
எழுத்தாளர் தமயந்தியின் வெளிவரவிருக்கும் “அந்திவானின் ஆயிரம் வெள்ளி” என்கிற சிறுகதை தொகுப்புக்கு நான் எழுதிய அணிந்துரை.
~~~
தமயந்தியின் படைப்புக்களில் ஆவேசத்துடன் துடிக்கும் காலங்களும் கனவுகளும் ஆசைகளும் நம்மில் உருவாக்க எண்ணுவது எதனை? கசப்பின் கைப்பிடிக்குள் தளும்பும் நீரா இவ்வாழ்வு? ஞாபகத்தின் வெதுவெதுப்பில் நஞ்சூறிக்கிடக்கும் கடந்தகாலத்தின் காயங்களில் கசிந்தபடியிருக்கும் குருதியின் வீச்சமா இன்றின் சுவடு? நிர்ப்பந்த இருளில் ஒளியெண்ணி மூச்சுத்திணறும் உடல்களும் உளங்களும் பொசுங்கும் வாடைதான் வாசனையா? தமயந்தியின் கதைகளைப் பின்தொடர்ந்தால் செவியறையும் கூக்குரல்கள் இவை.
சில நேரங்களில் கலைகோரும் அளவீடுகளையும் தாண்டி கதைகளிலுள்ள அவலத்தின் அடர்த்தி அதிர்ச்சி அளிக்கிறது. குஞ்சுகளும் பறந்து போனதற்கு பிறகு முன்னிருந்த சில தடயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் பறவைக்கூட்டின் வெறுமையை ஒத்த நிர்க்கதியோடு உச்சிக்கிளையில் வலித்திருக்கிறது இவர் கதைகள். ஒரு கொடுஞ்சூறைக்காக காத்திருக்கும் அந்த நிர்க்கதித்தன்மை, பறவைக்கூட்டின் வெறுமையை இல்லாதொழிக்கும். அது காற்றில் அலைக்கழிக்கப்படும். அதனுள் எஞ்சிக்கிடக்கும் இறகொன்று மேல்நோக்கி எழுந்து பறக்கும்.
அப்போது வெறுமையின் பெருமூச்சும், தத்தளிப்பும் அற்றுப் போகும். காற்றில் தனித்துப் புரளும் ஒவ்வொரு இறகும் ககன வெளியின் வெறுமையை ஒழிக்கிறது. தமயந்தியின் கதைகளும் அப்படியானவைதான். இவரின் இறகுகள் உயரவெழுந்து ஆழத்தை அடைகின்றன என்பேன். ஏனெனில் சமூகத்தினாலும், அதனுடைய கட்டித்துப் போன விதிமுறைகளாலும் நிகழும் வன்முறையைச் சகித்துக்கொள்ளும் உறவு அமைப்புக்களாலும் முடக்கப்பட்டு பிணியுற்ற கதாபாத்திரங்களை வாசிக்கவே பேரதிர்ச்சியாக இருக்கிறது.
தமிழ்ச் சிறுகதையுலகில் எண்பதின் இறுதியில் எழுதப் புகுந்தவர் தமயந்தி. நவீன வாழ்வை என்றுமுள்ள சிக்கல்களோடும், காயங்களோடும் எழுதத் துணிந்தவர்களுள் இவரும் ஒருவர். ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்த படைப்பாளிகளின் நீட்சியாக கதைகளை முன்வைத்தார். பெண்ணின் நிலைபற்றி கொதிக்கும் ஆவேசங்களோடு நிகழ்ந்தது தான் இவரின் இலக்கியப் பிரவேசம். இன்றைக்கு எழுத வருகிற பெரும்பான்மையானவர்களுக்கும் இதே ஆவேசக் கருதுகோள்களே உள்ளன. வெறும் கொதிப்பும் வலியுமிருப்பின் மட்டுமே அவைகள் கதைகளாகிவிடுமா? சிறுகதைக்கான கலை நேர்த்தியை ஆவேசம் அடித்துச் சென்றால் குறையில்லையா? என்ற விமர்சனப் பார்வையை அன்றைய காலத்தில் கேட்பது நியாயமற்றதாக இருந்திருக்கும். பெண்ணின் எழுத்தையும், அதனுடைய அதிரடியான வெளிப்பாட்டு முறையையும் பெரும்பான்மை ஆண் மையச் சமூகம் கடுமையாக விமர்சித்தது.
