யிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது.

பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன.

சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார்  மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான்.

மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான்.  “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள்.

அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள்.  “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா.

சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை.

மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும்  பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான்.

சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள்.  சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது.

ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது.

சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது.

“நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார்.

“அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன்.

சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார்.

வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன.  சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு  என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின.

துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான்.

புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது.

 

 

 

 

Loading
Back To Top