பூதவராயர் கோயிலுக்குப் பின்பாகவுள்ள குளத்தில் மஞ்ஞை தனியாக குளித்துக் கொண்டிருந்தாள். மத்தியானத்தின் பலகோடி மலர்கள் நீரில் மலர்வதைப் போலொரு தரிசனம். என்னைக் கண்டுவிட்டாள். வடலிக் கூடலில் அமர்ந்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இருவரின் பார்வையும் சந்திக்கையில் இமைகொட்டாது யுகம் குளிர்ந்தது. சூரியனுக்கு அருகிலிருப்பது போல சரீரம் தகித்தது. என்னில் ஊற்றுக்கொண்டு நிரம்பித் ததும்பினாள் மஞ்ஞை. குளித்து முடித்து கரையேறி மறைப்பில் புகுந்தாள். இன்று சந்திப்பதாக திட்டமிருக்கவில்லை. விழிப்புலனற்ற கலைஞன் மடியில் கிடக்கும் புல்லாங்குழல் துளைகளில் காற்று நுழைந்து கீதம் நிறைப்பதைப் போல இந்தச் சந்திப்பு நிகழ்கிறது. காற்றில் படபடக்கும் அரச மரத்து இலையின் நிழலென மஞ்ஞை நடந்து வந்தாள். வரலாற்றின் புதிய சொல்லென ஈரத்தோடு விரிந்திருந்த கூந்தல். பறக்க எத்தனிக்கும் ஜோடிப்புறாவின் அசைவுடனும் வடிவுடனும் கொங்கைகள். பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் இவள்தான்.

எண்ணெய்க் கிண்ணக் கண்களில் திரியேற்றி என்னருகில் வந்தாள். எளிதில் மூண்டுவிடும் தீ என்னிடமிருப்பது மஞ்ஞைக்கு நன்றாகவே தெரியும். வடலிக்கூடலுக்குள் அலை பெருத்து மூர்க்கம் கொண்டோம். தஞ்சம் கோரும் தாகத்திற்கு அருந்துவதற்கு சுனைகள் பிறப்பித்தோம். மணல் ஒட்டிய சரீரங்கள் களைப்பில் மூச்செறிந்தன. வானத்தில் கனத்த மழைக்கான நிமித்தங்கள் தெரிந்தன. ஒரு துளி மஞ்ஞையின் தொப்புளில் விழுந்தது. அடுத்த துளியும் அங்குதான் நிறைந்தது. “எனக்கெண்டு மட்டும் தான் மழை பெய்யுது” என்றாள் மஞ்ஞை. எதுவும் சொல்லாமல் வானத்தையே உற்றுக் கவனித்திருந்தேன். நினைத்தது சரியாகவிருந்தது. வேவு விமானமிரண்டு வன்னி வான்பரப்புக்குள் பறந்தபடியிருந்தது.  “என்ன வண்டு சுத்துதோ” என்று மஞ்ஞை கேட்டாள். ஓமென்று தலையை ஆட்டினேன். “நானிப்ப சுட்ட பழமாய் இருக்கிறேன். கொஞ்சம் ஊதி விடுங்கோ. சட்டையைப் போட்டுக்கொண்டு வெளிக்கிடுகிறேன். வேவு விமானம் வேற சுத்துது” என்றாள். கலவிக்குப் பின் கனியும் பெண்ணின் சரீரத்தில் ததும்பும் வாசனைக்கு இரையாகுபவன் பாக்கியவான்.  மலரினும் மெலிது காமம் சிலரதன், செவ்வி தலைப்படுவார் என்றால் நானும் மஞ்ஞையும் சிலரே. விடைபெற்றாள். வடலியிலே கள் வடியுமா! வடியட்டுமே!