ஆனால் எழுத வந்தோர் அனைவரும் கலையைக் காவு கொடுத்து பிரகடனங்களாய் மட்டுமே எஞ்சியவர்கள் இல்லை. ஆர். சூடாமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, உமா மகேஸ்வரி ஆகியோரை கலைகுன்றாத இலக்கியக்காரர்களாகக் குறிப்பிடமுடியும். இந்த நிரையில் தமயந்தியும் ஒருவர் என்பது மிகையற்றது.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிய நோக்கில் எழுதப்பட்ட படைப்புக்களில் தமயந்தியின் சில கதைகளுக்கும் இடமுள்ளன. ஆனாலும் அந்தக் கதைகள் அதனையே முதல் நோக்கமாகக் கொண்டு நிகழ்ந்தவை அல்ல. அதுவரைக்குமான பெண்ணெழுத்தின் பொதுவான அம்சங்களை இவர் கதைகள் உதறின.
உரையாடல்களின் வழியாக கதையை நகர்த்தும் லாவகத்தாலும், மெல்லிய பகிடிகளாலும் தன்னையொரு தனித்துவப் படைப்பாளியாக உருவாக்கிக் கொண்டார். பெண்ணுலகின் கதைகள் பொதுவான சிக்கல்களையோ, தன்மைகளையோ கொண்டிருப்பதில்லை என்பதற்கான மிகச்சிறந்த சான்றாக தமயந்தியின் கதைகளை முழுவதுமாக வாசிக்கையில் வாசகர்கள் கண்டடைய முடியும்.
நகரம் – நகரமால்லாத நிலவெளியில் நவீன வாழ்வு எதிர்கொள்ளும் வித்தியாசங்களும், எதிர்கொள்ளலும் பல அடுக்குகளில் அமைந்திருக்கிறது. தமயந்தியின் கதைகளிலுள்ள தொடக்க விவரிப்புக்கள் பலவற்றில் கவித்துவமும் அனுபவமும் இழையோடிருக்கிறது. கால்களில் பூட்டப்பட்ட தளைகளை அறுப்பதற்கு கவித்துவம் கூர்மையான ஆயுதம் என்பதை அறிந்தவர்களுள் தமயந்தி முதன்மையானவர்.
தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது. தமிழ்க் கதைப் பரப்பில் அவரளவுக்கு குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக்காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது. பரீட்சார்த்தமான கதை சொல்லல்களின் வழியாகவும் அந்நியப்பட்டுப் போகாமல் வாசகர்களுக்கு நெருக்கமாகும் கதைகள் என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.
இந்தக் கருத்துக்களோடு சேர்த்து சிலவற்றை சொல்ல வேண்டும். தமயந்தியின் கதையுலகின் அதிசிறப்பான அம்சமாக இருப்பது அவருடைய பிராந்தியத்தன்மை. இந்த தன்மையே அவருடைய படைப்புகளுக்கும் தனித்த விஷேசத்தை உண்டு பண்ணுகிறது. ஒருவகையில் தாமிரபரணி நிலவியலிருந்து எழுத வந்த பெண் படைப்பாளிகளுள் தமயந்தி தலையாய சக்தியாகவும் இருக்கிறார். படைப்பாளிக்கு பிராந்தியந்தன்மை மிக முக்கியமான ஒன்று. அதனைக் காவு கொடுத்து உலகத்தார் அங்கீகாரம் பெறுவதற்கு முண்டியடிக்கும் “எல்லோர்க்கும் பொதுவான மொழி” இலக்கியக்காரர்கள் குறித்து விசனமில்லை. ஆனால் மு. சுயம்புலிங்கத்தின் புகழ்பெற்ற கதையான “ ஒரு திருணையின் கதையில் வருகிற “திருணை” என்கிற சொல்லே எழுத்தாளனுக்கும் மண்ணுக்குமான பந்தத்தை காண்பிக்கிறது. தமயந்தியின் தலைப்புக்களில் பிராந்தியமில்லை. கதைகளில் நிறைந்திருக்கின்றன.
