
இரண்டு வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் உரையாற்ற சென்றிருந்தேன். மிகப்பெரும் இயற்கை ஊழியைச் சந்தித்து ஒட்டுமொத்த ஊரும் மீண்டு வந்திருந்த நாட்கள். தாமிரபரணியின் வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட சனங்களின் உடமைகள் கரையொதுங்கியும், நீர்ச்செடிகளில் அகப்பட்டும் அசைந்து கொண்டிருந்தன. அதனால் நதியைப் பார்த்த பரவசம் எனக்குள் எழவில்லை. “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்”சிறுகதைத் தொகுப்பினை வாசித்து முடித்த நாட்களில் இதே அனுபவத்தை சந்தித்திருக்கிறேன். நீண்ட பிரார்த்தனையைப் போல அசைந்து கொண்டேயிருக்கும் நதியின் குற்றவுணர்வை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.
மாஞ்சோலை சனங்களின் குருதிக் கதைகளை அது அரற்றிக்கொண்டிருந்தது. நதியின் பிள்ளைகளை நதிக்கே பலியிட்ட குரூரத்தை எண்ணி எண்ணி விம்மினேன். “அழத் தெரிந்தவர்களிடம் உடனே நெருக்கமாகிவிடுவது, உன் ஆகச்சிறந்த கெட்ட பழக்கங்களில் ஒன்று” மாரிசெல்வராஜ் கதையொன்றில் வருகிற உரையாடல் இது. வாழ்வு முழுதும் கண்ணீருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களுக்கு பிறர் ஒருவரின் கண்ணீர் நெருக்கத்தை தந்துவிடும். என்னையும் மாரிசெல்வராஜையும் நெருக்கமாக்கியது வற்றாநதியும், நந்திக்கடலும். நீரில் உப்பி மிதந்த உற்றவர்களின் பிணக்குவியல், திக்கற்று நின்றழும் அம்மைகளின் முன்பு நிராதரவாக நின்ற எங்களின் தெய்வங்கள், இரத்த விதியின் சாட்சிகளான குழந்தைப் பிராயம் இவை எல்லாமுந்தான்.
மாரிசெல்வராஜ் படைப்புக்கள் சுயவரலாற்றுத்தன்மை உடையன. தலித் இலக்கியத்தின் முதன்மையான உறுப்பென இதனைக் குறிப்பிடலாம். ஏனெனில் ஒவ்வொருவரின் கதைகளின் வழியாகவும் இதுவரைக்கும் கூறப்படாத நீதிக்குப்புறம்பான வரலாற்றை காலம் திரட்டிக்கொள்ளமுடியும்.
மாரிசெல்வராஜ் எழுதிய கோழியாப்பண்ணை சிறுகதையில் “மானா இருந்தா தானே, ஓநாய்ங்க பிரச்னை, நாமளும் ஓநாய்ங்களா நின்னு முறைச்சி ஓங்கி ஊளையிட்டா, எந்த நாய் இந்தப்பக்கம் வரும்?” கணேசன் என்கிற இளந்தாரிக்கும் இன்னொருவருக்கும் இடையில் இடம்பெறுகிற உரையாடல் இப்படியாக அமைந்திருக்கிறது. இப்படித்தான் ஏற்கனவே எழுதப்பட்ட கரிப்பும் கசப்புமான வரலாற்றை வழிமறித்து முறைச்சு ஓங்கி ஊளையிட வேண்டியிருக்கிறது. மாரியின் கலைப்படைப்புக்கள் அதனையே தொடர்ந்து செய்கின்றன.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் தென்தமிழ்நாட்டின் நிலவியலைக் கொண்டிருப்பவை. மண்ணின் சாரமும் நம்பிக்கைகளும் உணர்வுபூர்வமாக முன்வைக்கப்படுகின்றன. நிறைகுலத்தான் இரகசிய மந்திர ஓசையென காட்டுப்பேச்சி என்கிற பெண்ணின் நினைவையே வாழ்வென ஆக்கியிருக்கிறார்.
