ரியன் காயப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வந்தது. சைக்கிளை உழக்கிப் பறந்தேன். இயக்கத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்குள் நான்காவது தடவை காயப்பட்டுள்ளான். இதற்கு முன்பு மன்னாரில் நடந்த மோதலில் முதுகில் காயமடைந்திருந்தான். “முதுகில் காயப்படுகிறதெல்லாம் அவமானம் கரியா, புறமுதுகு காட்டி ஓடினவனென்று அர்த்தம்” என்றேன். “நெஞ்சைக்காட்டி ஓடியிருந்தால் நான் மிஞ்சிவந்து இப்ப கதைச்சிருக்க மாட்டேன்” என்றபடி தோடம்பழத்தை உரித்தான் கரியன். இந்தத் தடவை கடுமையான தீக்காயமென்று அறிந்தேன்.

நான் மருத்துவமனைக்குள் நுழைந்து காயப்பட்ட போராளிகளை வைத்திருக்கும் பகுதிக்கு சென்றேன். உள்ளே செல்வதற்கு அனுமதியில்லையென கூறினார்கள். அதன் பொறுப்பதிகாரியாக இருந்தவரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. உள்ளே வலி பொறுக்கவியலாது கதறுங்குரல்களை கேட்கவே வேடிக்கையாகவிருந்தது. போர்க்காயங்களைப் பார்ப்பதில் ஆர்வம் கூடியிருந்தது. சொற்ப நிமிடங்கள் மட்டும் ஒதுக்கித் தந்தனர்.

உள்ளே போனதும் கரியனின் இயக்கப்பெயரைச் சொல்லி எங்கே இருக்கிறார் என்று கேட்டேன். மருத்துவப் பிரிவுப் போராளி என்னை கரியனிடம் கூட்டிச் சென்றார். உடல் முழுக்க எரிந்துலர்ந்திருந்தது. தீமிதிக்கும் கிடங்கில் சாம்பலுக்கு மத்தியில்  கங்குகள் ஒளிர்வதைப் போல ஊண் சிவந்து தகித்தது. அரை உயிரோடு நெருப்பிலிருந்து ஊர்ந்து சென்ற சாரைப் பாம்பை ஞாபகப்படுத்துவதைப் போல கட்டிலில் கிடந்தபடி கைகளை அசைத்தான். பக்கத்தில் நின்று “ நான் ஸ்பார்ட்டகஸ் வந்திருக்கிறேன். எப்பிடி இருக்கிறாய்” கேட்டேன். கண்களைத் திறந்து பார்த்து  “மச்சான், இந்த ஆர்மிக்கார புண்டையாண்டியளால எல்லாமும் நாசமாய் போய்ட்டுது “ என்றான். கரியனிலிருந்து நான்காவது கட்டிலில் படுத்திருந்தவரின் கால் நீக்கப்பட்டிருந்தது. அவர் சத்தமாக என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டார். “அவனுக்கு இப்ப தான் மெல்ல மெல்ல மயக்க மருந்து தெளியுது. காலமையிலிருந்து ஒரே சத்தம் தான். பச்சைத் தூஷணத்தில எல்லாரையும் திட்டுறான்” கரியன் சொன்னான். சிகிச்சை அளிப்பதற்காக மயக்க மருந்து வழங்கப்பட்ட போராளிகள் இப்படித்தான் பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்” என்றேன்.

“இவனெல்லாம் பரவாயில்லை. நேற்றைக்கு இம்ரான் பாண்டியன் படையணிக்காரர் ஒருவர் இஞ்ச இருந்தவர். அவருக்கு அடிவயிற்றில பெரிய காயம். இரவு முழுக்க ஒரே கச்சேரிதான். எல்லாருக்கு ஏச்சுத்தான். இயேசுவை சுடவேணுமெண்டு சொல்லுறார். மகாத்மா காந்திக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று என்னவெல்லாமோ கதைச்சார். ஒரே சிரிப்புத்தான் எங்களுக்கு. அதிகாலையில தான் இஞ்ச இருந்து ஆள் போனது”

“எங்க , மெடிஸ்க்கு மாத்திட்டாங்களோ”

“இல்லையில்லை. ஆளுக்கு பஞ்சு. அதிகாலை நாலு மணியிருக்கும் ஒரு பெரிய சத்தம். மூச்சை வானுக்கு எறிஞ்சு நிலத்தில விழுத்திற எத்தனத்தோட ஒரு மூர்க்கம். அப்பிடியே கையைத் தொங்கவிட்டுட்டார்”

“அய்யோ, வீரச்சாவே!”

