சென்னை புத்தகத் திருவிழா நிறைவடைந்திருக்கிறது. வாசகர்களின் பேராதரவு இலக்கியத்திற்கு எப்போதுமுள்ளது என்கிற சாட்சியிது. புதியவர்கள் இலக்கியத்தை நோக்கி பெருமளவில் வந்துகொண்டேயிருக்கிறார்கள். இந்த ஆண்டும் சில புதிய இளம் வாசகர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. உற்சாகமும், தெளிவும் கொண்டிருந்தனர். தம் தலைமுறையை மூடியிருக்கும் சேற்றுமலையை முட்டித்திறந்து வெளியேறியவர்கள் என்பதே அவர்களின் முதற்பெருமை. சென்னையிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றும் வாசகரொருவர் தேர்ந்தெடுத்து நாவல்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் வாங்கினார். எதிர் பதிப்பகத்தில் நின்றுகொண்டிருந்த போது என்னிடம் வந்து பேசினார். நீங்கள் கூறிய சில புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன் என்றார். வாசிப்பின் தொடக்கநிலையில் யாரேனும் ஒருவரை பற்றிக்கொள்ள வேண்டும்தான். இந்த வாசகர் என்னைப் பற்றிக்கொண்டார். அவருக்கு இமையம், கண்மணி குணசேகரன், லக்ஷ்மி சரவணகுமார், தீபு ஹரி, தெய்வீகன் ஆகியோரை பரிந்துரைத்தேன். ஏற்கனவே அஜிதனின் மருபூமி தொகுப்பை வாங்கிவிட்டதாக கூறினார். தேடிக்கண்டடையும் அவா கொண்டதொரு இளைஞன். அவரைப் பார்த்து மகிழ்ந்தேன்.
இன்னொருவர் புத்தகத் திருவிழாவிற்கு வந்து என்னையழைத்தார். அவருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்யவேண்டுமென கேட்டார். ஐந்துவருடங்களாக புத்தகத் திருவிழாவில் மட்டும் சந்தித்துக் கொள்ளும் பழக்கம். அன்று என்னால் போக முடியாத சூழல். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பரிந்துரைகளைச் செய்தேன். “என்ன எல்லாப்புத்தகங்களும் காலச்சுவடு பதிப்பகமாவே சொல்லுறீங்க” என்றார். இவருக்கு அதிலென்ன நோவு என்று அறியேன். அங்கும் சில முக்கியமான மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. தந்தைக்கோர் இடம், ஆத்ம சகோதரன் எல்லாம் சிறந்த நாவல்கள் என்றேன். அங்கு சென்று வாங்கிவிட்டு புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தார். இந்த நண்பர் வருடாவருடம் புத்தகங்களை வாங்கிச் செல்பவர். ஆனால் ஒன்றையேனும் வாசிக்க எண்ணாதவர். கட்டுமானத் துறையில் பணிபுரிபவர். தன்னையொரு இலக்கிய வாசிப்பாளராக பாவனை காண்பித்து பெருமை அடைபவர். இப்படியானவர்கள் ஏராளமுள்ளனர். என்னுடைய நெருக்கமான சகோதரன் நோம் சாம்ஸ்கி புத்தகமொன்றை வாங்கினான். இவரை எதற்கு நீ வாசிக்கிறாய் என்று கேட்டேன். இல்லை இவருடைய ஆய்வுகள் எனக்கு பிடிக்குமென்றான். இரண்டு நாட்கள் கழித்து என்னய்யா எழுதி வைச்சிருக்கிறான் நோம் சாம்ஸ்கி, எதுவும் புரியவில்லை என்று தலைப்பாடாய் அடித்துக் கொண்டான். இந்தச் சகோதரனுக்கு வாசிப்பின் எளிமையான வழிகளை சொல்லிச் சலித்துவிட்டேன்.