மஞ்ஞைக்கு செவித்திறனில் சிரமமிருந்தது. பக்கத்தில் நின்று அழைத்தாலும் சிலவேளைகளில் கேட்காது. வன்னிக்குள்ளிருந்த சர்வதேச தொண்டுநிறுவனமொன்று பரிசோதித்து வழங்கிய செவிப்புலனூட்டும் கருவியை பயன்படுத்துவதில்லை. ஏனென்று கேட்டால், பிடிக்கவில்லை என்பாள். எனக்கும் மஞ்ஞைக்கும் நடுவில் உறவு தோன்றிய தொடக்க நாட்களில் சந்திப்பு இடமாகவிருந்தது குன்று மரத்தடிதான். ஆளரவமற்ற பகுதியது. ஊரிலிருந்து கொஞ்சத்தூரத்தில் பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையும் திடுமென அழிந்து போகும், அதன் பிறகு மூடிய காடு. அந்தக் காட்டிற்குள்தான் குன்று மரமிருந்தது. பெரியப்பாவுடன் பன்றி வேட்டைக்கு போகையில் அங்கு இளைப்பாறுவோம். மஞ்ஞை சைவ அனுட்டானங்களில் தீவிரம் கொண்டவள். மாமிசம் உண்பதில்லை. என்னை எதன்பொருட்டு சகித்துக்கொண்டாள் என்று  அறியேன். மீன், கணவாய், முட்டை சாப்பிட்டால் அவளைப் பார்க்கப் போவதில்லை. முத்தமிடாமல் அருக்களிப்பாள். ஐயோ, வெடுக்கடிகுதென முகம் சுழிப்பாள். பன்றிகளை வேட்டையாடுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. தெய்வத்தின்ர அவதாரமென பிரசங்கிப்பாள். இனிமேல் வேட்டைக்குப் போகப்போவதில்லையென உறுதியளிப்பேன். “உங்கட கதையை நம்பமாட்டன். உருசையான இறைச்சியைப் பார்த்தால் மஞ்ஞை நீ ஆரெண்டு கேப்பியள்” என்பாள்.

ஒருநாள் மஞ்ஞையின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவளுடைய தாயார் பசுப்பால் கொடுத்தாள். பெரியளவில் குங்குமம் தரித்திருந்த அவளது முகத்தில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடின. “நீங்கள் எந்தவூரில இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறியள் தம்பி” என்று கேட்டாள். “முகமாலை தெரியுமோ” கேட்டேன். “யாழ்ப்பாணம் போகேக்க பார்த்திருக்கிறேன்” என்றாள்.  கடைக்குச் சென்று திரும்பியிருந்த மஞ்ஞை, என்னைக் கண்டதும் திடுக்குற்றாள். ஆனாலும் உள்ளூர அதனைப் புதைத்துக்கொண்டு “என்ன, இஞ்சால் பக்கம் வந்திருக்கிறியள்” என்று கேட்டாள். “சும்மாதான்” என்றேன். அம்மா தருவித்த பசுப்பாலை முழுவதும் குடித்துமுடித்தேன். மஞ்ஞையின் தாயார் வந்த விஷயம் என்னவென்று சொல்லு என்று எனக்கு முன்னாலேயே நின்று கொண்டிருந்தார் என்பது விளங்கியது. “எங்கட வீட்டில வடகம் போட்டு விக்கிறம். அதுதான் ஒவ்வொரு வீடாப்போய் ஓர்டர் எடுக்கிறேன். உங்களுக்கு எதுவும் தேவைப்படுமோ” என்றேன். தாய் என்ன சொல்லப்போகிறாள் என்பதை மஞ்ஞை திகிலுடன் பார்த்தாள். நான் கதிரையிலிருந்து எழுந்து நின்றேன். “நீங்கள் இடம்பெயர்ந்து வரேக்கை, உங்கட ஊரிலயிருந்து வேப்பம் பூ கொண்டு வந்தனியளோ” என்று தாயார் கேட்டாள். நான் இல்லையென்றோ ஓமென்றோ சொல்லாமல் படலையைத் திறந்து வெளியேறினேன். மஞ்ஞை எனக்குப் பின்னால் ஓடிவந்து மன்னித்துக்கொள் என்றாள். “இதுக்கெல்லாம் மன்னிப்புக் கிடைக்குமாவென்று அவளிடமே கேட்டேன். நான் நெடுந்தூரம் நடந்து வந்ததன் பின்னரும் வயலுக்குள் தனித்திருந்த வீட்டின் வாசலிலேயே மஞ்ஞை நின்று கொண்டிருந்தாள்.

