01
தணலில் நெளிகிற பாம்பெனக்
கனவில் ஊர்கிறேன்
பூமியின் மணல் மேட்டில்
வருத்தமாய் எழுகிற
சூரியனின் வலுமிக்க கதிர்களில்
என் தடம் காய்கின்றது.
ஓ… பெருந்தழலே!
என்னைப் பற்றாயோ!
பற்று.
02
இப்படியானதொரு பூங்காவின்
கல்லிருக்கையில் அமர்ந்துதான்
ரகசியத்தைச் சொன்னேன்.
“யாரிடம்?”
அந்தப் பகலிடமும் அந்தியிடமும்,
“சரி, அதுக்கென்ன! உன் ரகசியம் பூமிக்கு தெரியாததா?”
இல்லையே! என் ரகசியத்தின் ரத்தத்தில் தான் சூரியன் சிவக்கிறது.
“இப்போது என்ன சிக்கல்? ”
என் ரகசியம் என்னவென்று பகலிடமும் அந்தியிடமும் கேட்கவேண்டும்.
“ஏன், மறந்துவிட்டாயா?”
இல்லை, என்னிடம் வேறு சில புதிய ரகசியங்கள் தோன்றிவிட்டன.
அப்படியா!
இல்லையா பிறகு, இப்போது தோன்றிய ரகசியம் நானென்பதை இன்னுமா நீ உணரவில்லை.
ஓ… நீயே ரகசியமா!
ஆமாம். நூற்றாண்டின் ரகசியம். என் நடுநடுங்கும் உடலில் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆனால் அது மனிதர்க்கு மட்டுமே புலனாகும்.
“நான் மனிதனில்லையென்றால் வேறு என்ன? ”
அதுதான் ரகசியம். இனியொரு பகலுக்கும் அந்திக்கும் சொல்வேன். அதுவரைக்கும் நீ காத்திரு.
03
பறவை என்னைத் தேடியிருக்கிறது
சாளரத்தின் கம்பிகளில் தானியங்கள்
காய்ந்திருக்கின்றன.