புத்தகத் திருவிழாவானது எழுத்தாளர்களுக்கு அளிக்கும் புத்துயிர்ப்பு பெரிது. மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றுள்ள இளம் படைப்பாளிகள் வரை வாசகர்களோடு உரையாடும் நிகழ்வுகள் நடந்தவண்ணமே இருந்தன. காலச்சுவடு அரங்கில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளர் வாசகரோடு சந்திப்பு நிகழ்த்துவதை ஒருங்கிணைத்தனர். மிக அருமையான ஏற்பாடு. எழுத்தாளர் வண்ணநிலவன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், எழுத்தாளர் தீபுஹரி ஆகியோரின் சந்திப்பில் பங்கெடுத்தேன். எழுத்தாளர் அரவிந்தன் அவர்களின் புதிய சிறுகதை நூலையும், மொழிபெயர்ப்பு புத்தகமொன்றையும் வாங்கி வந்தேன். இந்த ஆண்டு உங்களுடைய புத்தகம் என்ன வந்திருக்கிறது என்கிற சடங்கியல் கேள்விக்கு, கண்காட்சிக்கு எதுவும் வரவில்லை. மார்ச் மாதம் வெளியாகவிருக்கிறது என்று பதில் சொன்னேன். உண்மையான வாசகர்கள் இப்படி அலட்டிக்கொள்வதில்லை. அவர்கள் முகஸ்துதிக்கு எழுத்தாளனோடு உரையாடுவதில்லை.
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் வழக்கம் போல பல ஆயிரங்களுக்கு புத்தகங்களை வாங்கினார். நானும் இந்த ஆண்டு அதிகமாகவே புத்தகங்களை வாங்கினேன். எப்போதும் போல எதிர், காலச்சுவடு, சந்தியா, சாகித்ய அகடாமி, என்.பி.டி ஆகிய பதிப்பகங்களில் இரண்டு நாட்கள் சென்று புத்தகங்களைத் தெரிவு செய்தேன். நூல்வனம் பதிப்பகம் மூலம் வெளியாகியிருக்கும் “நடமாடும் நிழல்” என்ற மொழிபெயர்ப்பு குறுங்கதைகள் தொகுப்பு – பரவசம் அளித்தது. வாசகனாய், எழுத்தாளனாய் மீண்டும் மீண்டும் படித்தேன். மொழிபெயர்ப்பாளர் கணேஷ்ராம் எழுதியிருக்கும் முன்னுரை மிக முக்கியமானது. அசலான மதிப்பீடு. எழுத்தாளர் தெய்வீகனின் “திருவேட்கை” சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவை ஆகுதி ஒருங்கிணைத்தது. மனதுக்கு மகிழ்ச்சியளித்த நிகழ்வு. இனிதானதொரு வரவாக கவிஞர் தேவதச்சனின் “தேதியற்ற மத்தியானம்” என்ற கவிதை தொகுப்பி தேசாந்திரி பதிப்பகம் மூலம் வெளிவந்தது. ஐந்து பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு பரிசளித்தேன்.
இந்தப் புத்தக கண்காட்சி தொடங்குவதற்கு முன்பாகவே சுருதி தொலைக்காட்சி கபிலன் என்னிடமொரு ஒப்பந்தம் செய்தார். எழுத்தாளர்களை நேர்காணல் செய்துதரவேண்டுமென அன்பு ஒப்பந்தமது. யோசனை எதுவுமின்றி சம்மதம் சொன்னேன். சுருதி தொலைக்காட்சிக்கு நான் பகிரும் நன்றிக்கடன். எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன், அ.வெண்ணிலா, சுனீல் கிருஷ்ணன், செந்தில் ஜெகன்னாதன், முத்துராசா குமார், அஜிதன் ஆகியோரை நேர்காணல் செய்தேன். கவிஞர் மனுஷ்யபுத்திரனோடு நவீன கவிதை – நவீன யுகமென கொஞ்சம் விசாலமான உரையாடல் ஒன்றை நிகழ்த்தினேன். மனுஷ்யபுத்திரனின் பதில்களில் தமிழ்க் கவிதையை முன்னிறுத்தும் அவரின் ஆளுமை கண்டு வியந்தேன். நேர்காணல் அளித்த ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் நன்றி.