சமீபமாக நாம் காணும் நுண்கலை வடிவங்கள் அத்தனையிலும் பிரதானமாக வெளிப்படுவது போர் குறித்த சித்திரங்களே. நவீன ஓவியக் கண்காட்சிகளிலும் உலகத் திரைப்பட விழாக்களிலும் முதன்மையாகக் காட்சிப்படுத்தப்படுவது போரின் அழிவு குறித்த கதைகளும், ஒடுக்கப்படுபவர்களின் வாழ்வும், போர்களின் கோரங்களும் அவலங்களுமே. கடந்த திரைப்பட விழாவிற்குச் சென்றிருக்கையில், ஒரு நண்பர் சலித்துப் போய் கேட்டார். ‘ஏன் எல்லா கலைப் படங்களும் பாலஸ்தீனத்திற்கும், உக்ரைனிற்கும், ஒடுக்கப்படும் பெண்களின் சார்பாகவுமே பேசுகிறது. ஏன் எப்போதும் வலது சாரிகளுக்கும் பெரும்பான்மையினருக்கும் எதிராகவே அத்தனை கலைப் படைப்புகளும் நிற்கிறது.’ அவர் சலிப்பிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு உலகத் திரைப்பட விழாவில் நூற்றியெண்பது திரைப்படங்கள் திரையிடப்படுகிறதென்றால் அதில் குறைந்தது நூற்று இருபது படங்கள் உள்நாட்டுப் போர்களையும் உலகப் போர்களையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பவைதான். ஆனால், அது அப்படித்தானே இருக்கமுடியும். கலை மனிதர்களுக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்ட வேண்டியவை அல்லவா இவை? மனிதர்கள் வரலாற்றிடமிருந்து பாடம் கற்பதே இல்லை என்பதை ஒவ்வொருநாளும் செய்தித்தாளை விரிக்கையில் உணர்ந்துகொண்டுதானே இருக்கிறோம். ஒரு உயிரினமாக, செய்யும் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யும் வழக்கம் கொண்டவர்கள் நாம்.
ஒரு நிலத்தில் ஒடுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும், போரின் பேரழிவிற்கு உள்ளாகும் ஒரு இனம் வேறொரு நிலத்தில் அதே அவலத்தை மற்றொரு இனத்தின் மீது செலுத்தும் விந்தை மனித இனம் தவிர்த்த மற்ற உயிரிகளிடம் உண்டா எனத் தெரியவில்லை. அதனால் ஒரு அறிவுச்சூழலில், கலை பண்பாட்டு வெளியில் இவை திரும்பத் திரும்ப நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு பொது வாசகன் சலிப்படையக் கூடுமெனினும் அது மீண்டும் மீண்டும் இங்கு முன் நிறுத்தப்பட வேண்டும்.
உதாரணமாக, தொடர்ச்சியாக உக்ரைன் போர் குறித்த படங்கள் பார்த்து மீண்ட பொழுது என் மனதில் இறுதியாக வந்து நிற்பது ஒரு படிமம் மட்டும்தான். கைவிடப்பட்ட ஒரு பெரிய இராணுவ டாங்கர் லாரியில் தேங்கியிருக்கும் மழை நீரை அள்ளிக்கொண்டு போகும் ஒரு சிறுவன். கந்தக நெடியென அக்காட்சி நாசியில் இன்றும் நிற்கிறது. நூற்றுக்கணக்கான காட்சிகளைப் பார்த்திருந்தாலும் இப்படி ஏதோவொரு படிமம் மனதில் தங்கிவிடும். அந்தப் படிமம் இந்த ஒட்டுமொத்த அநீதியை நம் ஆழ்மனதில் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும், நெருஞ்சி முள்ளென நிற்கும். எந்த ஊர் என்ன பெயர் என எதுவும் தேவையில்லை. அரசியல் சரி தவறுகளுக்கு அப்பாற்பட்டு மனித இனத்தின் உயிரும் வாழ்வும் சேதமுறுவதே இங்கு முதன்மையானது.
