
மிக மிக அரிதாகவே கண்ணீர் விட்டு அழுகிறேன். அப்படியான உறுதிப்பாடோ முன்முடிவோ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் துயர்களுக்கும் கஷ்டப்பாடுகளுக்கும் immune ஆகிவிட்டிருக்கிறேன். அந்த shield ஐயும் கடந்து உள்ளே செல்லும் கூர்நுனிகள் உண்டாக்கும் காயங்களுக்கான கண்ணீரை மிக நெருங்கியவர்கள் மட்டுமே கண்டிருக்கிறார்கள்.
ஆனால் அகரமுதல்வன் இயக்கத்தில் ரமேஷ் பிரேதனின் அம்மை, அப்பன், அயோனிகன் ஆவணப்படம் பார்க்கையில் என்னையுமறியாமல் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தேன். ரமேஷ் பிரேதன் இறந்த செய்தியைக் கேட்டபோது மெய்யாகவே வருந்தினேன்தான். அதற்குச் சிலநாட்கள் முன்புதான் விருதுக்கான வாழ்த்து தெரிவித்த எனக்கு ’’நன்றி தோழர்’’ என்று ரமேஷ்பிரேதன் முதலும் கடைசியுமாகப் பதிலனுப்பி இருந்தார்.
ஒரு அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், அத்தனை திரளான வாசகர்களையும் அந்த விழாவையும் அந்த அங்கீகாரத்தையும் நேரில் அனுபவித்தபின், இந்த விருதை வாங்கிய பின் அவர் இறந்திருக்கலாமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன், எனினும் தேற்ற யாருமில்லாத தனிமையில் பெருகிய அந்தக்கண்ணீர்தான் ரமேஷின் இழப்புக்கான என் இதயபூர்வமான அஞ்சலி.
இந்த ஆவணப்படப்படபிடிப்பின் பல வித்தியாசமான களங்கள், மாந்தர்கள். பிரபலங்களின் நினைவுத்தொகுப்புக்கள், மிகச்சிறப்பான இயக்கம், mystic ஆன ஒரு பொதுத்தனமை எல்லாவற்றையும் விட பிரேமாவின் இழப்பின் துயரும் அவரின் உடைந்த இதயத்தின் குருதிக் கசிவெனப் பெருகிய கண்ணீரும்தான் எனக்கு முதன்மையாகத் தெரிந்தது. ’’என்னைப் பிரேமான்னு கூப்பிடமாட்டாரு பன்னிக்குட்டின்னு, பூனைக்குட்டின்னு கூப்பிடுவாரு’’ என்று அவர் கண்ணீர் பெருக்கியபோது நானும் உடைந்து அழுதேன்.
அவரைப் பருமனான உடலுடன் கழிவறைக்கு அழைத்துச்செல்கையில் எடை தாளாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விடுவதை கண்ணீரும் சிரிப்புமாகச்சொன்னதும், தான் கோபித்துக்கொண்டு இருந்தாலும் ’’பன்னிக்குட்டி வா உனக்கு வைன் வாங்கித்தரேன்’’ என்று ரமேஷ் சொல்லுவதையும், இன்னும் அவர் தன்னோடு தான் இருக்கிறார் என்ற அவரின் காதலில் தோய்ந்த நம்பிகையுமாக, ஜெ சொல்லி இருப்பது போல தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, அன்பென்பதை மறந்தே போயிருக்கும் மொத்த மானுடமே அவருக்கு கடமைப்பட்டிருப்பதாவே எண்ணுகிறேன். ரமேஷ் பிரேதனின் நூலில் பிரேமாவை மழையெனச் சித்தரித்திருப்பதுதான் எத்தனை பொருத்தம். அப்படித்தான் அன்பை அவர் ரமேஷ் பிரேதன் மீது பொழிந்துகொண்டிருந்தார்,
ரமேஷ் செயலாக இருக்கையில் பிரேமா அவரிடம் சென்று சேரவில்லை அவர் படுக்கையில் இருக்கையில்தான் அவரிடம் சென்றிருக்கிறார். அவருக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம்தான் அவரை நேசித்திருக்கிறார்.அந்த அன்பில், நேசத்தில், காதலில் தளும்பிக் கொண்டிருந்த அவருக்கு இப்போது ரமேஷின் இழப்பு உண்டாக்கியிருக்கும் துயரைத்தான் என்னால் தாளமுடியவில்லை.
அசலான காதலோ நேசமோ இப்போதெல்லாம் அரிதினும் அரிதாகவே நிகழ்கிறது, காணக்கிடைக்கிறது. சொல்லப்போனால் பெரும்பாலான இப்போதைய நேசம், உறவு,காதல் எனப்படுவதெல்லாமே மிக வெளிப்படையான கணக்கீடுகள் அல்லது ஏமாற்றுதல்கள் மட்டுமே. நம்பிக்கையூட்டும் அணுகுமுறைகள், மிக எளிய நாடகங்கள் மூலமே அன்பைப்பெறமுடிகிறது பலருக்கும். பின்னர் அணுகியதைக் காட்டிலும் எளிதாக விரைவாக அதிலிருந்து விடுபட்டுப் புதியவற்றை நோக்கிச் செல்கிறார்கள்.
ஆகப்பெரிய நம்பிக்கைத்துரோகங்கள் படுக்கையிலல்ல இப்படியான விலக்குதல்களிலும் விலகிச்செல்லுதல்களில்தான் நிகழ்கின்றன. எனினும் ஆணும் பெண்ணுமாக இருபாலாருக்கும் நேசமென்பது மிகத்தேவையாக இருப்பதால் அதன்பொருட்டு தொடர்ந்து பலியாகிக் கொண்டும் பலிவாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள்.