ஏழடி உயரமிருக்கும் குன்றின் மேலே வளர்ந்து நிற்கும் காட்டுப்பூரவசு மரத்தில் மஞ்ஞை ஏறியிருந்தாள். குன்றின் கீழே பதுங்கி அமர்ந்தேன். என்னுடைய எந்த அரவமும் அவளுக்கு கேட்கவில்லை. காத்திருந்து சலித்திருக்கலாம். அந்தியின் புற்றிலிருந்து கருக்கல் தலைநீட்டியது. மரத்திலிருந்து கீழே இறங்கி குன்றிலிருந்து மெல்லக் கால்வைத்து கீழே இறங்கினாள்.  எதிர்பாராத ஷணத்தில் அவளை ஏந்தினேன். உதிரும் மலரொன்றை கிளை ஏந்துமா? ஏந்தும்! மஞ்ஞை உதிரும் மலரல்ல. என்னை இறுக அணைத்து முத்தமிட்டு நனைத்தாள். எடை கூடிய பொழுதை எந்தப் பாடுமற்றும் என்னால் சுமக்கமுடியுமென ஆசிர்வதிக்கும் அருகதை அவளிடமிருந்தது. குன்று மரத்தடியில் பரவசத்தின் சங்கீத ஸ்வரங்கள் கிளைபிரிந்து அசைந்தன. ஓசைகள் அற்ற காட்டின் நடுவே, ஆதியின் முயக்கவொலி மூப்படைந்து நிறைகிறது. குன்றெழுந்து நிற்கும் காட்டுப்பூவரசில் வீசத்தொடங்குவது காற்று அல்ல. மஞ்ஞையின் மூச்சு. அவள் கண்களில் வழிவது கண்ணீரா! எனக்குள் அதிரும் தந்திகளை இவளே இயக்குகிறாள். ஒரு எழுத்துப்பிழையின் பிடிபடாத அர்த்தமென காமம் பொங்குகிறது. அழித்து அழித்துச் சரியாக எழுதும் அன்பின் ஈரச்சுவடுகள் குன்று மரத்தடியில் ஆழமாய்ப் பதிந்தன. கூவிக் கூவி அழைக்கும் தன் தொல்மரபின் பழக்கத்தை விட்டு குயில்கள் ரெண்டு எம்மையே பார்த்தபடியிருந்தன.

“எப்போது தனியாகப் பார்த்தாலும் சேர்ந்து பிணைகிறோம். ஏதோவொரு பதற்றந்தான் நம்மை வழிநடத்துகிறதா” மஞ்ஞை கேட்டாள். நதியின் ஆழத்தில் அசையும் கூழாங்கல்லென குளிர்ந்ததொரு உச்ச நொடி. அப்படியே என் நெஞ்சில் சரிந்தாள். கொங்கைகள் அழுந்த கண்களை மூடியபடி கழுத்தின் வியர்வை குடித்தாள். தொலைவில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. கண்கள் வளர்ந்திருந்த மஞ்ஞையை தட்டியெழுப்பினேன். அவள் விழிப்புற்று என்னவென்று கேட்டாள். “ஆரோ வருகினம். கதைச்சுத் சத்தம் கேட்கிறது” சொன்னேன். காதைத் தீட்டி காட்டின் தாளில் வைத்தாள்.

