மிழிலக்கிய நெடும்பரப்பில் ஈழத்துப் படைப்புகளைத் தனி வகைமையாகக் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அவை தமிழில்தான் எழுதப்படுகின்றன. என்றாலும், தமிழகச் சூழலுக்கு அவை முற்றிலும் வேறான தன்மையுடன் இயங்குபவை. குறைந்தபட்ச அரசியல் புரிதலற்ற ஒருவர், அக்கதைகளையோ, கவிதைகளையோ வாசித்தறிய வாய்ப்பில்லை. நிலப்பரப்பும் அரசியலும் ஒரு படைப்பில் செலுத்தும் தாக்கத்தைத் தவிர்த்துவிட்டு, அதை வெறுமனே வாசித்துப் பயனில்லை.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ எழுத்துகளை வாசித்துவருகிறேன். ஆனாலும், ஒரு பெரும் அலையாக தற்போது எழுந்துள்ள ஈழ இளம் படைப்பாளிகள் பலரும் நம்பிக்கையின் கீற்றை வேய்கிறார்கள். எண்பதுகளில் வாசிக்க ஆரம்பித்த எனக்கு கே.டேனியல், செ.யோகநாதன், எஸ்.பொன்னுத்துரை உள்ளிட்ட ஒரு சிலரை மட்டுமே தெரிந்திருந்தது. அதன்பின் அங்கே நிலவிய அரசியல் மாற்றங்களும் போர்ச்சூழலும்  மேலதிக நபர்களையும் படைப்புகளையும் அறிய உதவின. தமிழகத்தின் ஊர்பெயர்கள் எந்த அளவுக்கு எனக்குப் பரிச்சயமோ அதைவிட, ஈழத்தில் அமைந்துள்ள ஊர்ப் பெயர்கள் அத்துப்படியாயின. வாசிப்பின் மூலம் எனக்குள் விரிந்த நில அமைப்புகளும் மனிதர்களும் நேரில் சென்று பார்த்தபோதும் அப்படியே இருந்ததில் ஆச்சர்யமில்லை.

இலக்கியத்தின் மிக உயரிய தகுதி, ஒரு சம்பவமும் நிலமும் எவ்விதம் பதிகின்றனவோ அவைபோலவே எதார்த்தத்திலும் பிடிபடுவதுதான். எஸ். பொன்னுதுரையின் `வரலாற்றில் வாழ்தல்’ நூலை அவர் சொல்லச் சொல்ல எழுதிய பணியை இந்த இடத்தில் பெருமிதத்துடன் நினைத்துக்கொள்கிறேன். வீரமும் காதலுமே சங்கப் படைப்புகளுக்கு அடிப்படை. இன்று அந்த அடிப்படையின் தொடர்ச்சியை ஈழ எழுத்துகளில் மட்டுமே காணமுடிகிறது.  கசப்பும் வெறுமையும் வாழ்வைத் தேடி அலையும் புலப்பெயர்வும் அம்மக்களின் அன்றாடத்தைச் சிதைத்திருந்தாலும், அவை படைப்புகளின் வழியே பத்திரப்படுத்தப்படுகின்றன. அத்துடன் சாதியம், இயக்கங்களுக்கு இடையிலான  படுகொலை, எதிரிகளுடனான சமர் என அகலவிரியும் அவர்களின் பாடுகள் சொல்லி மாளாதவை.

நம்பிக்கையளிக்கும் இளம் ஈழப் படைப்பாளிகளில் ஒருவராக அகரமுதல்வனை அவருடைய அரும்புப் பருவம் முதலே அறிவேன். அவருடைய எழுத்து முயற்சிகளை அக்கறையுடன் அணுகி, அவை பொதுவில் புகழ்ந்து பேசப்படும் வேளைகளில் உள்ளார்ந்த உவகையைப் பெற்றிருக்கிறேன். அன்பிற்கும் அடையாளத்திற்கும் ஓயாது உழைத்துவரும் அவர், என்னுடைய தம்பிகளில் ஒருவர். அவருடனான உரையாடல்களில் பெரும்பகுதி, அகதி வாழ்வின் அல்லல்கள் பற்றியவை. அதிருப்தியுடன் முடிந்துவிட்ட போரின் அவலங்களைக் கொப்பளிப்பவை. தவறவிட்ட பாதையைத் தேடித்துழாவும் தவிப்பும் சாந்தமின்மையும் நிறைந்தவை. இன்னும் கவிதைகளிலும் கதைகளிலும் அவர் பதியாத எத்தனையோ சம்பவங்களை அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். `மாபெரும் தாய்என்னும் தலைப்பில் வெளிவரும் இந்நூலுக்கு முன்பே, அவர் எழுதி வெளியிட்ட அத்தனை நூல்களையும் வாசித்து என்னுடைய அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறேன்.