“பின்ன, அவ்வளவு பெரிய மூச்சை விட்டால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு கட்டிலில் இருந்து சத்தம் எழுந்தது.

“அன்பார்ந்த தமிழீழ மக்களே! நான் மரணத்தைப் பார்த்துவிட்டேன். அதனுடைய பாறை மேல் அமர்ந்திருந்து தவளையைப் போல உலர்ந்திருக்கிறேன். மரணம் அவ்வளவு மர்மானதொன்றுமில்லை. எங்களுடைய வேவு அணிக்காரர்கள் போல கண்டறியமுடியாததும் இல்லை. பயத்தின் நுகத்தடியில் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் நுழைவாயிலில் நின்று மிழற்றும் என் காற்றுக்கு எதுவும் தெரியவில்லை.  ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன், நான் மரணத்தினாலும் மீதம் வைக்கப்படுவேன். நன்றி. வணக்கம்” என்று உரையை முடித்தார்.

“இவன் அரசியல்துறையில இருந்து படையணிக்கு போயிருப்பான் போல, தமிழ்ச்செல்வண்ணையை விட வித்துவமாய் கதைக்கிறான்” என்றான் கரியன்.

அந்தப் பகுதி முழுக்கவே போர்க்களத்தில் காயப்பட்டு வந்திருந்த போராளிகள் மட்டுமே சிகிச்சைக்காக தங்க வைப்பட்டிருந்தனர். சிறிய காயங்களோடு இருந்தவர்கள் ஏனையோருக்கு ஒத்தாசை புரிந்தனர். கையில் ஒரு விரல் மட்டும் இல்லாமல் போயிருந்தவரைப் பார்த்து பெரிய காயக்காரரொருவர் “ எடேய் உந்தச் சுண்டுவிரல் இல்லாமல் போனத காயமெண்டு சொல்லி களத்த விட்டு வந்திருக்கிறியே. உனக்கு வெக்கமா இல்லையோ” என்று கேட்டதும் எல்லோரும் சிரித்தார்கள். சுண்டுவிரல் காயக்காரன் கைகள் இரண்டையும் மேல்நோக்கித் தூக்கி, நாளை நான் களத்திற்குச் சென்றுவிடுவேன். ஆனால் இந்தச் சுண்டுவிரலுக்கும் ஒரு பெறுமதி இருக்கெண்டு உங்களுக்கு சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது” என்றான். அன்றைக்கு மாலையிலேயே சின்னக்காயங்களோடு வந்தவர்கள் மீண்டும் களமுனைக்குச் செல்ல ஆயத்தமாகினார்கள். கரியனோடு களமுனையில் இருந்த போராளியொருவன் நெற்றியில் சிறியக் காயப்பட்டிருந்தான். அவனும் என்னோடு வந்தமர்ந்து கொண்டான்.

“உனக்கு என்ன மச்சான் நடந்தது. உடம்பெல்லாம் அடி வாங்கியிருக்கிறாய். என்ன ஏதேனும் புகைக்குண்டுக்குள்ள மாட்டுப்பட்டனியோ” கேட்டேன்.

