
அண்மையில் கொடுமணலிலுள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களைக் காண்பதற்குப் போயிருந்தேன். ஒரு பரந்த வெளிமுழுதும் மட்பாண்டங்களின் ஓடுகள் காணக்கிடைத்தன. நம் கால் பதிந்திருக்கும் தடமெங்கும் நெடுங்காலத்தின் துண்டங்கள் என்பது மாயத்தன்மையாக இருந்தது. தமிழ் மரபில் கவிதையென்பதே தொல்லியல் தன்மை கொண்ட இலக்கிய வடிவம்தான். பெருந்தொகையானவர்களால் எழுதப்படுவதும் கவிதைகள். நவீன தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சியும் அது எழுந்துசெல்லும் உயரமும் வியக்க வைக்கினறன. இன்றுள்ள சமூக ஊடகங்களின் பெருக்கம் எழுதவிரும்பும் ஒவ்வொருவருக்கும் தளமாக மாறியிருக்கிறது. அதுவே கவிதைகள் எழுதப்புகுவோருக்கு இயல்பிலேயே ஒரு கவனம் கிடைத்துவிடுகிறது. முருகுவின் கவிதைகள் அந்தச் சூழமைவில் தோன்றியவை. விளையாட்டும் தான்தோன்றித்தனத்தின் பிசிறுகளும் இவரின் கவிதைகளுக்கு முதல் முகமென கருதலாம். இத்தொகுப்பை மனத்துள் திரியாகி ஒளிரும் எண்ணங்களின் தெறிப்புக்கள் என்பதே மிகப் பொருத்தமானதாகவும் அமையும்.
“கண்ணாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்ட
மதிலில்
உட்கார இடமற்று
அந்தரத்தில்
பாவிய
காகம்
எச்சமாய்
விதைகளை
இட்டிருக்கும்
நாளை
வேரிறங்கி
மதில்கள்
பிளக்கும்”
என்ற முருகுவின் இந்த வரிகள் அறக்கோபத்தின் வெளிப்பாடு. பறவை எச்சத்தில் விதையைக் காண்பது நிலத்தினாலும் கவி மனத்தினாலும் மட்டுமே முடியும். இதுபோன்ற நறுக்குகளுக்கு முன்னோடியாக காசி ஆனந்தன் அவர்களை குறிப்பிடலாம்.
“எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா.
ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்”
என்கிற காசி ஆனந்தனின் நறுக்குப்போலவே வடிவத்திலும், கூறுமுறையிலும் முருகு இணைந்து நிற்கிறார்.
கவிதை என்கிற வடிவம் சார்ந்த என்னுடைய அபிப்பிராயம் வேறொன்றானது. முருகுவுக்கு அதுவொரு உள்ளத்தீற்றல். மொழியில் முன்னே என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதெல்லாம் வேண்டாம் என்பார். அவருக்கு மரபுக்கவிதையோ, வானம்பாடிக் கவிதையோ, புதுக்கவிதையோ, நவீன கவிதையோ என்கிற காலங்கள் தேவையில்லை. கவிதை என்கிற பெருங்காலமொன்றில் வாழ்பவர் அவர்.
என்னுடைய நண்பரொருவர் “கவிதை என்பது மருந்து போல ஆற்றுப்படுத்த வேண்டும். கண்டல் மீது ஒத்தடம் போல வீக்கம் தணிக்கம் வேண்டும்” என்றார். அப்படியெல்லாம் கவிதையை நிர்ப்பந்திக்க முடியாது அல்லவா என்றேன். உண்மைதான். இப்படித்தான் அமையவேண்டுமென பிறர் எழுதிய கவிதையொன்றை தீர்மானிக்ககூடாது. முருகுவின் கவிதைகள் தொடக்க நிலைக்குரிய பக்குவங்களோடு இருக்கின்றன. ஆனால் அவர் அவதானிக்கும் தருணங்களும், சித்திரங்களும் நன்றாகவே உள்ளன.
“சிக்னல்
நெரிசலில்
பூச்செடி விற்கும் மாட்டுவண்டி
வண்ணத்துப்பூச்சிகளும்
காத்திருக்கின்றன
பச்சை
விளக்குக்காய்”
என்கிற கவிதையை எழுதுவது கவிஞனின் கணம். இத்தனைக்கு நடுவிலும் பாவி நிற்கிற வண்ணத்துப்பூச்சியும் நாமும் வேறு வேறல்ல. இத்தொகுப்பின் மனத்தை விவரிக்க இந்தக் கவிதையே போதுமானது.
“உதிர்ந்த சிறகில்
வந்தமர்கிற
வானம்”
இந்தக் கவிதையில் “வந்தமர்கிற வானம்” என்ற சொற்சேர்க்கை அபாரமானது. முருகு கவிதைகளில் தொடர்ந்து இயங்கினால் அவரால் நவீன கவிதைக்குள் புகமுடிந்தால் சிறந்தவற்றை தமிழுக்குத் தரமுடியுமென உறுதியாக நம்புகிறேன். எழுதுவது ஒரு தொடர் நோன்பு. அதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். கவிதைகள் எழுத நினைப்பவர்கள் மொழியைப் பயிலவேண்டும். ஆராதிக்க வேண்டும். பார்க்கும் இடமெல்லாம் மொழியின் பார்வை தோன்றவேண்டும். முருகுவிற்கு அந்தச் சாதனங்கள் எல்லாமும் உண்டு. அவர் மொழியின் கைப்பிடித்து கவிதையெனும் மங்கல உலகிற்குள் வருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். மொழியே வழியாகும் வருக!
- அகரமுதல்வன்