`உலகின் மிக நீண்ட கழிவறை” குறுநாவல்கள் தொகுப்பிலுள்ள `சித்தப்பாவின் கதை’யையும்  `பான் கீ மூனின் றுவாண்டா’ தொகுப்பிலுள்ள `சங்கிலியன் படை கதையையும் பலமுறை நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். வாழ்வை எழுதும் அவர் வார்த்தைகளில் குழைந்து, குரல் தளும்ப விட்டத்தை வெறித்திருக்கிறேன். எங்கே இருந்தாலும், என்னவாக இயங்கினாலும் அவர் உள்ளத்தைக் கவ்வியுள்ள நிலத்தின் வாடையை நுகர்ந்திருக்கிறேன்.

இரண்டாம் லெப்ரினனட், முஸ்தபாவைக் கொன்ற ஓரிரவு”  ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள கதைகளும், அக்கதைகளில் வெளிப்பட்ட காத்திரங்களும் அவ்வப்போது அகரமுதல்வன் குறித்த சிந்தனைகளை மீட்டுபவை.  முதலில் அகரமுதல்வனை நான் அறிந்தது “அறம் வெல்லும் அஞ்சற்க, “டாங்கிகளில் சரியும் முல்லை நிலா, ஆகிய கவிதை நூல்கள் மூலமே எனினும், சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் அவருடைய பாய்ச்சல் கூடுதலான சந்தோசத்தைத் தருகிறது.

ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கான பண்பும் பக்குவமும் கூடிய அகரமுதல்வனுக்குள், அப்பரும் சம்பந்தரும் இருக்கிறார்கள். தொன்மங்களைத் தொட்டெழும் வீரமுனிகளும் சுடலையாண்டிகளும் கூட.

ஈழத்து நாட்டார் பாடல்களில் மாத்திரம் உலவிய பில்லி சூனிய பிம்பங்களை நவீனக் கதையாடலாக மாற்றும் சாதுர்யம் அகரமுதல்வனின் தனித்துவம். அம்மண்ணின் அதிரூபங்களும், ஆதிரூபங்களும் அவருடைய கதை மாந்தர்களைக் களிநடனம் புரிய வைக்கின்றன. போருக்கான நீதியும் நியாயங்களும் அப்படியே இருந்தாலும், அவற்றை வென்றெடுக்கும் உபாயத்தை அறியாத ஓர் இனக்குழுவின் உளக்கிடக்கையே அவர் கதைகள் திரும்பத் திரும்ப பேசுகின்றன. கெக்கலிக் கொட்டிச் சிரிக்கும் உலகத்தை தன்னுடைய இடது காலால் எட்டி உதைக்கும் சந்நதமே அவருடைய படைப்பின் சுருதி எனில் மிகையில்லை.

அகரமுதல்வனின் இத்தொகுப்பு அவருடைய படைப்பாக்க முயற்சியில் ஊக்கம் நிறைந்த முன்னகர்வு. ஒரு கதையைப்போல இன்னொன்றை எழுதிவிடாத எச்சரிக்கை ஒருபுறமென்றால், ஒவ்வொன்றிலும் அவர் சொல்லிச்செல்லும் தொன்மங்களின் தொடர்ச்சி இன்னொரு புறத்தில் அசாத்திய ஈர்ப்பை அளிக்கிறது. போர்ச்சூழலை நேரடியாக எதிர்கொண்ட இளைஞனாகவும் இருப்பதால் அவர் வார்த்தைகளில் கழிவிரக்கத்தைக் கோரும் கையேந்தல்கள் அறவே இல்லை. உக்கிரமான மொழியின் மூலம் தன்னுள்ளே பதிந்துள்ள ஆவேசங்களை அலசியிருக்கிறார்.

