
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றில் திருமுறைகளை பாடுவதற்கு இரண்டு ஓதுவார்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு ராகம், தாளம் என்பதெல்லாம் இல்லை. திருப்புகழைக் கூட உடைத்து உடைத்து வீரவசனம் போல சொல்லி முடிப்பார். மற்றவர் அப்படியில்லை. அவருக்கு எல்லாமும் முக்கியம். “வான்முகில் வழாது பெய்க” பாடும் போது விசும்பின் துளியொன்றாவது பூமியில் விழவேண்டும். திருமுறைகளுக்கு ராகமும் தாளமும் முக்கியம் என்பார். இவ்விருவரும் என்னுடைய குருமார். இவர்கள் இரண்டு பேரும் வருவதற்கு தாமதமாகியிருந்த நாளொன்றில் திருமுறைகளை நான் பாடினேன். திருவிசைப்பாவை பாடிக்கொண்டிருந்த போது முன்னவர் வந்து சேர்ந்தார். அடுத்து பாடவேண்டிய திருப்பல்லாண்டை அவர் பாடுவர் என்று லேசாகத் தணிந்தேன். ஆனால் என்னைப் பாடுமாறு உத்தரவு சொன்னார். அதுவே இறையின் விருப்பமென எண்ணிக்கொண்டு “சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற்றேன்” எனத் தொடங்கும் பல்லாண்டைப் பாடினேன்.
பூசை முடிந்ததும் ஓதுவாரின் தாள் பணிந்து, என்னை அருளிச்செய்க! என்றேன். “நன்றாகப் பாடினாய், இனிமேல் நான் வெள்ளன வந்தாலும் நீதான் பாடவேண்டும் என்றார். ஆனால் சில மாதங்களிலேயே, நான் வேறொரு இடத்திற்கு பெயர்ந்து செல்ல வேண்டியாயிற்று. ஓதுவாரிடம் சொல்லிவிட்டுப் புறப்படுகையில் நெற்றியில் நீறிட்டு கனதியான தாளமொன்றை பரிசாகத் தந்தார். எங்கும் கோவிலிருக்கும் அங்கும் பாடுக என்றார். நான் அந்தத் தாளத்தோடு அவ்விடம், அச்சூழல் விட்டுப் பெயர்ந்தேன்.
எங்கு திருமுறை இசைத்தாலும் அந்தத் தாளம் என்னுடனே இருந்தது. அவருக்கு எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் நீங்கள் தருவித்த தாளம் என்னிடம் பத்திரமாக இருக்கிறதென குறிப்பிட மறப்பதில்லை. “அறிவிலா வெறுமைச் சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் நிறைதரு கருணா நிலையமே” என்ற வரிகளைப் போல என்னுடைய அறியாமைகளைப் பொறுத்து குருவால் அளிக்கப்பட்ட இந்தத் தாளம் எனக்குச் சிறப்பைத் தந்தது. அவர் எழுதிய பதில் கடிதம் ஒன்றில் தாளத்தை பத்திரமாக வைத்திருப்பதைப் போலவே காலம் எம்மை பாதுகாக்கவேண்டும். “காக்கும் என் காவலனே” என்று பாடுகிற பொழுதெல்லாம் இறைவனிடம் அதைத்தான் வலியுறுத்துகிறேன் என்றார்.
அந்தக் கடிதம் கிடைத்து இரண்டு நாட்களில் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது கோவில். எல்லாமும் உடைந்து சிதிலமான கோவிலுக்குள் நான் தாளத்தை மட்டும் தேடித் திரிந்தேன். சிறிய துண்டு, சின்னிவிரல் அளவுக்கு கீறல் போல உருமாறி இருந்தது. இடிபாடுகளுக்குள்ளும், கந்தக நெடிக்குள்ளும் தாளத்தை தேடித் தேடி சேர்த்தேன். பித்தளை துகள்களாக உள்ளங்கையில் ஏந்தி நின்றேன். சுற்றி நின்றவர்கள் என்னைப் பார்த்து ஏளனம் செய்தார்கள். பீஸ் பீஸா கிடக்கிற பித்தளையை எடுத்துக் கொண்டுபோய் என்னடா செய்யப்போகிறாய் என்றார்கள். திருமுறை ஓதுவேன், தாளம் இசைப்பேன் என்றேன். இதனை எப்படி தாளம் ஆக்குவாய் என்றார்கள். நான் சிருஷ்டி. காலம் அழிப்பதை, புதிதாய் ஆக்கும் கனவே நான் என்றேன்.
இன்றைக்கு அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக்கதைகளை வாசிக்கும் போது காலம் அழித்ததை, மறுபடியும் ஆக்குவதற்கு படைப்பாளியால் முடியும் என்பது இன்னுமே உறுதியாகிறது. நான் பித்தளை துகள்களை கையில் ஏந்தியபடி வீட்டிற்குச் சென்று ரங்குப் பெட்டியில் அதனைப்போட்டேன். பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் “எழாலை ஓதுவார் தந்த தாளம், கிபிர் அடியில சுக்கு நூறாகிட்டுது அதோட தூள்” என்றதும் “சேர்த்து வை. பிறகொரு காலத்தில நினைச்சுப் பார்க்க இது தேவைப்படும்” என்றாள். அ. முத்துலிங்கத்தின் இந்தக் கதைகள் ரங்குப்பெட்டியில் உள்ள அம்மாவின் சீலையைப்போல, அம்மம்மாவின் முத்துச்சங்கிலி போல ஒரு நிலத்தின் காலத்தை, அவர்களின் அன்றாடத்தைச் சுமந்து நிற்கின்றன.