***
இந்தத் திரமேற்றப்பட்ட, திரும்பத் திரும்ப ஒன்றையே முன் வைக்கும் போர் இலக்கியங்களின் விளைவுகளில் முக்கியமானவை இரண்டு. ஒன்று போர் குற்றவாளிகளைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்வது. அத்தனை கலை வெளிப்பாடுகளின் மூலமாகப் போரின் அழிவுகளைப் பேசிக்கொண்டே இருப்பது தலைமுறைகளைக் கடந்தும் குற்ற உணர்வை நிலை நிறுத்துகிறது. இன்றும் நாஜிக்கள் உண்டாக்கிய அழிவு குறித்த நாவல்களும் திரைப்படங்களும் ஆவணப் படங்களும் தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. விளைவாக, ஜெர்மானியர்களும் தங்கள் முந்தைய தலைமுறையினர் நிகழ்த்திய கொடூரங்களை மறைக்காமல் இன்று மன்னிப்பு கோருகின்றனர். இனி வரும் தலைமுறையினரும் அக்குற்ற உணர்வுகளை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும். அவர்களின் அன்றாடம் கிட்டதட்ட தினமும் காலையில் ‘ஆமாம் மன்னியுங்கள்’ என்ற ஒப்புதலோடுதான் துவங்குகிறது. பல்லாயிரக்கணக்கான கலை இலக்கியப் படைப்புகள் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் இடம் அது.
இரண்டாவது, பிம்பங்களை உடைத்தல். மீண்டும் மீண்டும் கூறப்படும் கதைகளின் மூலமாக போரின் ஆகிருதிகளை அழிப்பது. அது ஒரு மாபெரும் போர் கதாநாயகனாக இருக்கலாம், உலகைக் கட்டியாண்டு கோலோச்சிய நாடாக இருக்கலாம் அல்லது வீரம் என்ற சிறப்பேற்றப்பட்ட உணர்வாக இருக்கலாம் அல்லது மக்களை காக்கத் தவறிய தெய்வங்களாகவும் இருக்கலாம். இந்தப் பிம்பங்களை உடைப்பதை முதன்மையாக நிறுவுகின்றன கூறியது கூறும் கலைப் படைப்புகள். சர்ச்சில் என்ற பிம்பம் இன்று பலவாறு உடைக்கப்படுகின்றன. நவீன படைப்புகளும் திரைப்படங்களும் அவர் ஆளுமையை இன்று கேள்வி கேட்கின்றன. இன்று வேறு எந்த நாட்டை விடவும் அதிகம் கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாக்கப்படுவது பிரிட்டன் தான்.
இப்படி போர் குற்றவாளிகளின் மீது குற்ற உணர்வைத் திணித்து நிறுத்தி வைப்பதிலும் வீரம் என்றால் என்ன தெய்வம் என்பது யாது என்ற கேள்வி கேட்பதிலும் அகரமுதல்வனின் ‘போதமும் காணாத போதம்’ முன் நிற்கிறது. ஏனென்றால் அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அவர்களுக்கு ஒரு கடப்பாடு உண்டு. இக்கதைகள் அத்தெய்வங்களுக்கு அதை ஞாபகமூட்டிக்க்கொடிருக்கின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை வாரம் ஒன்றாக ஒரு தொடரைப் போல எழுதி வெளியிட்டார் அகரமுதல்வன். இந்தக் கதைகள் அத்தனையையும் இப்போது ஒன்றாகப் படிக்கும்போது அகரமுதல்வனின் மனம் சென்ற திசையையும் உணர முடிகிறது. அவரை ஆட்கொண்ட உணர்வுகள் பயணப்படுவதைக் காண முடிகிறது.
