
இலக்கியத்தில் செயலாற்றுவது எளிதானதல்ல. மூச்சிரைக்க முன்சென்றபடியிருக்கும் தொடர் ஓட்டம் போல. தேடித் தேடி கண்டடையும் தீவிரத்தை நோன்பு போல கடைப்பிடிக்கும் பக்திமயம். மானுடத்தின் மீட்சியை வார்த்தைகளில் கட்டியெழுப்பும் பெருங்கனவை வாசிப்புத்தான் காணச் செய்கிறது. வாசிப்பளிக்கும் விசையே மகோன்னதமானது. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக என்றுமே சிறந்த இலக்கியங்களின் முன்பு, என் சிரசைப் பணிந்து எழுவேன். ஆற்றலுடைய சக்திகளின் முன்பு சரண் புகுந்து வேண்டுவேன். “எனக்கும் அருளாயோ!” என்று எழுத்து தெய்வத்திடம் இறைஞ்சுவது. அப்படியான தருணங்கள் எண்ணற்ற தடவைகள் எனக்கு நிகழ்ந்துள்ளன. அப்படியான அனுபவங்களை தந்தவர்களை கொண்டாடுவதும், அவர்களின் நற்செயல்கள் மீது ஒரு உரையாடலைச் செய்வதும் நான் செலுத்தும். உற்சவத் திருவிழாவைப் போல முன்னோடிகளைக் கொண்டாடுவது ஆகுதிக்கு பெருமை.
பத்து ஆண்டுகளுக்கு முன், ஓரிரவு இயக்குநர் ராம் அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். Sophie’s World என்றதொரு புத்தகத்தின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் வாசித்துக் காண்பித்தார். பிறகு தமிழில் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றார். ஆங்கிலத்தில் வாசித்த அதே பகுதிகளை தமிழில் வாசித்து, மொழிபெயர்ப்பாளரின் ஆற்றலையும், மொழிப்புலமையையும் வியந்தார். இனிமேல் மொழிபெயர்ப்பு ஆர். சிவகுமார் என்று பெயரைப் பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிவிடலாம் என்றார். அந்த இரவில்தான் எனக்கு ஆர். சிவகுமார் என்கிற பெயர் அறிமுகமானது.
பிறகான நாட்களில் அவருடைய மொழிபெயர்ப்புக்கள் வந்த ஆண்டுகளிலேயே வாங்கி வாசித்துவிடுவேன். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியான “மெளனப் பனி ரகசியப் பனி” என்ற சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் நூலினை வாசித்தேன். இந்தத் தலைப்புக் கதையே ஆர். சிவகுமார் அவர்கள் மொழிபெயர்த்ததுதான். அவருடைய பெருமளவிலான மொழிபெயர்ப்பு நாவல்கள் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. “மீட்சி” காலம் முதல் இன்றுவரை தொடர்ந்து தமிழுக்கு சிறந்தவைகளை உவந்தளிக்கும் மிகப்பெரும் பணியைச் செய்து வருகிறார் ஆர். சிவகுமார்.
இந்த ஆண்டின் ஆகுதி ஒருநாள் கருத்தரங்கு ஆர். சிவகுமார் அவர்களின் இலக்கிய பங்களிப்பை போற்றும் வண்ணம் நடைபெறவுள்ளது. பெப்ரவரி மாதம் இருபத்தி இரண்டாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். தமிழின் இளந்தலைமுறை படைப்பாளிகளும், விமர்சகர்களும், மூத்த படைப்பாளிகளும் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். அனைவரும் வருக!
- அகரமுதல்வன்
ஆர். சிவகுமார் மொழிபெயர்த்த நூல்கள்
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு
- லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் (மீட்சி பதிப்பகம், 1986)
- இருட்டில் மனிதர்கள் – நாவல் (Children of God, Shanta Rameshwar Rao) (Orient Longman, 1993)
- உருமாற்றம் – குறுநாவல் (Metamorphosis, Kafka, 1998) (தமிழினி, 2014)
- இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் (World Short Stories, in two collections, United Writers, 2002, Padharasam, 2017)
- இலக்கியக் கோட்பாடு (Literary Theory: A Very Short Introduction, Jonathan Culler) (Adaiyalam, 2005. )
- சோஃபியின் உலகம் – நார்வேஜிய நாவல் (Sophie’s World, Jostein Gaarder) (Kalachuvadu, 2011)
- மார்க்ஸின் ஆவி – சமூக அறிவியல் புனைவு (Marx’s Ghost, Charles Derber, Adaiyalam, 2013)
- வசை மண் – ஐரிஷ் நாவல் (Dirty Dust, Mairtin O Cadhain, Kalachuvadu, 2018)
- அந்த நாளின் கசடுகள் – ஐரிஷ் நாவல் (The Dregs of the Day (Mairtin O Cadhain, Kalachuvadu, 2021)
- என்றாலும் நான் எழுகிறேன் – மாயா ஆஞ்சலு கவிதைகள் (Still I Rise, காலச்சுவடு, US Consulate, Chennai, 2023)
- விஜயநகரம் – சல்மான் ருஷ்டி நாவல் (Victory City, காலச்சுவடு, 2024)
- கத்தி – சல்மான் ருஷ்டி (Knife, காலச்சுவடு, 2024) (அபுனைவு)