“அதைச் சொன்னால் வெக்ககேடு. உன்னை நம்பிச்சொல்லமுடியாது. நீ வன்னியில இருந்து பி.பி.சிக்கு செய்தி அனுப்புவாய்” கரியன் சிரித்தான். எடேய், சும்மா சொல்லு. “இது என்ன இயக்க ரகசியமே. மறைக்கிறதுக்கு. நாளைப்பின்ன நீ வீரச்சாவு அடைந்தால் ஊருக்குள்ள சொல்லித்திரிய கதை வேண்டாமே” என்றேன். ஸ்பார்ட்டகஸ் உன்னை நம்பி சொல்லுறது தான் தயக்கமாய் இருக்கு. ஆனாலும் வேற ஆரிட்டையும் சொல்லக்கூடாது. சத்தியம் பண்ணு” என்று கையை நீட்டினான். ஆர் மேல சத்தியம் செய்யவேண்டுமெனக் கேட்டேன். உனக்குப் பிடிச்ச ஆளோட பெயரைச் சொல்லி செய் என்றான். “என்ர நண்பன் கரியன் மேல சத்தியமாய் ஆரிட்டையும் சொல்லமாட்டேன்” என்றேன். “என்ர சாவைப் பார்க்கிறதில உனக்கு என்ன விருப்பமோ. சரி நடந்ததைச் சொல்லுறன். கேள்.”  என்றான்.

பத்து நாளைக்கு முன்னால கடுமையான சண்டை.  எங்கட இரண்டு கிலோமீட்டர் பகுதியை இராணுவம் கைப்பற்றியது. எங்களில இருபதுக்கு மேற்பட்டோர் வீரச்சாவு. மூண்டு பேருடைய வித்துடல் அவங்களிட்ட விடுபட்டு போச்சுது. பெரிய சோர்வும் கொந்தளிப்புமாய் ஆகிட்டுது. எங்கட தளபதிக்கு அதுவொரு கெளரவ பிரச்சனை ஆகிட்டுது. தக்க வைச்சிருக்கிற இடத்தை இழந்திருக்க கூடாதெண்டு எல்லாருக்குள்ளையும் ஒரு கருத்திருந்தது. பிறகு தளபதி ஒரு திட்டம் போட்டு, வலிந்து ஒரு தாக்குதல் செய்ய முடிவெடுத்தார். நாங்கள் நினைச்ச மாதிரி சண்டையில்லை. அது வேற. கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் பின்னால், எதிரிக்கு பேரிழப்பு நிகழ்ந்தபடியிருந்தது. ஒருநாள் நள்ளிரவு தொடங்கிய சண்டையில் முன்னணி போர்முனையிலிருந்து தாக்குதலைச் செய்த அணியில் நானுமிருந்தேன். துவக்கின் வாய்முனை தகித்து பூத்தது.

என்னோடிருந்த போராளி “மொஸ்கோ” துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்து வைத்திருந்தபடி “என்னால ஒருத்தனையும் நோக்கிச் சுட ஏலாமல் கிடக்கு. ஆனால் என்னைச் சுடமுடியுமெண்டு நினைக்கிறேன்” என்றான்.

“மொஸ்கோ உனக்கேதும் விசரா. துவக்கை கீழ போட்டுட்டு சும்மா இரு. நான் சண்டை செய்கிறேன்” என்றேன். அவன் துவக்கை கீழே போட்டான். ஆனால் அதற்கு முன்பாகவே ஒரேயொரு தடவை தன்னுடைய டிகரை அழுத்தி தாடைக்கு கீழிருந்து பாய்ச்சினான். அவன் தற்கொலை செய்து கொண்டதை எல்லோரிடமும் மறைத்தேன். அவன் வீரச்சாவு என்ற செய்தியை நானே கட்டளைப்பணியகத்துக்கு அறிவித்தேன்.

“அது பிழையான விஷயமில்லையே”

“ஒருத்தன் களத்தில் ஆயுதமேந்தி சண்டை செய்து, ஏதோவொரு நாள் தன்னால எதிரியைச் சுட முடியேல்ல எண்டு சொல்லி தன்னைத்தானே அழிக்கிறான். அவனும் வீரன்தான். அவனும் வீரச்சாவுதான். எல்லாத்துக்கும் மேல அவனோட உயிர்போன முகத்தைப் பார்த்தன். நல்ல செழிப்பு. ஏதோவொன்றை சாதித்துவிட்ட இளைப்பாறல்” என்கிற கரியனைப் பார்த்து வியந்தேன்.