அ.முத்துலிங்கம் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கிருப்பது தனியான தோரணை. அவரது கதைசொல்லல் திறனுக்கும் அதே தோரணை. ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் அ. முத்துலிங்கம் முக்கியமான கதைசொல்லி. என்னுடைய வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் இவர் கதைகளை ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு கதைகளின் சாரத்தைக் கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது. அ. முத்துலிங்கத்தின் தாயகக் கதைகள் என்றொரு எண்ணமே அங்கிருந்துதான் எனக்குள் பரவியது.
அழிந்தொழிந்த வம்சமொன்றின் பெயர் பொறித்த செப்பு பட்டயம் போல, செல்லரித்து எஞ்சிய ஓலைச்சுவடியென இந்தக் கதைகள் இன்றுள்ள ஈழத் தலைமுறைக்குத் தோன்றும். சாம்பல் பூத்த வீதிகள் மண்ணில் தோன்றுவதற்கு முன்னர் எழுந்த கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அ. முத்துலிங்கத்தின் எழுத்து விஷேசமென்றால் அது பகிடியோ தகவல்களோ மட்டுமல்ல. என்றைக்கும் மாறாத கதைசொல்லியின் குரல்.
எங்கும் இறுக்கம் தேடாத கலையின் மொழி. கவித்துவ தருணங்களை நிர்ப்பந்தமாக உருவாக்க எண்ணாத புலமை. அவரது யாழ்ப்பாணம் தான் எனது தாயகம். அவரது செவ்வியல் பின்னணிதான் எனது. ஈழரின் இலக்கியத்திணையில் அ. முத்துலிங்கம் முதுகிழவனும் மூதாயும். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் அவர் பல கண்டங்களை அறிவித்த ஏகன்.
ஒருமுறை அ.முத்துலிங்கத்தின் கதைதொடர்பான விவாதமொன்றில் புதிய தகவல்கள், கொஞ்சம் புத்திசாலித்தனம் இதனைக் கடந்து என்ன இருக்கிறதென விமர்சனம் எழுந்தது. அப்போது “வெறுமென தகவல்களின் திரட்டாக மட்டுமே அ. முத்துலிங்கத்தின் கதைகள் எஞ்சியதில்லை. மாறாக அது உருவாக்கி எழுப்புகிற உலகம் நம் குட்டியான அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. அகமென்ற ஒன்றை புறத்தால் விவரிக்கும் அசாதாரணம், எல்லைகள் கடந்து மனிதர்களின் உலகை தமிழுக்கு விரிவாக அழைத்துவந்த சிறந்த கதைசொல்லி இவர் ஒருவரே” என்றேன்.
யாழ்ப்பாணத்துக் கதைகள் என்கிற இந்த தொகுப்பு புதிய அ. முத்துலிங்கத்தை கண்டடையை உதவும். ஏனெனில் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை “சொந்தநிலம்” என்பது அவருடைய கதையில் அடைந்து வந்திருக்கிற மாற்றங்களை அவதானிக்க முடியும். ஈழ இலக்கியம் இன்றைக்கு கொண்டிருக்கும் அரசியல் பின்னணியாலன தீவிரங்களையும் நெருக்குதல்களையும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு, இந்தத் தொகுப்பின் வழியாக “ஈழருக்கும் ஒரு வாழ்விருந்தது. மகிழ்விருந்தது” என்று தெரியவரும்.
இப்படியானதொரு தொகுப்பை ஆக்கவிரும்புகிறேன் என்று அ.முத்துலிங்கம் அவர்களுக்குத் தெரிவித்ததும் மகிழ்வுடன் ஒப்புதல் தந்தார். ஆனால் ஒரு நிபந்தனை நீங்களே முன்னுரை எழுதவேண்டுமென்றார். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டுமொரு தாளம் வாங்கியதைப் போலவே உணர்ந்தேன். நான் கைகளில் ஏந்திவந்து ரங்குப்பெட்டிக்குள் வைத்த தாளத்தின் பித்தளைத் துகள்கள் நினைவில் வந்தன. காலம் அழித்ததை ஆக்கும் ஒருவரின் கைகளால் பெற்ற தாளம் இந்த ஒப்புதல் என்று உணர்ந்து கொண்டேன்.
அப்பாவுக்கு உடன் கள்ளுப்பிடிக்கும். அம்மாவுக்கு உடன்மீன். அதில் எந்த வெடுக்கும் வராது. மண்சட்டியில் அவித்து இறக்கி வைத்தால் பழசாக பழசாக உருசை கூடும். நான் அடுத்தநாள் காலையில் சிவப்பு பச்சையரிசி சோற்றோடு குழைத்து உண்பேன். அதுவொரு தனி உருசை. அ.முத்துலிங்கத்தின் இந்தக் கதைகளும் உடன்மீன் போலத்தான். கடலும் நிலமும் மணக்க மணக்க மண்சட்டியில் உருசை திரண்டு வருகிற உடன்மீன் குழம்பு. எப்போது உண்டாலும் உருசையைத் தருகிற அரிய உடன்மீன்கள் இவை.
இந்த புத்தகத்தினை அழகுற வெளியிடுகிற நூல்வனம் பதிப்பகத்தாருக்கு என்னுடைய நன்றி. எப்போதும் என்னுடைய இலக்கியங்களுக்கு துணை நிற்கும் வாசகர்களுக்கும் நன்றி.