அகரமுதல்வனுக்கு! தமிழ் இந்துப் பத்திரிக்கையில் “தூரவெளி வானில் துவள்கின்ற துயில்” கட்டுரையை வாசித்தேன். தெய்வீகனின் கதைகளை வாசிக்க சிறந்த திறப்பு. உங்களுடைய எழுத்து நடை எப்போதும் போல வியப்புக்குரியது. இன்றைக்குள்ள ஈழ எழுத்தாளர்களில் நீங்கள் தனித்துவமானவர். சிறப்பானவற்றை அறிமுகப்படுத்துகிறீர்கள். நீங்கள் தொகுத்த “துயிலாத ஊழ்” என்கிற சிறுகதைத் தொகுப்பின் வழியாகவே ஈழத்தின் சமகாலத்து படைப்புக்களை அறிந்து கொண்டேன். ஆனால் ஏன் அந்தத் தொகுப்பு இன்னும் வாசகக் கவனம் பெறவில்லையென கவலையாக இருக்கிறது. நன்றி.

-ரிஷி

அன்பின் ரிஷிக்கு! தளம் ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ச்சியாக மடல்களை அனுப்பி வருகிறீர்கள். ஆழமான கவனிப்புக்களை முன் வைக்கிறீர்கள். உங்கள் இந்த மடலை வெளியிடவேண்டுமென தோன்றியது. தெய்வீகனின் “உன் கடவுளிடம் போ” சிறுகதைத் தொகுப்பு கவனிக்கப்படவேண்டியது. ஆனால் இங்கே அது நிகழாமல் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் வழியாக ஒரு அவதானிப்பு நிகழுமென எதிர்பார்த்தேன். பொய்க்கவில்லை. என்னுடைய மின்னஞ்சலுக்கே ஆறு மடல்கள் வந்துள்ளன. ஈழப்படைப்புக்களை தமிழக வாசகப்பரப்பில் முன்வைத்து விவாதிக்க எப்போதுமே சின்னஞ் சிறிய தயக்கங்கள் உள்ளன. அது திட்டமிடப்பட்டதல்ல. மாறாக படைப்புக்களில் உள்ள சார்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடப்படுகின்றன. மதுரையைக் களமாகக் கொண்ட கூழாங்கற்கள் அமைப்பினர் ஈழப்படைப்புக்களை முன்வைத்து ஒரு முழுநாள் கருத்தரங்கை நிகழ்த்தி இரண்டாயிரத்து ஒன்பதுக்கு பின்னரான இலக்கியங்கள் பற்றிய ஒரு கவனத்தைத் தமிழ்நாட்டுச் சூழலில் திருப்பினர்.  வாசகசாலை இலக்கிய அமைப்பினர் ஈழர் இலக்கியத்தைப் பேசுவதற்கு மட்டுமே, மாதாந்திரக் கலந்துரையாடலொன்றைச் செய்கின்றனர். இவ்விரு அமைப்புக்களும் இலக்கிய வெளியில் சார்பு – பாரபட்சம் இல்லாமல் உரையாடலை முன்னெடுத்தனர் என்றால் மிகையில்லை. பிறகு தனித்தனி அமைப்புக்கள், சார்பு, நட்பு என்கிற அடிப்படையில் சில படைப்புக்களைப் பற்றி விவாதிக்கின்றனர். ஆனால் நூல்வனம் பதிப்பகத்தின் வாயிலாக நான் தொகுத்து வெளியான “துயிலாத ஊழ்” ஒரு முக்கியப் பிரதி. ஏனெனில் அத்தொகுப்பில் சார்பு பேணப்படவில்லை. ஈழ இலக்கியத்தின் சமகாலத் தலைமுறையை அத்தொகுப்பின் வாயிலாக அறியலாம். அந்த நூலுக்கும் வாசகசாலை இலக்கிய அமைப்பினரே சிறந்த அறிமுகக் கூட்டத்தினை நடத்தினர்.  நூல் வெளியான சில மாதங்களிலேயே கொரோனா இருள் நம்மைக் கவ்விக்கொண்டது. அதன்பிறகு மீண்டெழும் சூழலில் அந்த நூலுக்கு பெரிய கவனம் அற்றுப் போனது. ஆனால் வாசகப் பரப்பு அந்த நூல் நோக்கி வரவேண்டும். ஏனெனில் பலகுரல்களும் – எதிரும் புதிருமான தர்க்கங்களும் ஒரே சூழலை முன்வைத்து எழுதப்பட்டிருப்பதை அறிய முடியும். உங்களைப் போன்ற ஒரு தீவிரமான வாசகரிடம் அந்த நூல் வந்து சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அது இன்னும் சென்று சேரும்.

 

 

 

 

Loading
Back To Top