இத்தொகுப்பிலுள்ள முதல் சில கதைகள் மிக உக்கிரமான வெளிப்பாடு கொண்டவையாக இருக்கின்றன. வீரர்கள் புதைகுழியிலிருந்து மீண்டெழுந்து மண் மீது உலவுகிறார்கள். தெய்வங்கள் பீடத்திலிருந்து பிளக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக தனி மனித உறவுகள் பிளவுபடும் வகையிலான கதைகள். அடுத்து சற்றே கூர்மை தீட்டி காமம் அலைந்துருகும் கதைகள். ‘இத்தனை போருக்கு மத்தியிலும் குழந்தைகள் பிறக்கத்தானே செய்கின்றன’ என்ற ஒரு வரியின் மூலம் வாழ்வின் மீதும் உடலின் மீதும் மனிதர்களால் கைவிட முடியாத பற்றுதான் இத்தனை கொடூரங்களின் மத்தியிலும் அவர்களைப் பிழைத்திருக்கச் செய்கிறது என்று நிறுவுகிறது.
இக்கதைகளின் தீவிரமான கணங்கள் எல்லாம் கொடுங்கனவுகளாகவே வெளிப்பட்டிருக்கின்றன. போரில் ஏற்படும் உயிர் இழப்புகள், பொருள் உடைமை சேதங்கள் எல்லாம் மீறி மனிதனின் அகம் சேதமடைவதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை என்பதே உளவியலாளர்களின் கருத்து. போரில் உயிர் காத்து மீண்டு வருபவர்களின் வாழ்க்கை கொடும் பேய்களின் ஊடே வாழ்வதைப் போலத்தான்.
இக்கதைகளில் வரும் கொடுங்கனவுகள் இரண்டு விதங்களில் முக்கியமானவை. ஒன்று கனவுதான் கடவுளர்கள் மனிதனின் அகத்திற்குள் வந்து பேசும் பாதை. ஒரு போர்ட்டல் போல. ஆதி மனிதனின் அகத்துக்குள் கற்பனையை முதன்முதலில் விதைத்தது கனவுதான். கடவுளை மனிதன் படைத்ததும் கனவின் மூலமாகத்தான். போரில் உயிர் பிழைத்திருக்கும் இவர்களின் கனவுகளில் தெய்வங்கள் எழுந்து வருகின்றன. மன்னிப்பு கோருகின்றன. இதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென ஒதுங்கி நின்று மன்றாடுகின்றன. ஒருவகையில் உக்கிரமாகத் திரியும் தெய்வத்தை மனிதன் இக்கொடுங்கனவுகளின் மூலமாகப் புரிந்துகொள்கிறான். தெய்வங்களின் எல்லைகளை அறிந்துகொள்கிறான்.
இரண்டாவதாக இக்கனவுகளின் மூலமாகத்தான் சேதமுற்ற அபோத மனம் வெளிப்படுகிறது. சூலம் போன்ற கைகளுடைய குழந்தையை ஒருவன் கனவு காண்கிறான். இறந்து போன கணவன் கனவில் வந்து கொஞ்சச் சொல்லிக் கேட்கிறான். மரணம் வாசலில் செருப்பவிழ்த்துவிட்டு உள்ளே வந்து கொஞ்சிச் செல்கிறது. வலிகள் தன் முனகல்களை வெளியே விட்டு கனவில் புகுந்து அரவணைத்துக் கொள்கின்றன. கனவுகள் அவர்கள் வாழ் நிலத்தின் உருவகங்களும்தான். ஒரு இரவு அபோத மனத்தை மரணிக்கச் செய்கிறது மறு இரவில் அமுதூட்டி இனிக்கச் செய்கிறது.
