியது. அவளோடு கதைக்க விரும்பியும் சூழல் தரிக்கவில்லை. பெற்றோல் மாக்ஸ் விளக்கு வெளிச்சம் சற்று மங்கிப் போனது. அதற்கு காற்று அடிக்கவேண்டுமென சொன்னேன். “அப்பா வருவார்” என்றாள்.  எனக்குப் பின்னால் வந்தவர்களும் கரம் சுண்டல் வாங்கிச் சென்றனர். பிரதீபாவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளுக்கு ஏதோ குழப்பமும், யோசனையும் இருந்தது. “உங்களுக்கு என்ன வேணும்” கேட்டாள். “இஞ்ச என்ன றியோ ஐஸ்கிரீமா விக்கிறியள். கரம் சுண்டல் தானே!” என்றேன். “இவ்வளவு நேரம் இதில நிண்டு, இதைத் தான் கண்டுபிடிச்சனியளோ” சீண்டினாள். “இல்லை, நிறையவற்றை கண்டுபிடிச்சனான் ஆனால் இதைமட்டும் தான் சொல்ல ஏலும்” என்றேன். தன்னுடைய ஆடையை ஒருமுறை திருத்தம் பார்த்தபடி, “இதில இப்பிடி நிக்காதையுங்கோ, கொஞ்ச நேரம் பாப்பன் இல்லாட்டி காவல்துறையிட்ட போய் சொல்லிப்போடுவன்” என்றாள். முற்றவெளி மைதானத்தில் தமிழீழ இசைக் குழுவினர் பாடல் இசைத்துக் கொண்டனர். பாடகர் சுகுமார் தன்னுடைய கம்பீரக்குரலால் திரண்டிருந்த சனங்களின் ரத்த நாளங்களில் இனமானம் ஏற்றிக்கொண்டிருந்தார். இரவு ஏக்கமுற்று கொண்டாடிக் களிப்புறும் சனங்களைப் பார்த்தது. இங்கிருந்து போகிறீர்களா இல்லையா என்பதைப் போல சைகையால் கேட்டாள். இதற்கு மேலும் நின்றால் காவல்துறையிடம் சென்று சொல்லக்கூடுமென அஞ்சினேன். அங்கிருந்து விலகத்தயாரானேன். “நீங்கள் எந்த இடம்?” கேட்டேன்.

“ஏன் வீட்ட வந்து எதுவும் நிவாரணம் தரப்போறியளோ”

“இல்லை, சும்மா கேட்டனான்”

“ஒருத்தற்ற ஊரையோ, வீட்டையோ சம்பந்தமில்லாம கேக்கிறது சரியில்லை. உங்களுக்கு நாகரீகம் தெரியாதோ”

“இல்லை எனக்கு நாகரீகம் தெரியாது, நீங்கள் எந்த இடம்” என்று மீண்டும் கேட்டதும் சிரித்துவிட்டாள்.

“நாலாம் கட்டை. முறிகண்டி அக்கராயன் ரோட்டில இருக்கு” என்றாள்.

அப்பிடியா! அங்குதான் எங்களுடைய புதுவீடும் இருக்கு. அடுத்த கிழமை குடிபூருகிறோம்” என்றேன்.

“அங்க எங்க”?

“நாலாம் கட்டை சேர்ச் இருக்கல்லோ. அதுக்கு பின்னால இருக்கிற குடியிருப்பு”

“இயக்க குடியிருப்பு, அதுதானே” என்றாள். ஓமென்று தலையசைத்தேன். அங்கிருந்து ஒரு ஒழுங்கை தாண்டினால் எங்களுடைய வீடு என்றாள்.

அந்த வீட்டிற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

பிரதீபாவின் கொட்டில் வீட்டுக்கு முன்பாக சிவலைப் பசு செத்துக் கிடந்தது. குண்டுச் சிதறல் கிழித்த வயிற்றை இன்னும் அலகால் கிழிக்கும் காக்கைக் கூட்டம் கரைந்து கரைந்து பொருதின. வீடு அப்படியே இருந்தது. போரில் சேதமற்றுக் கிடக்கும் வீட்டைப் பார்ப்பது தொந்தரவானது. எஞ்சுதலின் சுகம் சுமையானது. வீட்டிற்குள் நுழைந்தேன். பரணில் ஒரு கோழி பதுங்கித் தூங்கியது. வீட்டின் வலது மூலையில் அடைகிடக்கும் கோழி இன்றோ நாளையோ குஞ்சுகளைக் கண்டுவிடும். வீட்டின் வெளியே கரம் சுண்டல் வண்டி சாய்த்துவைக்கப்பட்டிருந்த பிலா மரத்தின் கீழே அரணைகள் ஓடிச் சென்றன. அவளுக்குப் பிடித்தமான கடதாசிப் பூ மரம் சடைத்து மலர்ந்திருந்தது. உதட்டில் எப்போதும் வைத்து பூசிக்கொள்ளும் சிவந்த பூக்கள். வீட்டின் பின்னே ஒற்றையடிப்பாதை வழியாக நடந்து சென்றேன்.