“சொல்லுறத கேள்”

“ஓம், சொல்லு”

“அவனுடைய வித்துடலை எடுத்துக் கொண்டு பின்னால போய்ட்டாங்கள். ஆனால் அவன்ர துவக்கு என்னட்டத்தான் இருக்கு.  நான் அதை வைத்துக் கொள்வதாக அறிவித்தேன். இராணுவம் நினைத்ததைப் போல எங்களை ஒன்றும் செய்ய முடியாமல் விழி பிரட்டி நின்றது. தளபதிக்கு உற்சாகமான களமாக அது மாறியது. இராணுவம் மெல்ல மெல்ல பின்வாங்கத் தொடங்கியது. நீயும் நானும் பனம்பழம் பொறுக்கப் போவமெல்லே, அப்ப ஜெயக்கொடியோட பனந்தோப்பில பழங்கள் விழுந்து கிடக்கிற மாதிரி வெளிமுழுதும் இராணுவத்தின் பிணங்கள். போராளிகள் முன்னேறினோம். இராணுவத்தின் பைகளைப் பிரித்து அவர்களது உணவுகளை எடுத்தேன். பிஸ்கட் பை, பணிஸ் என்று நிறைய இருந்தது. சிகரெட் பெட்டியும் இருந்தது. ஒன்றை அடித்தால்தான் என்ன என்று தோன்றியது.

“அய்யோ, கெடுவானே ஆராவது பார்த்தால் சுட்டிருப்பாங்களே”

“ஆருக்கும் தெரியாமல் எடுத்து பொக்கெற்றுக்குள்ள வைச்சிட்டன். கொஞ்ச நேரத்தில் பிடிச்ச பகுதியில அரண் அமைச்சு இருந்தம். சண்டை ஓய்ந்திருந்தது. ஆனால் நூறுக்கும் மேற்பட்ட ஆர்மிக்காரர்களோட சடலங்கள் இப்ப எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. எனக்கு ஒரே வேடிக்கையா இருந்தது. பாவம் செத்துப்போன ஆர்மியள். சம்பளம் வாங்கி சாக வந்தவங்களை நினைச்சு கவலைப்பட்டும் பிரியோசனம் இல்லை என்று தோன்றியது. களமுனையில் ஆசுவாசம் கொள்ளும்படியாய் காற்று எழுந்தது. கந்தக நெடில் ஒருபக்கம் தலை சுற்றியது. மின்மினிகள் ஏனென்று தெரியாமல் அபத்தமான வெளிச்சம் அடித்து திரிந்தன.”

“எடேய், இன்னும் நீ காயப்பட்ட கதைக்கு வரேல்ல”

ம். பிறகு நான் கொஞ்சம் காலாற நடந்து வரவிரும்பினேன். எங்கே நடப்பது? மொஸ்கோ  தற்கொலை செய்து கொண்டவிடத்திற்குச் சென்று விட்டு திரும்புவதாக உத்தேசித்தேன். பொக்கேற்றுக்குள் இருக்கிற சிகரெட்டை எடுத்து கைக்குள் திணித்தேன். ஒரு வீட்டின் சிறிய கிணறு வடிவாய் இருந்தது. சக போராளிகளின் நடமாட்டம் எதுவுமில்லை. மெல்ல அதற்குள் இறங்கி, படியில் அமர்ந்து சிகரெட்டை ஊதினேன். இவ்வளவு சுதியான சிகரெட். அருமையான வாசனையும், உறைப்பும் விறுவிறுத்து தொண்டைக்குள் இறங்கியது. வேக வேகமாய் படிக்கட்டில் ஏறி மேலே வந்தேன். தற்கொலை செய்து கொண்ட இடத்தை அடைந்ததும், அவனுடைய ரத்தம் காய்ந்திருந்ததைப் பார்த்தேன். அது ஒரு சிறிய செந்தழல் பூவாக நிலமீது ஊர்ந்து என்னை நோக்கி வந்தது. கண்களை கசக்கியபடி மீண்டும் பார்த்தேன். காய்ந்த ரத்தம். பிறகு நிலமீது ஊர்ந்து வரும் பூ. அங்கே நிற்கவே ஏதோவொரு நடுக்கம் தோன்றியது. அவன் இறுதி நாளன்று பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“துவக்கை விடவும் விடுதலையை எங்களிடம் கூட்டிவர வேற வழியில்லையோ. அல்லது நாங்கள் இன்னும் அதை யோசிக்கலையோ”

