
01
எங்கு உதிர்ந்தேன்
நினைவில் இல்லை
சதா காலடிகளுக்குள்
நசிபடும்
சருகுகளைப் போலவல்ல
இதழ்கள்
என்னில்
உதிர்பவை
மண்ணிலும்
மலர்பவை.
02
வாரங்களேயான
நாய்க்குட்டி தான்
வாலையட்டுகிறது
குரலால் குழைகிறது
எக்கித் தாவுகிறது
வாசனை பிடித்து
என்னைத் தொடுகிறது
வரவர
ஆட்டுவதற்கு வால் மறந்தும்
குழையும் குரல் இல்லாமலும்
வெறிபிடித்து நிற்கிறது
நன்றி.
03
வாடகை வீட்டின்
முகப்பு மரமொன்றிலிருக்கிறது
காகத்தின் கூடு
அது கரைந்து கரைந்து
காலத்தை குச்சிகளாக்கி
மண்ணில் வீழ்த்தியது
சில நாட்களில்
கூடு தனித்திருந்தது
நேற்றிரவு அதே கூட்டிற்குள்
நிலவு தேய்ந்தது
இன்றைக்கு
சூரியன் பொரித்தது
குச்சிகள் எரிந்து
கதிர்களாயின.