அந்திவானின் ஆயிரம் வெள்ளி என்கிற இந்தத் தொகுப்பிலுள்ள சில கதைகள் அபாரமான நுட்பங்களோடு அமைந்திருக்கின்றன. உறவு முறைகளின் மீது கட்டாயமாகப் போர்த்தப்பட்டிருக்கும் அன்பெனும் மாயையை கண்ணீர் கொண்டு கிழிக்கிறது. நீண்டலையும் நிழல் கண்டு அச்சம் கொண்டிருக்கிறீர்களா எனத்தொடங்கும் கதை முடிகிறபோது உடல் அதிர்கிறது. மின்மினிப் பூச்சி போல அலையும் வார்த்தைகளை ஒற்றை விரலால் நகர்த்தி அணைக்க முனையும் சாட்சியாக கதை சொல்லி அமர்ந்திருக்கிறார். தன்மை நிலையில் விவரிக்கப்பட்ட கச்சிதமான கதை. துக்கத்தின் கதுப்புச் சுவையை வாசகருக்கு கையளிக்கும் எழுத்துத்திறனால் பெருமூச்செறிய செய்கிறார். அன்றாட வாழ்க்கையின் மீது சலிப்புற்றவர்களின் குரல்கள் இலக்கியத்திலேயே அதிகமாக கேட்கின்றன.
கடுமையான மீறமுடியாத சமூக யதார்த்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தால், சமூக விழுமியங்கள் என்பவை பெரும்பாலும் சுய ஏமாற்று என்பதற்கு அப்பால் வேறொன்றுமில்லை. ஆனால் சாமானிய மனிதன் அந்த விழுமியங்களை நம்பித்தான் ஆகவேண்டும். அவன் மனம் நிறைந்து ஆத்மார்த்தமாக தானே உருவாக்கிய அந்த மாயையை தானே நம்பவும் செய்கிறான். தடையின்றி வாழ்க்கை நிலை நிற்க வேண்டும் என்ற விலங்கியல்பின் மீறமுடியாத உந்துதலால் மனிதன் செய்யும் செயல்கள் நெறிகளாக, கலாச்சார கூறுகளாக மாறுவேடம் போட்டுக்கொள்கின்றன. இந்தச் செயற்பாட்டிற்கு நேரடியான உதாரணம் மனிதனின் திருமணம் என்ற ஏற்பாடு – என்கிறார் இலக்கிய விமர்சகர் பி. கே பாலகிருஷ்ணன்.
இந்தக் கூற்றிலிருந்து தமயந்தியின் இன்னும் சில கதைகளின் அகக் கொந்தளிப்புக்களை கண்டடைய முடியும். இப்படிக்கு வாழ்க்கை என்ற கதையில் வருகிற யாழினிக்கும் – பிரபாவுக்கும் இடையிலான உறவு நிகழும் காலத்தில் கதை நகர்கிறது. ஆனாலும் இந்தக் கதையின் ஆதாரம் யாழினியின் கடந்தகாலத்திலிருந்தே உருக்கொள்கிறது. வாழ்வைச் சுற்றியுள்ள புறவயங்கள் நமது விருப்பு வெறுப்புக்கு அசைவன அல்ல. அதனது விசையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் யாழினியின் விடுபடல், இடர்களை எதிர்கொள்ளும் துணிவு, அவளது காதல் ஏக்கம் என்பன அகவயத்தில் ஒரு விடுதலையை அளிக்கிறது.