“பிரதீபா! இப்படித்தான் யாருமற்ற பூமியில் நீயும் நானும் வாழவேண்டுமென ஆசைப்பட்டாய் அல்லவா?” எவ்வளவு அபத்தச் சூனியமந்த ஆசை. நீயுறங்கும் திசையோடி வருகிறேன். உன் மீது கனமாய் ஏறியிருக்கும் மண்மேட்டின் அருகமைந்து கதைக்கலாமென தவிக்கிறேன். கணக்கற்ற நம் கூடல் பொழுதுகளை பிரிவு பழிக்கிறது. ஆழ் துயிலில் என் தலை அறுபடும்வரை ஓர் கனா நீள்கிறது. நீயே! பரந்த பகலும் இரவும். உன்னுடைய சவத்தின் மீது அழுது புரண்டது நானல்ல. என்னுயிர். அது உன் மூச்சற்ற உடலில் பூசப்பட்ட வாசனைத் திரவியம்.

அவளைப் புதைத்த மேடு, கொஞ்சம் மண்ணிறங்கி இருந்தது. அதன் மீது படுத்துக் கொண்டேன். அவளை மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டேன். அவளருளாலே அவள்தாள் வணங்கினேன். அவள் நாமம் மறந்திலேன். பிரதீபா! உன்னுடைய மகிமையைப் பாடியும், பரசவமாய் ஆடியும் யாருக்கும் சொல்ல விரும்பேன். நீ என்னுடைய மலையில் ஊறிய சுனை. உன்னால் குளிர்ந்தவன். எப்போதும் நீ சொல்வதைப் போலவே நீயற்றுப் போன இத்தனை நாட்களில் என்னை நானே எரித்துக் கொண்டிருக்கிறேன். முகில் கிழித்து எனை அணைக்கும் ரகசிய மழை நீ. இவ்வளவு போர் பிரகடனங்களுக்கு மத்தியில் உன்னுடல் மீது புரண்டு படுப்பதில் வெறுமை அழிகிறது. ஆறுதல் பெருகுகிறது. உளத்தில் தந்திகள் அதிர்ந்து உடலில் ஸ்வரம் தொனிக்கிறது. பிறவிச் சுமையென எம்மைப் பீடித்திருக்கும் இந்தப் போரிடம், நாம் தோற்றுப் போகோம். உண் புதைமேட்டில் நான் வருவதற்கு  முதற்கணம் வரை ஒரு வண்ணத்துப்பூச்சி இருந்து பறந்தது. அந்த வண்ணத்துப் பூச்சியை நான் அடையாளம் கண்டேன். அன்றைக்கு நாம் பாலைப் பழக்காட்டிற்குள் உதிர்ந்திருந்த போது உன்னுடைய இடது முலைக் காம்பில் வந்தமர்ந்த மஞ்சள் நிறப் வண்ணத்துப்பூச்சி! இதோ இப்போது துளிர்த்து இறங்கும் மழையின் துளிகள் அன்றைக்கும் பெய்தவை தானே! உனக்கு நினைவிருக்கிறது அல்லவா?

அது காமம் எறிந்த அந்திப்பொழுது. நறுமணத்தின் கனிச்சுளைகள் காற்றில் உரிந்து கரைந்தன. உன்னுடையவை என்றோ, என்னுடையவை என்றோ எதுவுமற்ற சரீரங்கள். இலைகளால் சடைத்த தருக்களின் அசைவுகளில் ஒரு லயம். என்னை உன்மீது உருகுமொரு மெழுகுவர்த்தியாய்  ஏற்றினேன். நீயொரு சுடர் விரும்பி. என்னைத் தீண்டி தீண்டி ஒளி பெருக்கினாய். அழுத்தங்கள் அழிக! இறுக்கங்கள் மாய்க! போர் ஒழிக! என்றெல்லாம் நானே சொல்லிக்கொண்டேன். என்னுடைய வாயை இறுகப்பொத்தி இப்போது எதையும் எதிர்மறையாகச் சொல்லாதே! எல்லாமும் துளிர்க்கும் நேரமிது என்றாய். எங்கிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி என்று தெரியாது. உன் இடது முலைக்காம்பில் வந்தமர்ந்தது. “அடேய் கள்ளா! வாய்க்குள் வண்ணத்துப்பூச்சியை வைத்து, விளையாட்டு காட்டுகிறாய் “ என்றாய்.