சரி, தவறு என்கிற கற்பிதங்களிலிருந்து விடுபட்டு தொல்குடி நம்பிக்கைகளைக் கதையாடலாக ஆக்கிப் பார்த்திருக்கிறார். அகரமுதல்வன் வந்துசேர்ந்திருக்கும் இந்த இடம் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது. அரசியல் என்கிற புறநிலைப் புரிதலைத் தாண்டி, அகவயமான தேடல்களில் இக்கதைகள் நடக்கின்றன.

எந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசித்தாலும் ஒன்றிரண்டு கதைகள் சோதனை முயற்சியாக இடம்பெற்றிருப்பது இயல்பு. அகரமுதல்வனோ இந்நூலின் ஒவ்வொரு கதையிலும்  வெவ்வேறு வடிவத்தையும் உத்தியையும்  பரீட்சயித்துப் பார்த்திருக்கிறார். மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை முயன்று, அவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறார். தொடர் வாசிப்பின் வழியே அவருக்குக் கிடைத்துள்ள அற்புதமான சட்டகத்தில் எண்ணங்களை துல்லியத்துடன் கடத்திவிடுகிறார். செளகர்யமான கதைசொல்லல் முறையிலிருந்து சற்றே நகர்ந்து சவாலை எதிர்கொண்டிருக்கிறார் எனவும் சொல்லலாம்.  `என்னை மன்னித்துக்கொள் தாவீது’ என்னும் கதையும் `மன்னிப்பின் ஊடுருவல் என்னும் கதையும் ஒரே மாதிரியான தன்மையைப் தோற்றத்தில் தந்தாலும் எழுத்துமுறையில் இரண்டுமே வித்தியாப்படுகின்றன.

முன்னொரு காலத்தில் இயக்கத்தினால் தேடப்பட்டுவந்த பூனைச் சுமதியைத் திருசெல்வம் வளசரவாக்கத்தில் கண்டான் என ஆரம்பிக்கும் ஒரு கதை,  இருவரின் இணைவிலும் முடிகிறது. திருச்செல்வம் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும், பூனைச்சுமதி இயக்கத்தின் நடவடிக்கையை இராவணுத்திற்குத் தெரிவித்து துரோகியானவள் என்பதும் கதையில் போக்கிலேயே அறியலாம். தியாகியும் துரோகியும் சேர்ந்து குடும்ப நடத்த அகதிவாழ்வில் பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக திருச்செல்வத்துடன் வசித்துவரும் ஜீவகாந்தன் யாருக்கோ தொலைபேசுவது தான் கதையின் உச்சம்.

யாழ்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த பூனைச்சுமதியின் வாழ்வை, சென்னை வளசரவாக்கம் வரை நீட்டித்துள்ள அகரமுதல்வன், வரலாற்றின் தொடர்ச்சியை வேறு ஒருவகையில் எழுதிப் பார்த்திருக்கிறார். வாழ்க்கையும் அதன்மீதான பிரியங்களும் எந்தப் போரினாலும் முடிவதில்லை. சொல்லப்போனால், வாழ்வதற்குத்தானே அத்தனைப் போராட்டங்களும் மடிவுகளும். போர்ச்சூழலுக்குப் பின்னான பத்தாண்டுகால வாழ்வை அங்கும் இங்குமாய் எழுதிச்செல்லும் அகரமுதல்வனுக்கு மனிதர்களைக் கதைகளிலாவது சேர்த்துவைக்கும் ஆவல். அவரைப் பொருத்தவரை வாழ்க்கையென்பது தப்பித்து வாழ்வதல்ல. வாழ்தலின் பொருட்டு அன்பையும் ஆதரவையும் பகிர்ந்துகொள்வது. சமயத்தில் உடலுள் மறைந்துள்ள காமத்தையும் கொட்டிக்கவிழ்த்து குளிர் இரவுகளில் வெம்மையைத் தேடுவது.

