ஒரு அரிய செயலைத் தொடங்குகையிலேயே ஆயிரக்கணக்கான சவால்கள் முன் நிற்கும்.  இந்தச் சவால்களை ஏறிக்கடந்து வெல்பவர்களால் மட்டுமே  அசாதாரணங்களை நிகழ்த்த இயலும்.  ஒரு கதையை எழுதுவதற்கு முன்பாக மனம் கொள்ளும் பதற்றமும், ஒன்றெனக் குவியாத சித்திரங்களையும் எங்ஙனம் கட்டியாள என்று ஒருவர் நினைத்தால், அதன் பிறகு அவரால் எழுத இயலுமோ அறியேன். என் அனுபவத்தில் அந்த பதற்றமும் குவிய மறுக்கும் சித்திரங்களும் எனக்கொரு அசாதாரணத்தை உவந்தளிக்கும் நிமித்தங்கள். இன்னும் நிறைய நிறைய என்று வேண்டிக் கொள்வேன். அலைகளற்ற கடலிடம் இதுதான் உன் கொந்தளிப்பா என்று கேட்டுச் சிரிக்கும் சிறுவனைப் போல, மனத்திடம் இவ்வளவு தான் உன்னுடைய அருள் பாலிக்கும் சக்தியா என்றுதான் கேட்பேன். இதுவொரு அசல் திராணி. “எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்” என்றுபாடிய பாரதியின் உளத்தில் எத்தனை சமுத்திரத்தின் பேரலைகள் மலையென எழுந்து அடங்கியிருக்குமென்று எண்ணுங்கள். அரியவைகளை படைப்பதுவும், நிகழ்த்துவதும் ஒருவகையான இறுமாப்பு. சூளையில் தகித்து தகித்து மண்ணைச் சிவப்பாக்கும் நெருப்பின் கனா. தமிழ்ச் சூழலில் அப்படியொரு அரியதும் பெரியதுமான செயல் நிகழ்ந்திருக்கிறது. அது வாழும் தமிழ் இலக்கிய விழா. 

இந்த நியூயோர்க் வாழும் தமிழ் இலக்கிய விழா, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ஓர்மத்தாலும் மூச்சாலும் வீறுகொண்டெழுந்திருக்கிறது. நூறாண்டு அகவை கொண்ட நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதியதொரு வரலாற்றைத் தொடங்கி வைக்கிறார். எவராலும் ஏற்றி வைக்க இயலாதவொரு ஒளி படைத்திருக்கிறார். துலா மிதித்து நிலா இறைக்கும் இரவுகளைப் போல பங்குபெறும் ஒவ்வொரு படைப்பாளியும் அகமகிழ்கிறார்கள். மேற்குலக அறிவுசீவிகளுக்கு தமிழ்ப் படைப்பாளிகள் கபாடபுரத்தை கையளிக்கிறார்கள். எம்முள்ளும் உளன் பல  பொருநர் என்று அறிவிக்கிறார்கள். எழுத்தே வாழ்வெனக் கொண்டு, அமர்ந்திருந்து எழுதவே இடமற்று பூங்காவில் புனைவுகள் மலர்த்திய அசோகமித்ரனை ஆங்கிலேயர்கள் அறிகிறார்கள். எத்தனையோ யுகங்கள் மண்டிக்கிடந்த இருள்வெளியில் மின்னல் தரித்து நிற்குமாற் போலிருக்கிறது வாழும் தமிழ் இலக்கிய விழா. 