“இல்லை, இது பாலைப்பழக் காட்டிற்குள் இருந்து வந்திருக்கிறது. நம்மை அது ஆசிர்வதிக்கிறது” என்றேன். அவள் முலைவிடுத்துப் பறந்த தன் கால்களில் ஏந்தியிருந்தது உருகும் ஒளி உருகாது  அணையும் சுடர் அணையாது நின்ற அந்தப் பொழுதை. “ இப்படி இருவரும் ஒன்றாக இருப்பது ஆனந்தமாக ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இது பிழையல்லவா” நீ கேட்டாய்.

“பிழைதான், ஆனால் போரைவிடவும் எவ்வளவோ சரி” என்றேன்.

புதைமேட்டில் படுத்துக்கிடந்தேன். கொஞ்சத்தூரத்தில் துவக்குச் சத்தம் கேட்கத் தொடங்கியது. எறிகணைகளை கூவி வீழ்ந்தன. சண்டை மூண்டுவிட்டது. போராளிகளின் பக்கத்திலிருந்தும் தாக்குதல்கள் தொடங்கின. நான் கடதாசிப் பூக்களை ஆய்ந்து வந்து அவளது புதைமேட்டில் வைத்து அலங்காரம் செய்தேன். எறிகணைகளும், போர் விமானங்களும் தாக்குதல் நிகழ்த்துகின்றன. இக்கணமே இவ்விடமே என்னுயிர் போகட்டுமே!

அன்றைக்கு மதியம் வரை கடுமையான மோதல் நடைபெற்றது. போராளிகள் பாதுகாப்புச் சமர் செய்தனர். ஆனால் கடுமையான இழப்புக்களைச் சந்தித்திருக்கவேண்டும். வாகனங்கள் திகில் பிடித்த காட்டு மிருகங்களைப் போல வீதியில் போயின. காயக்காரர்களாக இருக்கலாம். ஒருதொகை போராளிகளின் புதிய அணி களமுனை நோக்கி நகர்த்திச் செல்லப்படுவதைப் பார்த்தேன். படுத்து உறங்கினேன். என்னுடைய வலது கண்ணைத் தொட்டு மஞ்சள் வண்ணத்துப் பூச்சியொன்று புதைமேட்டில் அமர்ந்தது. கண்களை விழித்தேன். குப்புறப்படுத்த என்னுடைய அடிமுதுகை இரண்டு கைகளாலும் யாரோ பற்றியிருப்பது போலிருந்தது. திடுமென புரண்டு எழுந்தேன். நெஞ்செங்கும் மண் ஒட்டிக்கிடந்து. மஞ்சள் வண்ணத்துப்பூச்சி அங்கேயே தரித்தும் பாவியும் பறந்து கொண்டிருந்தது. திடுமென எறிகணைகள் பரவி வீழ்ந்து வெடித்தன. களமுனையின் பின்தள வழங்கல்களை கட்டுப்படுத்தும் முகமாக நடைபெறும் தாக்குதல் என்று விளங்கிக்கொண்டேன். நான் எங்கும் நகரவில்லை. பிரதீபாவின் புதைமேட்டின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். என்னருகிலேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியும் நானும் பிரதீபாவோடு இருந்தோம். போர் தனித்திருந்தது.

“இப்பிடி சண்டை நடக்கிற இடத்தில வந்து தனியா இருந்தது பிழையல்லவா” என்று கேட்டார், விசாரணை செய்த போராளி.

“பிழைதான் அண்ணா, ஆனால் போரை விடவும் எவ்வளவோ சரி” என்றேன்.

அந்தப் போராளி என்னைத் தன்னுடைய பதுங்குகுழிக்கு அழைத்துச் சென்றார். சண்டை ஓய்ந்ததும் பின்னால் போய்விடு என்றார். அன்றிரவு சண்டைக்கான நிமித்தங்கள் எதுவும் இல்லை. போவென்று வழியனுப்பினார். புதருக்குள் கிடந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பதுவதற்கு முன்பாக மீண்டுமொருமுறை புதைமேட்டிற்குப் போனேன். காரிருளில்  மொய்த்துக் கிடக்கும் மஞ்சள் வண்ணத்துப்பூச்சிகளின் தாலாட்டில் புதைமேடு மலர்ந்திருந்தது. நிலம் சிலிர்க்க வண்ணத்துப் பூச்சிகள் அவளின் உலராத இதழ்களில் துடிதுடித்தன. பிரதீபா…. என்றழைத்தேன். நிசிக்காற்றின் விழி விரிய புதைமேட்டிலிருந்து அவள் குரல் தோன்றியது. நான் தலையாட்டிக்கொண்டிருந்தேன்.

அந்த இரவில் நிலவு தேயவில்லை. ஆனால் போர் துயின்று விட்டது.

 

 

 

 

 

 

 

Loading
Back To Top