நான் சில மாதங்களுக்கு முல்லைத்தீவில் வதியவேண்டியிருந்தது. எதற்கென்று யாரிடமும் சொல்லக்கூடாது. மஞ்ஞையை விட்டுச்செல்லும் துயரைச் சந்திக்கவியலாது முகத்தை திருப்பினேன். தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அவளைச் சந்தித்தேன். பூதரவராயர் குளத்தடி, வடலிக்கூடல், குன்றுமரத்தடி, ஊஞ்சலாடி கட்டிடமென கூடிப்புணர்ந்தோம். “ஒரு வேலையாய் முல்லைத்தீவுக்கு போகவேண்டியிருக்கு, திரும்பிவர ரெண்டு மாசம் ஆகும்” என்றேன். மஞ்ஞை முகத்தில் தீப்பெருக்கு. “ரெண்டு மாசம் அங்க நிண்டு என்ன செய்யப்போகிறியள்” கேட்டாள். “சொந்தக்காரர் ஒருவர் படுத்த படுக்கையாகிவிட்டார் அவரை பராமரிக்கும் வேலைக்காகச் செல்லவிருக்கிறேன்” சொன்னதும், சின்ன வெறுப்புடன்  “ ரெண்டு மாசத்தில அவர் செத்துப்போய்டுவாரா” என்று கேட்டாள். மேற்கொண்டு எதனைக் கதைத்தாலும் நான் உண்மையைச் சொல்ல வேண்டி வருமென்பதால் அமைதியாக இருந்தேன். “நான் இங்கேயிருந்து உங்களைப் பார்ப்பதற்காக முல்லைத்தீவு வருவேன். விலாசத்தை தந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றாள். தருவதாகச் சொன்னேன். ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் நாமிருவரும் நிறைந்திருந்தோம். கூரைகளற்ற கட்டிடத்தின் மேலே வானம் கறுத்திருந்தது. அன்றைக்கும் முதல் துளி அவளது தொப்புளில் விழுந்தது. ஒரே மாதிரித்தான் ஒவ்வொரு துளியுமா என்றாள். ஒவ்வொரு துளியும் வேறு வேறானவை. ஒவ்வொரு துளிக்குள்ளும் எவ்வளவோ துளியல்லவா! என்றேன்.

“சரி. நாங்கள் இன்னொரு தடவை இந்த மழையை பெய்ய வைக்கலாம். ஆனால் நான் மேலிருப்பேன்”

“இரு. உன்னுடைய மழை. உன்னுடைய துளி” என்றேன்.

“எங்கட நாட்டில இந்த தரித்திரம் பிடிச்ச சண்டையெல்லாம் முடிஞ்சு, ஒரு நல்ல காலம் வந்தால் எவ்வளவு சந்தோசமாய் இருக்கலாமெண்டு நினைக்கவே ஆசையாய் இருக்கு” என்றாள்.

“நல்ல காலம் வரும் மஞ்ஞை”

கோலமயில் என்மீது அகவியது. மழை பொழியும் கார்த்திகையின் கானக வாசனை ஊஞ்சலாடி கட்டிடமெங்கும் ஊர்ந்து வந்தது.

நான் முல்லைத்தீவுக்கு வந்து சேர்ந்தேன். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து மஞ்ஞையிடம் தகவல் சொல்லிவிடுமாறு கூறினேன். நான் கொடுத்துவந்த விலாசத்திற்கு கடிதம் வந்தால், அதனை வாங்கி வைக்குமாறு சொல்லியிருந்தேன். பிறகான நாட்களில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. மூன்று மாதங்கள் கழித்து அவளிடமிருந்து வந்த கடிதங்களைப் பெற்றுக்கொள்ள விலாசம் கொடுக்கப்பட்ட வீட்டிற்குச் சென்றேன். அங்கு எந்தக்கடிதங்களும் வரவில்லையென சொன்னார்கள். கேட்கவே திகைப்பாகவிருந்தது. தொலைத்தொடர்பு நிலையம் சென்று மஞ்ஞையிடம் பேசவேண்டும் அவருடைய வீட்டிற்கு தகவல் சொல்லி வரச்சொல்லுங்கள் என்றேன். சரி என்றார்கள். நீண்ட நேரமாகியும் பதில் அழைப்பு இல்லை. மீண்டும் அழைத்தேன். அவள் வீட்டில் இல்லை என்றார்கள். நான் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு கிளிநொச்சிக்கு வந்தடைந்தேன். நாம் சந்திக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் ஓடிச்சென்றேன். எங்குமில்லை. அன்றிரவு பூதவராயர் குளத்தில் குளித்துவிட்டு நடந்து வந்தேன். மஞ்ஞை என்னை வழிமறித்து தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றாள். ஈரம் துடைக்கவேண்டும் என்றேன். “இல்லை வா, நானே துடைக்கிறேன்” என்றாள். அவள் என்னை ஊஞ்சலாடி கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள்.