“மொஸ்கோ, துவக்கோ, தடியோ எங்களைக் காப்பாற்றிவிடுமெண்டு நாங்கள் நம்பேல்ல. ஆனால் எங்களை அழிக்கத் துடிச்சவனை ஆயுதத்தால தான் பயமுறுத்த முடியும், இல்லையே”

“ஆனால், எதிரியைப் பயப்பிடுதுறது வேலை இல்லையே, விடுதலை தானே வேணும்”

“அதுக்குத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுறம். நீ இத்தனை வருஷமாய் சண்டை செய்கிறதுக்கு அதுக்குத் தானே”

“உயிர் எடுத்தல் – கொடுத்தல் இந்த இரண்டு பாதையிலும் விடுதலையை சந்திக்க இயலுமே”

“மொஸ்கோ, நீங்கள் கனக்க படிச்சனியள். எனக்கு மூத்த போராளி. உங்கட பட்டறிவுக்கு முன்னால் என்ன பதில் சொல்லியும் என்னால உங்களைத் திருப்தி படுத்த ஏலாது”

“அப்ப உயிர் கொடுக்கிறதில, எடுக்கிறதில விடுதலை வராது எண்டு ஒத்துக்கொள்ளுறியள், அப்பிடித்தானே”

எனக்கு தலையில் ஒருவித சுழிப்பு மின்னல் அடிக்கத் தொடங்கியது. மெல்லிய தந்திகள் அதிரும் தோரணையில் உள்ளிருந்து ஏதோவொரு சத்தம் கேட்கத் தொடங்கியது. வேகவேகமாய் முன்னரங்குக்கு ஓடினேன். சடலங்கள் மீது இலையான்கள் அமைதியாக அமர்ந்திருந்தன. வானத்தை பார்க்க மறுத்து குப்புறக் கவிழ்ந்து கிடக்கும் இராணுவச் சீருடைகளைப் பார்க்கையில் பரவசம் எழுந்தது. ஒருவனின் சடலம் மட்டும் வானத்தைப் பார்த்திருந்தது. அவனது முகத்தில் கறுப்பு வண்டொன்று ஏறியது. அதனைப் பிடித்து தூக்கி எறிந்து, முகத்தை துடைத்துவிட்டேன். நல்ல வடிவான பெடியன். அவனுக்கு நெஞ்சில் வெடி விழுந்திருக்கிறது. கைகள் ரத்தத்தில் பதிந்திருக்கின்றன. ரத்த வெடுக்கு வீசும் குரோட்டன் செடியைப் போலவிருந்த அவனது கையை எடுத்து உடலில் வைத்தேன். கண்கள் ஒளியிழந்து தலை சுற்றத் தொடங்கியது.

களமுனையில் மீண்டும் சத்தம் கேட்கத் தொடங்கியது. ஓடிச் சென்றேன்.  போராளிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கினர். அது மெல்ல மெல்ல சூடு பிடிக்கும். இன்றைக்கு மிச்சப்பகுதிகளையும் மீட்டுவிடுவதென திட்டம். ஆனால் இராணுவமும் தாக்குதலை திறனாக எதிர்கொண்டது. நாங்கள் கடுமையான வியூகங்கள் அமைத்து சண்டையிட்டோம். எதிர்த்தாக்குதல் மெல்லப் பலமிழந்து பின்வாங்கல் தொடங்கியது. போராளிகள் முன்னகர்ந்தோம். மீண்டும் இராணுவ அணியினர் உயிரிழக்க வேண்டியதாயிற்று. உக்கிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கால்களுக்கடியில் இறைஞ்சும் சொற்கள் நசிபட முன்னேறி ஓடினோம்.