“தினமும் வயித்துல பசியெடுக்கிற மாதிரி மனசுல பசியெடுத்து கூப்பாடு போடும். பார்த்தே ஆகணும்னு தோணும். எங்க இருக்கா, யார் கூட இருக்கா எல்லாம் தெரியும். எந்திரிச்சா ஓடிப்போய்ப் பார்க்கிற தூரம்தான். ஆனா அந்தத் தெருவுக்குள் நான் போகமுடியுமா? விடுவாங்களா என்னை?” என்று கேட்கிறார்.
“அப்போதான் நீ அந்தத் தெருவுக்குள்ள போகக்கூடாது. இப்போதான் போகலாமே. வா இப்போ போய் பார்ப்போம்” என்று அழைக்கிறான் முத்து.
நிறைகுலத்தான் கடந்த காலமொன்றிற்குள் உறைந்திருக்கிறார். அவரை முத்து நிகழ்காலத்திற்குள் அழைத்துச் செல்கிறான். நிகழ்காலத்தில் தெருவுக்குள் எல்லோராலும் புகுந்து கொள்ளமுடிகிறது என்பதே நிறைகுலத்தானின் திகைப்பாகவிருக்கும். முத்து என்கிற சிறுவனோடு ஐயர் தெருவுக்குள் போகிற காட்சி அசல்தன்மை கொண்ட இந்தத் தலைமுறையின் நிமிர்வு எனலாம்.
மாரிசெல்வராஜ் கதைசொல்லி மரபைச் சேர்ந்தவர். அதனாலயே அவர் புனைவின் மீதான நம்பகத்தன்மை இயல்பிலேயே நிகழ்கிறது. கதைகள் ஆசிரியராலோ, கதாபாத்திரத்தாலோ சொல்லப்படுகின்றன. இவருடைய புனைவுலகு யதார்த்தத்தின் மீது சித்தரிக்கப்படுகின்றன. நொம்பலங்களும் தத்தளிப்புகளும் அழுத்தம் கொண்டு விரிகின்றன.
ஆனால் யதார்த்தவாதக் கதைகளை மட்டுமே அவர் எழுதவில்லை. இந்தத் தொகுப்பில் பேய் கதையை அதற்கு மாற்றாக கூறமுடியும். நாட்டார் தொன்மங்களையும் வழிபாட்டு நம்பிக்கைகளையும் வலியுறுத்தும் படைப்புக்கள் மொழிக்கு மிக முக்கியமானது. இந்தத் தொகுப்பின் முதன்மை சிறப்பென அதனையே கூறலாம்.
உலகியல் கசப்போடும் நெருக்கடியோடும் வாழக்கூடிய இரண்டு கிழவிகளின் மீது காலம் நிகழ்த்தும் அவலம் மறக்க இயலாதது. இந்தக் கதையின் வாசக அனுபவமாக இருப்பது நான் மேற்கூறிய யதார்த்தம். வாழ்வின் உண்மை இதைவிடவும் குறைந்த வேதனையாக இருக்கலாம். ஆனால் ஒரு கதைசொல்லியின் வழியாக அது நிகழும் போது உக்கிரமானதொரு துக்கமாக மாறிவிடுகிறது.
கதையின் இறுதியில் மண்ணிலிருந்து விரட்டப்பட்ட அந்தட்டிகளாக அவர்கள் நதியில் இறங்குகிறார்கள். இனிவரும் காலங்களில் அவர்கள் இசக்கியராக அந்த நதியிலும் மண்ணிலும் முளைத்து எழுவார்கள் அல்லவா!
தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம் என்பது கோட்பாட்டுத் தீவிரங்களில் இருந்து உருவாகி வரவேண்டுமென சிலர் நிர்ப்பந்தம் செய்தார்கள். ஆனால் நாம் கொண்டாடக்கூடிய அசாதாரணமான படைப்புக்கள் அந்தக் கோட்பாடுகளை புறந்தள்ளின. தமக்கு வாழ்வளித்த தீவிரமான அனுபவங்களை படைப்புக்களாக மாற்றினார்கள். அதுபோலவே தமிழ் வாழ்க்கை, வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றிலிருந்தும் அதனை கத்தரிக்க எண்ணினார்கள்.