“மஞ்ஞை இரவில இஞ்ச வந்து இருக்கிறது ஆபத்து. பாம்பு பூச்சிகள் கடிச்சுப் போடும்” என்றேன்.

அதொண்டும் கடிக்காது. வா… என்றாள்.

இரவின் சீவாளியை காற்றுச் சரிபார்த்தது. ஒவ்வொரு துளைகளையும் மூடித்திறந்த விரல்கள் மல்லாரி இசைத்தன. காற்றை ஊதும் தொண்டைப்பை விரிந்து சுருங்குகிறது. மூச்சு இழைந்து ராகமென தவிக்கிறது. ஸ்வரநீர் அணைசின் வழியாக இறங்கி நனைக்கிறது. அகவுகிறாள். தோகையென உடல் விரித்து அகவுகிறாள் மஞ்ஞை.

“நீ ஏன் என்னை விட்டுச் சென்றாய்” கேட்டாள்.

“நான் எங்கே விட்டுச்சென்றேன். அதுதான் வந்து விட்டேனே”

“இல்லை, நீ என்னை விட்டுச் சென்றிருக்கக் கூடாது”

“மஞ்ஞை நான் என்ன செத்தாபோனேன். திருப்ப திருப்ப இதையே சொல்லிக்கொண்டே இருக்கிறாய்”

வானத்தைப் பார்த்தபடி ஊடல் ஆடினோம். அவள் தொப்புளில் முதல் மழைத்துளி விழுந்ததும் “அய்யோ குண்டு விழுகுது” என்றாள். “உங்களுக்கு என்ன விசரே அது மழைத்துளி தான்” என்றேன்.

“இல்லை குண்டு விழுந்து கொண்டேயிருக்கு” என்றாள்

அதிகாலையில் ஊஞ்சலாட்டு கட்டிடத்தில் கண்விழித்தேன். ஆடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டேன். மஞ்ஞை எனக்கு முன்பாகவே எழுந்து சென்று விட்டாளே, அவளுடைய வீட்டிற்கு சென்றுவிட்டு போகலாமெனத் தோன்றியது. படலையத் திறந்து கொண்டு உள்ளே போனேன். வீடு பூட்டிக்கிடந்தது. கதவைத் தட்டினேன். தாயார் வந்து கதவைத் திறந்தார். மஞ்ஞை இன்னும் வரவில்லையோ என்று கேட்டேன். அவள் இனிவரமாட்டாள் தம்பி என்றார்.

“நேற்று இரவு என்னுடன் தானிருந்தாள். சாமத்தில் தான் எழுந்து வந்திருக்கிறாள்” என்றேன்.

தாயார் வீட்டின் கதவை அகலத் திறந்தபடி கதறியழுதார். மஞ்ஞையின் சிறிய புகைப்படமொன்றுக்கு முன் அசைந்தாடிக் கொண்டிருந்தது  சுடர்.

பிரபஞ்சமே அருந்தவம் செய்து ஏந்திய காற்றுச்சுடரின் அபிநயம் அணையுமோ!

 

Loading
Back To Top