ஒரு இராணுவத்தினன் கனரக ராக்கெட் ஆயுதத்தோடு சாவடைந்திருந்தான். அவனுடைய ஆயுதத்தை அப்படியே கைப்பற்றினேன். என்னுடைய கால்கள் அந்தரத்தில் மிதப்பதை உணர்கிறேன். போர்க்களம் கானல் அலையென கண்களுக்குள் பொங்கியெழ ஆட்லறிகளும், துப்பாகிகளும், எதிரிகளும், போராளிகளும் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகளைப் போல நீந்தி விழுகின்றனர். இராணுவத்தின் தாக்குதல் திடீரென பலங்கொண்டு கனைத்தது. போராளிகள் திடுதிடுமென திணறத் தொடங்கினர். பல்குழல் எறிகணைகள் வெளிமுழுதும் சொரிந்து விழுந்து வெடித்தன. என்னுடைய அணியில் இருந்தவர்கள் நான்கிற்கு மேற்பட்டவர்கள் வீரச்சாவு அடைந்தனர்.  என்ன செய்வதெனத் தெரியாமல் கண்கள் சொருகின.

மயக்கமா? மரணமா? உடல் முழுதையும் சோதனை செய்கிறேன். எங்கேனும் காயப்பட்டு ரத்தம் போய்விட்டதா என்கிற சந்தேகம். உடலில் எங்கும் எதுவுமில்லை. நன்றாகவேயுள்ளேன் என்ற உறுதிப்பாடு. கையில் கிடந்த ராக்கெட் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முன்னரங்கில் இருக்கிற மண் அணைக்கு மேலே ஏறிச்சென்று எதிரிகளின் திசை நோக்கி வீசினால் என்னவென்று நீதான் என்னிடம் சொன்னாய் ஸ்பார்ட்டகஸ்.

“நானா, உனக்கு மூளையும் எரிஞ்சு போச்சு போலகிடக்கு”

ஸ்பார்ட்டகஸ். நீதான் சொன்னாய். என்னை நம்பு. உன்னுடைய கதையைக் கேட்டு மண் அணைக்கு மேலே ஏறி நின்று, ராக்கெட்டை இயக்கினேன். அது புறப்படும் போது வெளித்தள்ளிய நெருப்புச் சுவாலை என்னை இப்படியாக்கிவிட்டது. நான் மண் அணையிலிருந்து தூக்கி வீசப்பட்டேன். பிறகு சுயநினைவற்று எரிகாயத்தோடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறேன். இனிக் காயம் மாறியதும் இயக்கம் தண்டனை வழங்குமென நினைக்கிறேன்”

“உனக்கெதுக்கு தண்டனை. நீதான் சண்டை செய்து காயப்பட்டிருக்கிறியே”

“அதுசரி, ஆனாலும் போதை மருந்து புகைச்சது இயக்க ஒழுக்கத்திற்கு எதிரானது தானே”

“போதை மருந்தா, எது சிகரெட்டா”

“அது சிகரெட் மாதிரி கொடுக்கப்பட்ட போதை மருந்தாம். இராணுவத்தில இருக்கிறவங்கள் பயம் தெரியாமல் சண்டை செய்ய கொடுக்கப்படுகுதாம்” என்றான் கரியன்.

“அப்ப, நீ வெறியில தான் ஏறி அடிச்சனியோ”

“பின்ன, நான் அண்டைக்கு தன்னைச் சுட்டுச் செத்தானே மொஸ்கோ அவனை மாதிரி என்ன வீரனே?”

எதுவும் சொல்லாமல் கரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிரித்தபடி “உன்னட்ட ஒண்டக் கேக்க வேணும்” என்றான்.