ஆனால் படைப்பாளிகள் இசக்கியிடமும், மாடனிடமும், காட்டுப்பேச்சிகளிடமும், தத்தமது தெய்வங்களிடமும் பொருதி எழுந்தார்கள். மாரிசெல்வராஜ் இவற்றை தனது கதைகளின் அழகியலாக ஆக்கினார். சுயவரலாற்றுத்தன்மையில் நேரடியான ஆவணத்தன்மையை களைந்தார். சில கதைகளுக்கு அவரே ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார். இந்தத் தொகுப்பில் அதுபோன்ற கதையாக “காட்டுப் பேச்சிகளை காதலித்தவன்” கதையைக் கூற முடியும்.
நான் இந்தக் கதையை வெளியாகும் முன்பே வாசித்திருக்கிறேன். மாரிசெல்வராஜ் – திவ்யா திருமண அழைப்பிதழில் இந்தக் கதையை அச்சிட்டு இருந்தோம். “முக்குளி வாத்துக்களின் கதை” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. காதலித்து வெளியூருக்குத் தப்பி வந்த இருவரும் தற்கொலைக்கு முன்பாக எழுதிய கடிதங்கள் அவர்களை உயிரோடு வாழப் பணிக்கின்றன. நாம் ஒருபோதும் கொலை பாதகர்களுக்கு பயந்து உயிரை மாய்க்ககூடாது என்ற சத்தியத்தோடு அவர்கள் பிரிந்து கொள்கிறார்கள். அதன்பிறகு காதலன் வேறொரு பெண்ணை காதலிக்கிறான். அந்தப்பெண்ணிடம் ஏற்கனவே நடந்த கதையைச் சொல்லுகிறான். இந்தக் கதை தமிழ்ச் சிறுகதையுலகில் ஒரு தனித்துவமான கதை.
மாரிசெல்வராஜ் தீவிரமான வாழ்க்கைப் பின்னணி கொண்ட கதைகளை எழுதும் அதே வேளையில் அவரின் புனைவு மொழியாற்றல் அதிசிறப்பானது. தாமிரபரணி இலக்கியச் செழுமையில் மாரியின் உவமைகளும் காட்சி சித்தரிப்புக்களுக்கும் அதற்கு முன்பு முன்னோடிகள் இல்லையென நம்புகிறேன்.
மண்ணில் புதைந்து இருளைத் தாங்கும் சின்னஞ்சிறிய விதைகளின் கனவென்பது வானின் வெளிச்சத்தைத் தங்கள் இலைகளால் வாழ்நாள் வரை பருகி மகிழ்தலே. தன்னிலிருந்து இன்னொன்றாகத் தன்னையே பிறப்பித்து பல்லாயிரம் தலைமுறைகள் தாண்டி விதைகள் தங்கள் கனவுகளைக் காப்பாற்றுகின்றன. மனிதமனம் இவ்வாழ்வின் மீது மீளமீள நம்பிக்கையடைவதற்கான நற்குறியீடு இது. அவநம்பிக்கையும், அறமின்மையும் பெருகத்துவங்கியுள்ள சமகாலத்தில் அன்பை முளைப்பிக்கும் செயல்கள் அனைத்துமே மானுடத்தின் மீட்சிக்கானவை என்கிறார் காந்தியவாதி சுந்தர்லால் பகுகுணா. மாரிசெல்வாராஜ் கதைகள் மானுடத்தின் மீட்சிக்கானவை. இனிவரும் தலைமுறைக்கு விதைகளின் கனவை கையளிக்கும் ஒரு பணியை அவருடைய படைப்புக்கள் முன்னெடுக்கின்றன. நதியின் கரையில் இசக்கிகளாகவும் மாடன்களாவும் நிற்கும் தங்கள் மூதாதையருக்கு கதைகளை படையலிட்டு தணிக்கிறார்.
மாரியின் கதைகள் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, நிலத்தில் முளைத்த தெய்வங்களுக்குமானது தான் என்பதே அழகு.
கொம்பு வெளியீடு
விலை – 180 ரூபாய்
தொடர்புக்கு – 9840661884