என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயம், எது ஒன்றும் ஒரேயொரு காரணத்திலோ காரியத்தினாலோ முற்றுப் பெறுவதில்லை என அகரமுதல்வனுக்குத் தெரிந்திருப்பதுதான். துரோகத்தை வாளாலும் தோட்டாவாலும் துளைப்பதைவிட காதலாலும் கருணையாலும் வெல்லமுடியுமென்று நம்புகிறார். ஒரு நிலத்தில் துரோகியாகப் பார்க்கப்பட்ட உயிர், இன்னொரு நிலத்தில் கனிவாகவும் பிரேமையாகவும் மாறுவதை அவரால் உணரமுடிகிறது. காலத்தின் விளைவாகவும் விருப்பமாகவும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கு இடையே நிகழும்  அந்தரங்க உறவை அருவருப்பில்லாமல்  அவர் பேசவும் எழுதவும் எண்ணுகிறார்.

கதையின் போக்கில் பிறழ்வை ஏற்படுத்தாமல் இரண்டு தரப்பின் பின்னணிகளையும் பிரச்சனைகளையும் சொல்லிவிடுகிறார். போருக்குப் பின்னான மனநிலை, ஒரு சமூகத்தின் அகத்தில் என்னவாக விரிகிறது எனவும் அவரால் ஊகிக்க முடிகிறது. இன விடுதலைப் போரின் இன்றைய அணுகுமுறையிலிருந்து `மன்னிப்பின் ஊடுருவலை வாசித்தால் மேலும் பல்வேறு திறப்புகளைத் தரக்கூடும்.

அகரமுதல்வன் இந்தக் கதைகளில் எங்கேயும் தன்னுடைய தரப்பையும் சார்பையும் வைப்பதில்லை. மீச்சிறு இடங்களில் தன்னுணர்வுகளை பாத்திரங்களின் தன்மையுடன் பொருத்திகொள்கிறார். என்னை அதிகமும் வசீகரித்த `பாலன் சிறுகதை ஆகச்சிறந்த மொழி ஆளுமையின் வெளிப்பாடு. விவிலிய வாசகங்களின் சாயலைப் பெற்றுள்ள அக்கதை, பாலச்சந்திரனின் மரணத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

அக்கதையை வாசித்த மாத்திரத்தில் பெருங்குரலெடுத்து கதறவேண்டும் போலிருந்தது. உந்தியெழுந்த உணர்வின் மிகுதியில் ஆறாகப் பிரவாகமெடுத்த கண்ணீரைத் துடைக்கவும் முடியாமல் துவண்டுபோனேன். ஒன்றுக்கு நூறாக விரியும் கேள்விகளை அடுக்கியடுக்கி, அதன் உச்சியிலிருந்து மன்னிக்க முடியாத மனிதகுலத்தைக் குப்புறத் தள்ளியிருக்கிறார். எழுந்து ஓட வழியில்லாத முக்கில் நிறுத்தி, அவர் ஓங்கி ஓங்கி உலகத்தை அறையும் ஓசை வாக்கியங்களாக வனைந்துள்ளன.

`வீழ்ந்தவர்களின் புரவி கதையில் இன்னும் ஒரு படி மேலே போய் கிரேக்க தொன்மகளுடன் வீரபத்திரரை இணைத்திருக்கிறார். அக்கதையில் விரியும் காட்சிகள் என்னை அதீதப் பதற்றத்திற்கு உள்ளாக்கின. “செட்டிக்குளம் அகதி முகாமில்” அடைபட்ட பெண்கள், தம்மை பாலியல் வன்முறைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள வெள்ளைநிற நூலால் யோனியைத் தைத்துக்கொண்டனர் எனும் வாக்கியத்தை வாசித்து, மூச்சு ஒடுங்கிற்று. இப்படியும்கூட நடந்திருக்க ஏலுமா என்கிற கேள்வியே எழவில்லை. அகரமுதல்வன் உருவாக்கும் படிமங்களில் பீதி பீடித்த பெண்களின் அச்சமும் நிராதரவான சூழல்களும் வாசிப்பவனை நெருப்புக் குண்டத்தில் இறக்குகின்றன.