“என்ன”

“அவன் செத்த இடத்தில் ஒரு பூ ஊர்ந்து வந்தமாதிரி இருந்ததே, அது என்னெண்டு நினைச்சனி”

“உனக்கு வெறியில அப்பிடி தெரிஞ்சிருக்கு”

“அதுதான் இல்லை. அது மொஸ்கோவின்ர மூளை. வீரனோட மூளை, போர்க்களத்தில பூ மாதிரி கிடக்கிறத சொன்னால் நீங்கள் நம்பமாட்டியள். நான் போதைவஸ்த புகைச்சது தான் காரணமெண்டுவியள்”

“சரி. அது வீரனோட மூளைதான். ஒத்துக்கொள்கிறேன். இப்ப நீ படு. நான் நாளைக்கு வருகிறேன்” என்று புறப்பட்டேன். அப்போது என்னுடைய கையைப் பிடித்துச் சொன்னான் “ இந்த விஷயத்தை ஆரிட்டையும் சொல்ல மாட்டனெண்டு எனக்கு சத்தியம் செய்திருக்கிறாய் மறந்திடாத”

“சத்தியமாய் சொல்லமாட்டன்” என்று விடைபெற்றேன்.

கரியன் சில மாதங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தான். அவனை பராமரித்து வந்த மருத்துவ முகாம் காட்டுப் பகுதிக்குள் இருந்ததால் போராளிகளைத் தவிர எவராலும் போக முடியாது.  உடல் நிலை தேறி, நேராகவே களமுனைக்குச் சென்றான். போர்க்களத்தில் நிறையப் பாராட்டுக்களைப் பெற்றான். எதிரிகளை கொன்று குவிப்பதில் பெயர் பெற்றான். ஒருவேலையாக கிளிநொச்சிக்கு வந்திருந்த சமயம், என்னை வீதியில் கண்டு வாகனத்தை நிறுத்தினான். ஓடிவந்து அணைத்துக் கொண்டான்.

“ஸ்பார்ட்டகஸ். நிலமூர்ந்து வரும் பூக்கள் களத்தில் நிறையவே மலர்கின்றன. அவர்கள் வீரர்கள்”

“இப்படி ஏன் நடக்கிறது. எதைக் கண்டு அஞ்சுகிறார்கள்” கேட்டேன்.

“தெரியவில்லை ஸ்பார்ட்டகஸ். ஆனாலும் அடிக்கடி அப்படி நடந்து விடுகிறது. மொஸ்கோவைப் போல இதுவரைக்கும் பத்துப் பேர், நிலமூர்ந்து வரும் பூக்களை மண்ணில் விதைத்து விட்டார்கள்”

“நாளாந்த கள அறிக்கையில் இதனை அழுத்தம் திருத்தமாக எழுதி அனுப்பி. தளபதி பார்க்கட்டும்”

“ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளாதே, தளபதியே நேற்று அப்படியொரு முடிவை எடுத்து தப்பியிருக்கிறார்”

“அய்யோ என்ன சொல்லுகிறாய். அவருக்கே இப்படித் தோன்றுகிறதா”

“எனக்கும் தோன்றிவிட்டது ஸ்பார்ட்டகஸ்”

“விசரா உனக்கு. மொஸ்கோவைப் போல அழித்துக் கொள்வதெல்லாம் வீண்சாவு. அதனைச் செய்யாதே. ஒரு மதிப்புமிருக்காது” என்றேன்.

கரியன் சிரித்தபடி வாகனத்தில் ஏறினான். விடுப்பில் வருகிறபோது சந்திக்கலாம் என்று புறப்பட்டான்.

இரண்டு நாள் கழித்து மேஜர் மொஸ்கோவாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்த வித்துடலின் தலைப்பகுதியை ஓடிச்சென்று பார்த்தேன்.

நிலமூர்ந்து போகும் பூ கரியனிடமே இருந்தது. கரியன் வீரன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Loading
Back To Top