
அ. முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணக் கதைகள்” என்ற நூலின் வெளியீடு இன்று நூல்வனம் அரங்கில் இடம்பெற்றது. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் வெளியிட கவிஞர் மோகனரங்கன் நூலைப் பெற்றுக்கொண்டார். முத்துலிங்கத்தின் வாசகர்களுக்கு இந்த நூல் மிகவும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது.
முத்துலிங்கத்தின் கதைகளைப் பலர் பலவாறாகக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். ஆனால், தனது தாயகத்தினைக் களமாகக் கொண்ட முத்துலிங்கத்தின் ஆரம்பகாலக் கதைகள் அதிகம் பேசப்பட்டவில்லை. அவரது புலம்பெயர் கதைகளுக்கும் தாயகக் கதைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள், பாத்திரங்களின் மீதான அணுகுமுறைகள், அரசியல் சரி – பிழைகள், அவர் ஏற்றும் நிராகரித்தும் விட்டும் சென்ற கதைக்களங்கள் போன்ற எதுவும் ஆழமாக விவாதிக்கப்படவில்லை.
அந்த வகையில், ஒரே சரடில் கோர்க்கப்பட்ட 37 தாயகக் கதைகளைக்கொண்ட இந்த நூல், முத்துலிங்கத்தின் எழுத்துத் தொடர்பான பிறிதொரு சித்திரத்தைத் தொகுத்து அளிக்கக்கூடியது.

இந்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் எழுத்தாளர் அகரமுதல்வன் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“அ.முத்துலிங்கம் கதையுலகிலுள்ள யாழ்ப்பாண நிலத்திற்கிருப்பது தனியான தோரணை. அவரது கதைசொல்லல் திறனுக்கும் அதே தோரணை. ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் அ. முத்துலிங்கம் முக்கியமான கதைசொல்லி. என்னுடைய வாசிப்பின் மிகத்தொடக்கத்தில் இவர் கதைகளை ஏற்கவோ விரும்பவோ இல்லை. பின்னைய காலங்களில் தீவிரமான தர்க்கங்களை உதிர்த்துவிட்டு கதைகளின் சாரத்தைக் கண்டடைந்தேன். ஓ எனது தொட்டப்பனே! என்றதொரு புல்லரிப்பு அப்போது நிகழ்ந்தது. அ. முத்துலிங்கத்தின் தாயகக் கதைகள் என்றொரு எண்ணமே அங்கிருந்துதான் எனக்குள் பரவியது.
அழிந்தொழிந்த வம்சமொன்றின் பெயர் பொறித்த செப்பு பட்டயம் போல, செல்லரித்து எஞ்சிய ஓலைச்சுவடியென இந்தக் கதைகள் இன்றுள்ள ஈழத் தலைமுறைக்குத் தோன்றும். சாம்பல் பூத்த வீதிகள் மண்ணில் தோன்றுவதற்கு முன்னர் எழுந்த கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அ. முத்துலிங்கத்தின் எழுத்து விஷேசமென்றால் அது பகிடியோ தகவல்களோ மட்டுமல்ல. என்றைக்கும் மாறாத கதைசொல்லியின் குரல்.
எங்கும் இறுக்கம் தேடாத கலையின் மொழி. கவித்துவ தருணங்களை நிர்ப்பந்தமாக உருவாக்க எண்ணாத புலமை. அவரது யாழ்ப்பாணம் தான் எனது தாயகம். அவரது செவ்வியல் பின்னணிதான் எனது. ஈழரின் இலக்கியத்திணையில் அ. முத்துலிங்கம் முதுகிழவனும் மூதாயும். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியத்தில் அவர் பல கண்டங்களை அறிவித்த ஏகன்”
நூல் – அ.முத்துலிங்கத்தின் யாழ்ப்பாணம் (தாயகக் கதைகள்)
தொகுப்பாசிரியர் – அகரமுதல்வன்
வெளியீடு – நூல்வனம்
- எழுத்தாளர் தெய்வீகன் முகநூல் பதிவு