அதே கதையில் `அந்தச் சின்னப் பிள்ளையையாவது காப்பாற்றுங்கோஎனும் குரலின் அதிர்வில், அடைபட்ட அண்ட சராசரத்தின் அத்தனைக் காதுகளும் கிழிந்து தொங்குகின்றன. வெள்ளைநிற நூலால் இறுகத் தைக்கப்பட்ட வல்லாதிக்கதின் வாயும் யோனியும் அவிழ்ந்து, அவமானத்தில் தலைகுனிகின்றன. `பிலாக்கணம் பூக்கும் தாழி, மாபெரும் தாய் ஆகிய இரண்டு கதைகளும் இந்த நூலின் பிரத்யேகத் தன்மையைப் பேசுவை. இரண்டு கதைகளும் தொன்மத்தின் தொடர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்துள்ளன. “ஆச்சி”யை பிரதான சித்தரமாக வடித்துள்ள அகரமுதல்வன், கண்ணுக்குத் தென்படாத அமானுஷ்யங்களை அவருக்கே உரிய சொல்வன்மையுடன் விவரித்திருக்கிறார். மந்திரலோகத்திற்குள் நுழைந்ததைப்போல அக்கதைகளில் விரியும் காட்சிகள் கலவரப்படுத்துகின்றன.

`கன்ஜூல் கராமாத்து’ நூலில் நாகூர் ஆண்டவரின் அற்புதங்களைக் குலாம் காதிறு நாவலர் `ஜின்னைக் கடலில் ஆழ்த்தினது’ என்னும் தலைப்பில் காட்டியிருக்கிறார். அச்சொல்லாடலுக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் அகரமுதல்வன் எழுதியிருக்கும் இவ்விரண்டு கதைகளும் மனிதனுக்கு மேலான சக்தியை மலினப்படுத்தாமல் விவரித்துள்ளன. அறிவுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை அவர் சைத்தானாகவும் கடவுளாகவும் பார்ப்பதில்லை. வல்லாதிக்கத்தின் வதையாக உருவகித்துக்கொள்கிறார். எதிர்த்துப் போரிட்டாலும் தோல்வியே நேருமென சொல்லாமல், நம்பிக்கையின் ஒளியால் அத்தனை இருட்டையும் ஆதிக்கத்தையும் அகற்றிவிடலாம் என்றே எண்ணுகிறார். மனித உணர்வுகளின் தடுமாற்றங்கள், உறவு நிலைகளில் உண்டாக்கும் சாதக பாதகத்தை அவரால் தண்ணீரைப்போல தருவிக்க முடிகிறது. வாவிகளிலும் வளைவுகளிலும் பதுங்கிக்கொண்ட மனிதர்களை, தன்னுடைய படைப்புகளைக் கைகளாக நீட்டி காப்பாற்றிவிடுகிறார்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் ஒரே வாசிப்பில் உற்றுணர முடிடியாதவை. அகரமுதல்வன் ஆக்கியளித்துள்ள வாக்கியங்களின் தொனிப்பொருள் நேரடியான செய்தியையோ தகவல்களையோ சொல்வதில்லை. மூன்று, நான்கு அடுக்குகளாக பிரித்து, அவ்வடுக்குகளின் உச்சாணியில் நம்மை நிறுத்திவிடுகிறார். “நெடுநிலத்துள்”, “புகல்”, “அவளைக் கொன்றவர்கள்”, “பதி”ஆகிய கதைகள், இரண்டாவது மூன்றாவது வாசிப்பில் வேறொரு பொருளை வழங்குகின்றன. அகரமுதல்வனின் கதைகளில் ஊன்றி நடக்க அவர் கைகள் தேவைப்படுகின்றன. அவரையோ அவருடைய எண்ணங்களையோ பற்றாமல் நடந்தால் வறண்ட வெளியிலும் வழுங்கிவிழும் ஆபத்து இருக்கிறது. அவர் நம்முடைய கைகளை மட்டுமே பற்றிக் கொள்கிறார். கண்களையும் காதுகளையும் திறந்தபடி நாம் பார்ப்பதையும் கேட்பதையும் தடுப்பதில்லை. ஒரு கதையை வாசித்தால் அதிலிருந்து மீள்வதற்கு நேரம் பிடிக்கிறது.