இத்தொகுப்பில் இருக்கும் கதைகளில் முக்கியமானதாக நான் கருதுவது – நளன்/தாயம் என்ற வீரனின் கதை. வீரம் என்பது இங்கே நகை முரணாகும் கதை இது. வீரம் என்ற போதத்தை அழிக்கும் கதை இது. தன்னளவில் தாயம் ஒரு வீரன். இயக்கத்தினர் இவனைக் கட்டாயமாகப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றால் தப்பி விடுவான். அத்தனை துப்பாக்கிகளையும் மீறி போர் வீரர்களிடமும் போக்கு காட்டும் சிறந்த வீரன் இவன். பாதாளம் போன்ற வயிறு கொண்டவன். எவ்வளவு உணவும் அவன் வயிற்றுக்குள் போய்விடும். குழிதோண்டி பாதாளத்தில் நாட்கணக்கில் மூடி வைத்தாலும் எந்தச் சலனமும் இன்றி கிடப்பவன். பாதாளத்தை தன் மனதிலேயே கொண்டிருப்பவன். புராணங்களில் வரும் அசுரர்களுக்கு இணையானவன். தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டவன். போருக்கு எதிரான மனநிலை கொண்டவன். வாழ வேண்டும் என்ற விழைவு கொண்டவன். ஆனால் இப்படியான ஒரு போர் சூழ்நிலையில் சும்மா உயிர் வாழ்வதை விடவும் போரிட்டுச் சாவதே மேல் என்ற எண்ணம் கொண்டு போரில் ஈடுபட்டு உயிர் துறக்கிறான். தன் கடைசி கடிதத்தில் அவன் மன்றாடி இறைஞ்சுவது, என்னை எவ்விதத்திலும் வீரனாக அழைக்காதே என்பதுதான். வீரம் என்பதின் அர்த்தத்தை அவன் அக்கடிதத்தின் மூலம் மாற்றியமைக்க முயல்கிறான்.
இதற்கிணையான மற்றொரு கதையில் வீரர்கள் இயக்கும் முதல் தோட்டா பெரும்பாலும் தற்கொலை செய்துகொள்வதாகத்தான் அமைகிறது. போர் முனையைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் போர் முனைக்கு வராமலும் இருக்க முடியாது. உறவுகள் கணக்கின்றி பூமி துறந்துவிட்டன. நிலமும் அதிகாரத்தின் இழுப்பிற்குத் தலை கொடுத்து காலின் கீழே நழுவிப்போகிறது. மற்றொரு முனையில் சிங்கள இராணுவத்தினன் காசுக்காகப் போரில் நிற்கிறான். உயிரை காசுக்கு இணை வைத்து துறப்பதும் தற்கொலையே. தலை வெடித்து மூளை தரையில் ஒழுகுவதை நிலமூர்ந்து வரும் பூ என்று வர்ணிக்கிறார் அகரமுதல்வன். தரையில் பூ ஊர்ந்திருக்கிறதா என்பதைப் பொருத்து இறந்தவனின் வீரத்தை எடை போடுகிறான் ஒருவன். வீரம் யார் பக்கம் என்ற அபத்தக் கேள்வியாக உருக்கொள்கிறது இக்கதை.
இக்கதைகள் அத்தனையும் தீவிரமான குற்ற உணர்ச்சியை வாசக மனங்களில் ஏற்றி விடுகிறது. நாம் எவ்வகையிலும், எந்நிலையிலும் இப்பேரழிவை, இக்கொடுங்குற்றத்தை மறந்துவிடமுடியாதபடி குற்ற உணர்ச்சியை நம் தலைகளில் நிறுத்திவிடுகிறது. இரண்டாவதாக, இவ்வழிவைத் தடுத்திருக்கக் கூடியவர்கள் யார்? அதி வீரமா, தெய்வமா, அரசா, தனி மனிதனா? இவர்கள் யாராலும் அது முடியவில்லை எனில் அந்த பிம்பங்களெல்லாம் உண்மைதானா என்ற கேள்வியை முன் வைக்கிறது.
****
இக்கதைகள் எந்த வடிவத்திலானவை என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். கவித்துவமான மொழி உண்டு. அசாத்தியமான படிமங்களை உருவாக்கும் சொற்றொடர்கள் உண்டு. கவிதைகள் அல்ல, இவை நிச்சயம் சிறுகதைகளும் அல்ல. சிறுகதைகளுக்கான தனித்துவமும் கூர்மையும் அமையாத கதைகள் இத்தொகுப்பில் உண்டு. சில கதைகளில் வரும் மாய எதார்த்த தருணங்கள் பொருந்தாத இடங்களும் உண்டு. அவை நீள் கதைகளில் நாவல் வடிவில் இதைவிடச் சிறப்பான அர்த்தங்களை உருவாக்கும் சாத்தியங்கள் உண்டு என்று தோன்றுகிறது. ஆனால், இவற்றை ஆசிரியரே துங்கதை என்று அழைக்கிறார். இக்கதைகள் ‘Ode’ என்ற வடிவத்தைச் சாரும் என்பது கிட்டத்தட்டச் சரிதான். ‘ode’ என்ற வகைப் பாடல்கள் அல்லது உரைநடை குறிப்பிட்ட ஒரு உணர்வை மட்டும் முன் வைத்து எழுதப்படுவது. தொடர்ந்து அந்த உணர்வை மீட்டுக்கொண்டே இருப்பது.
