
உடைந்து சிதறவும் இயலாத தவிப்பின் வெளியில் என் கூடு மிதந்திருந்த காலத்தில் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களோடு அறிமுகம் ஏற்பட்டது. நடுமதியப் பொழுதொன்றில் என்னுடைய கவிதைகளை வாசித்துவிட்டு தொலைபேசியில் அழைத்து “தம்பி…நான் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறேன்” என்றார். தம்பி என்பது வெறும் வயதால் அளவிடப்பட்ட உறவுச்சொல்லாக இவரிடம் இருந்து எழவில்லை என்று தோன்றியது. கவிதைகள் குறித்தும் ஈழப் பேரழிவின் குருதிப் பொருக்குலராத மானுடத்துயரையும் பேசினார். விரிவாக நேரில் பேசலாம். என்றேனும் ஒருநாள் அலுவலகத்திற்கு வாருங்கள் என்று வரவேற்றார். உறுதியாக சந்திக்கலாம் என்பதோடு அந்த உரையாடல் தீர்ந்திருந்தது.
அதன்பிறகான நாட்களில் சந்தித்துக் கொண்டோம். எந்தவித அரசியல் உரையாடலுக்கும் விவதாங்களுக்கும் இடமளிக்கும் ஆளுமையாக என்னைக் கவர்ந்தார். இலக்கியத்தையும் அதனது நிலையான தீவிரத்தையும் அவரது நம்பிக்கையில் இருந்து தொடர்ந்து முன்வைத்தார். எழுத்தாளர்களான அந்தோன் செக்காவ், கந்தர்வன், வேல ராமமூர்த்தி ஆகியோரது படைப்புக்களை எனக்கு அறிமுகம் செய்தார். வாசிப்பின் வழியாக மீண்டெழ வேண்டுமென்ற என் உளத்திமிருக்கு உறுதுணையாக இருந்தவர்களுள் பாரதி கிருஷ்ணகுமார் தலையானவர்.
“அகம் நெகிழப் புகுந்து அமுதூறும் புதுமலர் கழல் இணை” எனத் தொடங்கும் இந்தப்பாடல் இறைவன் திருவடிகளைத் தந்தும் அதனைப் பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன் என மணிவாசகர் கவலை கொள்வது. ஆனால் எனக்கு அதுபோன்ற கவலையில்லை. பாரதி கிருஷ்ணகுமாரின் புதுமலர் கழல் இணைகளைப் பற்றிக்கொண்ட ஏக இளவல் நான். மானுடப் படுகொலை நடந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஒருவரிடம் எந்த வார்த்தைகளால் உரையாட வேண்டுமென இவர் நன்றாக அறிந்திருந்தார். ஆற்றமுடியாத என்னுடைய யுகக் காயங்களின் மீது மீண்டுமொரு குருதிப் பெருக்கை உருவாக்க எண்ணவில்லை. மாறாக அந்தக் காயத்தில் காட்டுத்தேன் ஊற்றி காயப்பண்ண எண்ணினார்.
நினைவுகள் எல்லோருக்கும் இனிமை பெய்பவை அல்ல. மாறாக அவை தீயூழாகவும் இருக்கிறது என்பதையும் உணர்ந்திருந்தார். இன்னொரு வகையில் என்னிடம் தணல் பூத்திருந்த எழுத்து எனும் வேள்வித் தீயை இனம் கண்டார். எழுதுக! என்பதைத் தாண்டி என்னிடம் வேறு எந்த நிபந்தனைகளையும் அவர் முன்வைத்தவரில்லை. கவிதைகளை விடுத்து கதைகளை எழுத வேண்டுமென முதலில் வலியுறுத்தியவர் என்ற வகையில் எப்போதும் நன்றிக்குரியவர்.
அப்போது திரைப்படம் இயக்கும் பணிகளில் மும்முரமாக இருந்தார். அலுவலகத்தில் எப்போதும் ஆட்கள் வந்து போயினர். இலக்கியம், சினிமா, அரசியல் என அலுவலகம் எப்போதும் நிறைந்திருந்தது. கதை விவாதம் நடந்தது. வேறொரு திரைப்படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் இருந்து விலகி பாரதி கிருஷ்ணகுமாரின் திரைப்பட விவாதத்தில் இணைந்து கொண்டேன். அதுவொரு பொற்காலம். என்னுடைய புலம்பெயர்வு வாழ்வில் முதன்மையான காலகட்டம். பல்வேறு படைப்பாளிகளையும், தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு முரண்களையும் அங்குதான் அறிந்து கொள்ள முடிந்தது.
