
01
சிறிய பொன்வண்டாகி
வனாந்தரமெங்கும்
பறந்தலைந்து
வாகை மரத்துக் கிளையில்
களைப்பாறுகையில்
கட்டை விரலாலும்
ஆட்காட்டி விரலாலும்
கைப்பற்றிக்கொண்ட
சின்னஞ்சிறுமி
அடைத்து வைத்த
தீப்பெட்டிக்குள்
எவ்வளவு வெளிச்சம்
எவ்வளவு புன்னகை
காட்டின்
எந்த திசையும்
அருளாத குளிர்
ஆனாலும்
தீப்பெட்டியின்
மேல்தட்டைத் திறந்து
உள்ளே
இருக்கிறேனா
என்றும்
நோக்குகிறாள்.
சின்னஞ்சிறுமியே
சுடர்க்கொழுந்தே
நான்
பூதமல்ல
பொன்வண்டு
நீயுறங்கு
நாளையும்
நான் பொன்வண்டு.
02
பாழ்மண்டபத்தின்
கும்மிருட்டில்
அகல் விளக்கு ஏற்றி
குந்தியிருப்பவளை
அம்மாவென்றுதானே
அழைத்தேன்
அவள் திரும்பக்கூடவில்லை
ஆனாலும் அகல்
வானுக்கும்
மண்ணுக்குமென
எழுந்து விழுந்தது
அவள் கண்ணீர் எப்படி
வானத்தில் இருந்து சொரிந்தது
அவள் ததும்பி விசும்புவது
எப்படி நிலமெங்கும் அதிர்ந்தது
அம்மையே!
ஊழி சூழும் முன்பு
என் தொப்பூழ்க்கொடியை
அறுத்துவிடேன்
என் கால்களை
கொஞ்சம் பூமியில் அசைக்கிறேன்.