மிக மிதமாக ஆரம்பித்து மெல்ல மெல்ல  ஏக உயரத்திற்குப் போகும் அவருடைய உச்சாடனங்கள், கன்னங்கரிய காலத்திற்குள் நம்மைத் தள்ளிவிடுகின்றன. `வன்முறை பொதிந்த உனது மனத்தை நீயே தகர்த்து எறி. காமம் உன்னை ஆசீர்வதித்து ஒரு மனுஷனாக்கட்டும். உன் குழந்தமையை நீ விட்டுவிடாதே. பிறகு கொடியதான கற்பனைகளுக்கு தனிமை இட்டுச்செல்லும் அதனைத் தவிர் என்று `எம்பாவாய் கதையில் சில வரிகளை எழுதியிருக்கிறார். உண்மையில், இந்தத் தொகுப்பு தரக்கூடிய ஒட்டுமொத்த செய்தியும் பகிர்வும் அதுதான்.

கைலாசபதி ஒருமுறை புறநானூற்றைப் பற்றிச் சொல்லும்போது அது `வீர ஊழிக் காலத்தின் தனித் தன்மை வாய்ந்த இலக்கியம்’ என்றிருக்கிறார். தமிழர்களின் வாழ்வியல் ஒழுங்குநெறியே `அறம்’ என்று பேசிய அவர், `சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன் / யாண்டுளனோ என வினவுதி, என்மகன் / யாண்டுளன் ஆயினும் அறியேன்! ஓரும் / புலிசேர்ந்து போகிய கல்லளை போல / ஈன்ற வயிறோ இதுவே / தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’ என்னும் பாடலை மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்.  அதாவது, `உன் மகன் எங்கே’ என்று ஒரு தாயிடம் கேட்டதற்கு அவள் `அவன் எங்கே இருக்கிறானென்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், என் வயிறு புலி குடியிருந்த குகை என்பதால் அவன் தற்போது போர்க்களத்தில் இருக்கலாம்’ என்கிறாள்.

காவற்பெண்டு என்கிற பெண்பாற் புலவர் எழுதியதாக அறியப்படும் அப்பாடலின் உட்சரடை ஒவ்வொரு கதையிலும் அகரமுதல்வன் தொட்டிருக்கிறார். தமிழர்கள் அறமென்று அறிவிப்பதை இன்னபிறர் தருமமென்னும் சொல்லால் அழைக்கிறார்கள். அடிப்படை பொருள் ஒன்றே எனினும், இரண்டுச் சொற்களையும் கையாள்பவரின் தன்மைகள் வேறுபாடு உடையவை. சங்கப்பாடலின் தொடர்ச்சியாக ஈழ இலக்கியங்களை நான் கருதுவதற்கு அவற்றில் காதலும் போரும் கலந்திருப்பதே காரணம். காதலை துய்த்து எழுதுவதுபோல வீரத்தையும் களத்தையும் முன்வைக்கும் ஈழ எழுத்துகள், தொல்தமிழைத் துலக்குபவை.

அகரமுதல்வனின் கதைகளில் அறமே போராகவும் காதலாகவும் வெளிப்படுவதைக் காண்கிறேன். சீற்றத்துடன் களத்தை முன்னோக்கும் அறத்தை, சிணுங்கலுடனும் சிரிப்புடனும் அவரால் சொல்ல முடிகிறது. `அறம்வெல்லும் அஞ்சற்க’ நூலில் அவரே எழுதியிருக்கும்

ஒரு புள்ளியிலிருந்து

என்னை வரையத் தொடங்கும் தூரிகைகள்

 துயர ரேகைகளில் மிரண்டு நசுங்குகின்றன.” எனும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அகரமுதல்வனின் சிறுகதைகள் குறித்து வரையத் தொடங்கிய என் கைகளிலும் கண்களிலும் அதே துயர ரேகைள் படிந்தாலும், நம்பிக்கையை நோக்கி நகர்வதன்றி வேறு வழியில்லை. எழுதியெழுதி மேற்செல்லும் அகரமுதல்வனின் எல்லா முயற்சிகளும் கைக்கூட ஆழ்ந்த முத்தங்களும் வாழ்த்துகளும்.

Loading
Back To Top