பாரதி கிருஷ்ணகுமாரை நான் BK என்று அழைக்கத்தொடங்கும் அளவுக்கு உளத்தாலும், சூழலாலும் நெருக்கமானேன். என்னை எங்ஙனம் அவர் அணைத்துக் கொள்ள எண்ணினார் என்று அறியேன். அன்பைக் கடலில் மிதக்கும் நிலமென ஆக்கி, என்னை அதில் அமரச்செய்தார். கனலும் என் அகத்தையும் முகத்தையும் தன் குளிர் பொருந்திய புன்னகையால், ஸ்பரிசத்தால் ஒத்தடம் தருவித்தார். எனது குருதிக்குள் கொந்தளிக்கும் அலை கடலின் ஆர்ப்பரிப்பை, அதனது உப்பின் ரோஷத்தை, நுரைகளின் கேவலை அவரளவுக்கு ஆழமாக விளங்கிக் கொண்ட ஒருவரை இன்னும் நான் சந்திக்கவில்லை.
அப்பத்தா என்கிற சிறுகதை தொகுப்பை வாசித்தேன். கோடி, அறம் வளர்த்த நாதன், லுங்கி ஆகிய கதைகள் குறித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறோம். “ராமையாவின் குடிசை” ஆவணப்படம் தந்த பாரத்தை எங்கும் இறக்கிவைக்க இயலாது இரண்டு மூன்று நாட்கள் அது குறித்து மட்டுமே பேசினேன். பாரதி கிருஷ்ணகுமார் என்கிற பெயர் பல்வேறு துறைகளில் அறியப்பட்டது. அவருடைய மேடைப் பேச்சு என்பது தமிழ் அறிவியக்கப்பரப்பில் ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. இடதுசாரி அரசியல் – கலை இலக்கிய மேடைகளில் அவரது உரை கடந்தகாலத்தின் மகத்தான செயற்பாடுகளில் ஒன்று. மேடைப் பேச்சிலுள்ள ஜனரஞ்சகத் தன்மையை முதன்மையாக ஆக்காமல் இலக்கியத்தையும், கருத்துக்களையும் பாமரர்களால் வெளிப்படையாக அறிந்து கொள்ள இயலாத அரசியல் சூழ்ச்சிகளையும் அப்பட்டமாக, நையாண்டியாக முன்வைப்பதில் BK – வுக்கு நிகர் BK தான். தமிழ்நாட்டின் மேடைப் பேச்சின் யுக நாயகர்களின் நிரையில் BK தேயாத பூரணம்.
ஒரு அரசியல் தரப்போடு தன்னை அடையாளப்படுத்தும் படைப்பாளிக்கு எல்லைகள் உண்டு. நிர்ப்பந்தமான சாய்வுகள் உண்டு. விரும்பினாலும் ஏற்க இயலாத நெருக்கடிகள் உண்டு. பாரதி கிருஷ்ணகுமார் என்கிற ஆளுமைக்கும் அதுபோன்ற காலங்கள் இருந்தன என்றே தோன்றுகிறது. படைப்பாளியை நெருக்குவதில் வலதுக்கும் இடத்துக்கும் வித்தியாசமில்லை. பாரதி கிருஷ்ணகுமார் என்கிற படைப்பாளியிடமிருந்து வெளிக்கிளம்பவிருக்கும் கதைகள் ஏராளமுள்ளன. அவற்றில் சிலவற்றை அறிந்திருக்கிறேன்.
ஒரு களப்பணியாளராக, லட்சியவாத தலைமுறையின் முக்கிய ஆளாக இவரின் தன்னனுபவங்கள் எழுதப்படவேண்டும். சனங்களின் மீதும் அவர்களின் வாழ்வின் மீதும் அக்கறை கொண்ட அவரது அனுபவங்கள் ஒவ்வொன்றும் வியப்புக்குரியன. இன்றுள்ள பேச்சாளர்களில் பாரதி கிருஷ்ணகுமார் அரிதான சக்தி படைத்தவர். நவீன இலக்கியத்தோடும், மரபு இலக்கியத்தோடும், கார்ல் மார்க்சுடனும், மாணிக்கவாசகருடனும், கம்பனுடனும், திருவள்ளுவருடனும், குர் – ஆனோடும், பைபிளோடும், கீதையோடும் தன்னுடைய உரைகளை நிகழ்த்த வல்லவர். வாசிப்பின் வழியாக ஒரு மனிதன் அடையும் கம்பீரமும் உயர்வும் எப்படியாகப் பட்டதென்றால் அது BK போல என்றால் மிகையில்லை.
- அகரமுதல்வன்