
விதை மலரும்
நாளொன்றிற்காக
கனல் தணித்து
விரிந்திருந்தது
நிலம்
மழை பொழியும்
பொழுதொன்றிற்காக
சிறகுலர்த்தி
கிளையமர்ந்திருந்தது
பறவை
அந்தியறிந்து
வீசும் காற்றில்
றெக்கைகள் அதிர
அலையாய் அலைந்தது
தும்பி
பகலுக்கும்
இரவுக்கு இடையில்
கைகோர்த்து நுழையும்
பூமிக்கு
குப்பென்று வேர்த்தது
பனங்கூடல்
பைரவரின் சந்நிதியில்
அணையாமல்
சுடருகிற அகல் விளக்கொளியில்
நிழலாடித்
தீர்ந்தது
நாள்.