தமயந்தியின் கதைகள் மனித மனங்களின் பலஹீனங்களையே மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றன. இனிமைக்குத் திரும்பவியலாத கசப்புகளின் பிரார்த்தனையாக எதிரொலிக்கின்றன. தொடக்ககால பெண்ணெழுத்தின் முத்திரையாகவிருந்த யதார்த்த பாணியிலான கதைகள் ஒரு சாராரால் இன்றுவரையும் தொடர்கின்றன. இதனைக் கடந்துயுயரும் தீவிரமான எழுத்துச் செயலுக்குள் தமயந்தி புகவேண்டுமென விரும்புகிறேன். ஏனெனில் தமிழ்ச் சிறுகதையுலகில் புறமொதுக்கமுடியாத இவரைப் போன்ற எழுத்தாளுமைகள் படைப்புத்தளத்திலிருந்து விலகவோ, இடைநிற்கவோ கூடாது என்பது என்னுடைய பெருவிருப்பு. இந்தத் தொகுப்பிலுள்ள கக்கா, குவாரண்டைன், மீச ஆகிய கதைகள் நுட்பங்கள் வழியாக எந்தப் பெறுமானத்தையும் பெறவில்லை. ஆனால் கதையுலகின் விஸ்தீரணத்தை செழுமை குறையாமல் முன்வைக்கும் புனைவாற்றல் ஆச்சரியம் தருகிறது.
எழுத்தாளர் உமா மகேஸ்வரி பெண் புனைகதையாளர்களில் முதன்மையானவர். ஆழ்ந்த உணர்ச்சிகரம் கொண்ட படைப்புக்களை தமிழுக்கு அளித்தவர். அவரது “யாரும் யாருடனும் இல்லை” என்ற மெய்யியல் தன்மையிலான அந்தக் கூற்றே, தமயந்தியின் கதையுலகில் செல்வாக்குச் செலுத்துகிறது. தன் ஸ்வாதீனத்தின்மீது நிர்ப்பந்தத்தை விளைவிக்கும் புறக்காரணிகள் மீது கசப்புணர்வோ அவற்றுக்கு எதிராக வளர்த்தெடுத்துக்கொண்ட வன்மமோ உமா மகேஸ்வரியின் படைப்புகளில் வெளிப்படுவதில்லை என்று மதிப்பிடுகிறார் கவிஞர் மோகனரங்கன். தமயந்தியின் படைப்புக்களிலும் அதுவே நிகழ்கின்றது. ஆனால் கசப்பான புறவுலகத்தை பதிவு செய்கிறார். இந்தத் தொகுப்பிலும் அதற்கான சாட்சிகள் உண்டு .
“சிருஸ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால் என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எதுவென்று கண்டுபிடிக்க எழுத்தை நாடுகிறேன்.” என்றார் நகுலன். ஆனால் தமயந்தியோ ஏனைய பெண் புனைகதையாளர்களோ தமது உலகை ஏற்கனவே கண்டடைந்தவர்கள். ஆனால் அந்த உலகில் சிறு ஒளியை ஏற்றவே அவர்கள் எழுத்தை நாடுகிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பாட்டுக் கச்சேரி என்ற கதையில் அப்படியொரு ஒளி ஏற்றப்படுவதை வாசகர்கள் தமது அனுபவத்தில் உணருவார்கள். அன்றாட உண்மையின் பிரக்ஞைக்கு அப்பால் ஓருலகில் எழுத்து உருவாக்கும் வாழ்வின் அடர்த்தியே கலையாகும். அதன் அர்த்தங்கள் வார்த்தைகளால் ஆனவை அல்ல. உணர்ச்சியாலும், பரஸ்பர ஒத்திசைவாலும் அந்தக் கலை வாசகரின் மனத்தை வென்றுவிடுகிறது.
