டால்ஸ்டாயின் காலணிகள் இங்குள்ளன

அவை கடந்த தூரங்கள் இங்கில்லை

டால்ஸ்டாயின் கண்ணாடி இருக்கிறது

அது கண்ட ஆழங்களில்லை

டால்ஸ்டாயின் கைவிளக்கு உண்டு

அது தந்த வெளிச்சம் இல்லை

 

டால்ஸ்டாயின் உணவு மேசை இருக்கிறது

அதில் அவர் உண்ட துயரங்கள் இல்லை

டால்ஸ்டாயின் பேனா இருக்கிறது

அதில் நிறைந்திருந்த தனிமை இல்லை

 

டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகள் உள்ளன

பியரியும் அன்னாவும் சந்தித்துக் கொள்ளவில்லை

 

டால்ஸ்டாயின் தலை இருக்கிறது

அது உருவாக்கிய வாசகர்களில்லை

நான் இங்கேயே இருக்கிறேன்

நான் இங்கே இல்லை.

 

குறிப்பு – (டால்ஸ்டாய் அருங்காட்சியகத்தில்) எழுதப்பட்ட கவிதை. மலையாளத்தில் உள்ள இந்தக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்தவர் சிற்பி.

 

Loading
Back To Top