ஒருமுறை நண்பர்களுடன் ஈரோடு கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, நண்பர் ஒருவரின் நிலத்தில் ஒரு புலிக்குத்திக் கல்லைக் கண்டோம். அந்நிலத்தையோ மக்களையோ காக்க ஒரு வீரன் புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்ததைச் சுட்டிக் காட்டும் சித்திரம் அதில் இருந்தது. முதல் தளத்தில் அவர் புலியுடன் போர் இடுவதும், இரண்டாவது தளத்தில் வீரனைப் பூத கணங்கள் கைலாயத்திற்குத் தூக்கிச் செல்வதும், மூன்றாவது தளத்தில் அவன் கைலாயத்தில் ஈசனடி அடைந்ததையும் காட்டி நின்றது. அவன் யார்? அவன் எந்நிலத்தைச் சார்ந்தவன்? எந்த மொழி பேசிக்கொண்டிருந்தான்? யாரைக் காத்தான்? இப்படி எதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. அவனின் வீரத்தை மட்டுமே பறை சாற்றும் சித்திரம் அது. இதைப் பார்த்தபோது ஒரு கேள்வி எழுந்தது. உண்மையில் இங்கே வெற்றி பெற்றது அந்தப் புலிதான். ஆனால் இறந்தவனுக்குத்தான் நினைவுச் சின்னம். இப்படியான சண்டையில் புலி இறந்திருந்தால் அதற்குச் சின்னம் இருக்குமா? அதற்கு விடையாக அடுத்த சில நாட்களிலேயே சில கற்களைக் கண்டோம்.
பர்கூர் மலைப் பகுதிகளில் ஒரு சிறிய நினைவுச் சின்னங்களின் வளாகம் என்று சொல்லத்தக்க வகையில் பத்திற்கும் மேற்பட்ட நடுகற்களைக் கண்டோம். அக்கற்கள் சிலவற்றில் புலிக்கென சிற்பம் இருந்தது. வீர மரணம் அடைந்த புலி அது. அது சண்டையிட்டு இறக்கும்போது கருவுற்றிருந்திருக்கலாம். அதன் அருகே ஒரு புலிக்குட்டியின் சிற்பமும் இருந்தது. இப்படி தமிழகம் முழுவதும், இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுதும் கண்டெடுக்கப்படும் கற்கள் அத்தனையும் குறித்து நிற்பது ஒரேயொரு உணர்வைத்தான். வீரம் என்ற ஒரு உணர்வு மட்டும்தான். வேறெந்த தகவலும் அக்கற்கள் கொடுப்பதில்லை. அது அவசியமும் இல்லை.
அவ்வகையிலே அகரமுதல்வனின் போதமும் காணாத போதம் – துங்கதை தொகுப்பை வாசித்து முடித்ததும், கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில் இல்லாமல் போகலாம். கதை தருணங்களும் கூட தனித்து நிற்காமல் இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த பக்கங்களில் தொடர்ந்து எழும் ஓலம் வாசகனிடத்தில் ஒரே ஒரு சுவையை மட்டும் இட்டுச் செல்லும். அந்தச் சுவையை மட்டும் கொடுப்பதுதான் இத்துங்கதைகளின் வேலை. அப்படி இந்த நூல் வாசிப்பின் இறுதியில் நாவில் ஒரு துளி குருதிச்சுவையை அளிப்பதில்தான் வெற்றியடைந்திருக்கிறது.
பிரசுரம் – கணையாழி இதழ்