இளமையில் இருப்போருக்கும், ஆரோக்கியமானவர்களுக்கும் உண்மையான அன்பு கொண்டிப்பவர்களுக்கும் மிக நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கும் இதுவே நிகழ்கையில், இளமை இறங்கு முகத்திலிருக்கையில், குணப்படுத்த முடியாத மரபுரீதியான உடல்நிலையும், அசாதாரணமான உடலெடையும் கொண்ட சொல்லிக்கொள்ளும்படியான பொருளாதார நிலையுமில்லாத ரமேஷ் பிரேதன் மீதான பிரேமாவின் தூய அன்பு என்னை அசைத்துவிட்டது, I sway!
விஷ்ணுபுரம் விழாவன்று பிரேமாவை இறுகக்கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த வருடத்திய பயணங்களின் பட்டியலில் முதன்மையாகப் பிரேமாவைச் சந்திக்கவிருக்கிறேன் ஆரத்தழுவிக்கொள்ளப்போகிறேன்.
அந்தத் தூய அன்பை, கண்ணீரையும் துயரத்தையும் விழுங்கும் முயற்சியில் தோற்று கட்டுக்கள் அவிழ்ந்து அவர் உடைந்தழுவதெல்லாம் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
பிரேமாவையும் ரமேஷ்பிரேதனையும் நினைத்தால் பொறாமையாகவும் இருந்தது. மிகத்தூய அன்பை அளித்தும் பெற்றுக்கொண்டுமிருந்த இருவரல்லவா?
ஒரு பிழையீட்டைப் போலப் பிரேமாவின் காதலின்பொருட்டும் இழப்பின் பொருட்டும் நானும் அழுது கொண்டிருந்தேன்
13 வருடங்கள் ஒரே அறையில் படுக்கையிலேயே வாழ்ந்து, எழுந்து நடக்கவும் வெளி உலகை, வானைக்காண பெருவிருப்பம் கொண்டிருந்தவரின் மறைவுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்து, வீட்டிலேயே இரண்டு நாட்கள் இருந்த சிட்டுகுருவியை அது அவர்தான் என்று பிரேமா சொன்னது உண்மைதான். நான் நம்புகிறேன் அவரது ஆன்மா 16 நாட்கள் அங்கேயே தான் இருந்திருக்கும்.
எடை கொண்டிருந்த உடலற்ற ஆன்மாவாகவாவது பரந்த வானை அந்தச் சில நாட்களில் பார்க்கவும் அனுபவிக்கும் வாய்ப்பிருந்தும், தன்னை எந்தக் கணக்கீடும் நோக்கமும் இல்லாமல் நேசித்த பிரேமாவுடன் 2 நாட்கள் இருக்கவும் சிட்டுகுருவியென வந்தது ரமேஷ் பிரேதன் தான்.
அம்மா சிலவருடங்களுக்கு முன்பாக ஒரு பண்டிகை நாளில் இரவில் நெஞ்சடைத்து இறந்துபோனார்கள். தினமும் மாலையும் குளிக்கும் பழக்கம் அம்மாவுக்கும் இருந்தது என்னைப்போலவே அல்லது எனக்கிருக்கிறது அம்மாவைபோலவே.
அன்று மாலையும் குளித்து, உடல் துவட்டிய ஈரிழைத்துண்டை இனி ஒருபோதும் உடலைத் துவட்டப்போவதில்லை, நெருப்புக்கு தின்னக்கொடுக்கபோகிறோம் என்றறியாமல். வராந்தா கம்பி மீது கடைசியாகக் காயப்போட்டிருந்தார்கள்.
அம்மா இறந்து உடலை வீட்டுக்குக் கொண்டுவந்த நள்ளிரவில் எதேச்சையாகக் கவனித்தபோது அந்தத் துண்டில் வழக்கத்தைக் காட்டிலும் பெரிய அளவிலான வெட்டுக்கிளிஒன்று அமர்ந்திருந்தது. அதே துண்டின் மீது 2 நாட்கள் அந்தப் பூச்சி அசையாமல் அமர்ந்திருந்து எங்கள் கதறலை, கண்ணீரை, பொருளற்ற சடங்குகளை, இனி யார் மீதும் பிரயோகிக்க முடியாத, அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் ஆணவத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது.
பின்னர் எங்கோ எப்படியோ மறைந்துவிட்ட அந்தப்பூச்சி அம்மாவின் அஸ்தியை மின்மயானத்திலிருந்து வாங்கிக்கொண்டு வருகையில் தம்பி விஜியின் முதுகிலும் அஸ்தியை பாரதப்புழாவில் கரைத்துவிட்டு திரும்புகையில் உடனிருந்த இன்னொருவரின் தோளிலும் இருந்தது. அது அம்மாதான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்த ஆவணப்படத்தின் மிஸ்டிக்கான பகுதிகளாக கருப்புவெள்ளையில் காட்சிப்படுத்தப்பட்டவைகளும் அந்த வண்ணத்துப்பூச்சியும் பறக்கும் பன்றியுமிருந்தன என்றாலும் பிரேமாவின் கண்ணீரும் அவர் சிட்டுகுருவியைப்பற்றி தொண்டையடைக்கச் சொன்னதும் தான் ஆவணப்படத்தின் உச்சம்.
இந்த ஆவணப்படத்தின் இறுதியில் இயக்கம் அகரமுதல்வனென்னும் பெயரைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளித்திரையில் இதே பெயரின் ஓரெழுத்து சிவப்பில் தனித்துத் தெரிகையில் முன்வரிசையில் அமர்ந்து பார்க்கக் காத்திருக்கிறேன்.
பிரேமாவுக்கும் அகரனுக்கும் அன்பு.