அந்த ஒளி இருளை மட்டும் வேண்டி நிற்கும் கண்களை உறுத்தும். அப்படியானவர்களுக்கு நெஞ்சில் எப்போதும் புழுதிப்புயல். கடைந்து கடைந்து இனிமை காணாத கசப்பின் மத்து அவர்களின் கைப்பிரம்பு. நன்மைகள் எங்கு அரங்கேறினாலும் மனம் கொள்ளாது தவிப்பர். முழத்துக்கு இருவர் நின்று முகம் கொதிக்க குறை சொல்வார். “இந்த வாழும் தமிழ் இலக்கிய விழாவிற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கு சகாவே, அது புரிபடாமல் நண்பர்களும் செல்கிறார்கள்” என்பார். “ஐயயோ தோழர் இது எனக்குத் தெரியாமலா, ஜெயமோகன் தன்னை பிரபலமாக்கிக்கொள்ள இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துகிறார்” அவர் குடித்த மிடறுத்தேநீரை எவ்வளவு இதமாக பருகினார் தெரியுமா! – இப்படிப் பேசி வலம் வர வெட்கமாயிருக்காதோ அறிந்திலேன்.  இவர்கள் மலர்ச்சியே அற்றவர்கள். இன்னொருவர் மீது மின்மினி பறந்தாலே மனம் பதைபதைத்து இருண்டு போகிறவர்கள். பூஞ்சோலையிலும் முள் எடுக்க எத்தனிக்கும் மூடர்கள் -அவர்கள் ஆக்கச் செயல்களுக்கு முரணானவர்கள். அவ்வளவே. 

வாழும் தமிழ் இலக்கிய விழா என்கிற செய்தியை ஜெயமோகன் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டே போதே, மனம் மகிழ்ந்தேன். இதுவொரு அளப்பரிய செயல் என்றேன். படைப்பாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கான பயண ஏற்பாடுகளை செய்து கொடுப்பது வரை எத்தனையோ பேரின் உழைப்பு. இந்த விழாவில் பங்கெடுக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் உயரிய வரலாற்றின் முதல் பக்கத்தில் இருக்கப்போகிறவர்கள். இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து படைப்பாளிகள் அழைக்கப்படுவார்கள். ஜெயமோகன் செய்யத் தொடங்கியிருப்பது உலகளாவிய உரையாடலை என்றால் மிகையில்லை.  வெய்யிலின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து  வாசித்தால் அங்கு வரும் மேற்குலக இலக்கியர்கள், விமர்சகர்கள் அறிந்து கொள்ளுவது கீழைத்தேய பண்பாட்டை அல்லவா – சடங்கையும், வழிபாட்டையும் அவர்கள் அறிந்திருப்பதற்கு முழுமுரணாக வெய்யிலின் கவிதையில் காண்பார்கள் அல்லவா. 

இந்த விழாவிற்கு அரண் சேர்க்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம். பங்கெடுக்கும் ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.  ஜெயமோகன் ஒரு பேராற்றல். அவரின் கனவுகள் சித்திக்கிறது. வாழும் தமிழ் என்பது பெருந்திரள் இனத்தின்  கூட்டுக்கனவு. அது எப்போதும் விழிப்புற்று இருக்கும். பாரதியின் பல கவிதைகள் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டன. அதுபோலவே பாரதி “மெல்லத் தமிழினி சாகும்” என்று பாடினார் என்போர் பலர். அவர் அப்படி எண்ணுவாரா ? அப்படி எண்ணிய  பேதையைப் பற்றி அவர் பாடினார். மனம் தவித்து வெம்பி பாடினார்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி

ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்

 

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

 

சொல்லவும் கூடுவதில்லை – அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

 

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ!

இந்த வசையெனக் கெய்திடலாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

 

தந்தை அருள் வலியாலும் – இன்று

சார்ந்த புலவர் தவ வலியாலும்

இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்

ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

 

என்று பாடினார். இந்தக் கவிதை மெல்லப் பலித்துவிட்டது.

//தந்தை அருள் வலியாலும் – இன்று

சார்ந்த புலவர் தவ வலியாலும்

இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்

ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்//

என்ற வரிகள் பலித்துவிட்டன. பாரதியின் கனவும் வாழும் தமிழ் இலக்கிய விழாவே. இதற்காக என்னைப் பகைக்கும் பேதைகளுக்கு பதில் ஏதும் உரைக்கேன்.

Loading
Back To Top