அந்திவானின் ஆயிரம் வெள்ளி என்கிற இத்தொகுப்பிலுள்ள சில கதைகள் தன்னளவில் நிறைவு கொள்ளாதுள்ளன. ஒரு கொடி ஒளியின் திசைநோக்கி தன்னுடைய வளருமுடலை படர்த்துவது போல கதைகளை அதனது சுபாவத்தில் வளர விடுவதும் சிறந்த எழுத்துச் செயலே. இன்னொரு பிரதானமான குறைபாடாகத் தோன்றுவது கதைகளுக்கு நடுவே வருகிற மேலோட்டத்தன்மையான துணுக்குகள் போன்ற உரையாடல்கள்.
இற்றைக்கு தமயந்தி ஒரு தலைமுறையைக் கண்ட எழுத்தாளர். அவருடைய தொடக்ககால கதைகளிலிருந்த கச்சிதத்தன்மை இன்றுள்ள கதைகளில் சிதறுண்டு போயுள்ளன. வாழ்வின் ஒரு கூறை மட்டும் வேறுபடுத்தி இனங்கண்டு, அதில் மட்டுமே கவனம் கொள்ளும் புனைகதை வடிவமான சிறுகதைக்கு ஒருமையே உயிர் மையம் என்பதை அறிந்திராதவரில்லை தமயந்தி. சில வேளைகளில் இந்தச் சிதறுண்டிருக்கும் வடிவத்தை மனவோட்டத்தோடு முயங்கி கண்டடைந்திருக்கவும் கூடும். வாழ்வின் எல்லாச் சரடுகளும் சிதறுண்ட காலத்தில் கதைகள் மட்டும் ஏன் கச்சிதமாக இருக்கவேண்டும் என்று குரல் எழுப்பும் தரப்புத்தான் தமயந்தியினுடையது என்பதையும் அறிந்துமிருக்கிறேன்.
“இருளில் நடக்கிற சனங்கள்; பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்” என்கிறது வேதாகமம். இப்படியானதொரு வெளிச்சமே எழுத்து. இருளில் இருந்து எழுதுவதே ஒளிக்காகவே. ஒரு புனைகதையாளராக மட்டுமின்றி கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், பாடலாசிரியராகவும் எழுத்தில் இயங்கும் தமயந்தி அவர்கள் வெளிச்சத்தின் ஆரங்கள் பூண்ட வார்த்தைகளை வைத்திருக்கிறார். அவர் எழுதுவதற்கு எத்தனையோ நிழலிரவுகளும், வதைகளும் உள்ளன. முழுவீச்சோடு படைப்பாளி என்ற செயற்பாட்டில் அவர் இடையறாது தொடரவேண்டும். இரண்டாயிரங்களில் எழுந்த பெண்ணியக் கவிதை அலையில் முக்கிய கவிஞர் ஒருவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் எழுத வந்தமைக்கு முக்கிய உந்துதலையும் துணிச்சலையும் வழங்கியது தமயந்தியின் எழுத்துக்களே என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
எழுத்தாளர் தமயந்திக்குப் பிறகு எழுதவந்த பெண் படைப்பாளிகள் பலருக்கும் ஏதோவொரு வகையில் உந்துதல் அளித்தவராக கூறமுடியும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய “ஒரு பறவைக்கூட்டின் வெறுமை” என்கிற சித்திரம் வெறும் அழகியல் உணர்ச்சிக்காக கூறப்பட்டதல்ல. அதுவே தமயந்தி கதைகளின் உருவகமும். இனிவரும் காலங்களில் கசப்பழிந்த திசைகளில் அவர் கதையுலகம் புகும். அவர் பாதங்களில் இனிமையின் கடல் படரும்.
- அகரமுதல்வன்