சில வருடங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புத்தக நிலையத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு படிக்கட்டில் இறங்கி வந்தேன். ஒருவர் மேலே ஏறிவந்தார். அவருடைய பார்வையில் ஸ்நேகத்தன்மை இருந்தது. நான் புன்னகைத்து வழிவிட்டு ஒதுங்கினேன். குறுகலான படிக்கட்டில் அவரும் ஒதுங்கி நின்று என்னை கீழே இறங்கி வருமாறு வேண்டினார்.  இதுபோன்ற நாகரீக பண்டமாற்றுக்கள் நகரத்தில் அரிது. நான் கீழே இறங்கியதும் படிக்கட்டில் நின்றபடியே “நீங்கள் அகரமுதல்வன் தானே” வினவினார். ஓமென்று தலையசைத்தேன். “உங்களுடைய இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இவ்வளவு துயரங்களை எப்படி எழுதுகிறீர்கள்” என்று கலங்கி நின்றார். எனக்கு இதுபோன்ற தருணங்கள் நிறையவே வாய்க்கிறது. அது வெறுமென இலக்கிய அர்த்தம் கொண்ட கலக்கம் கிடையாது. அதனைக் கடந்த இனவுணர்வு கொள்ளும் ஆற்றாமையின்  சாட்சி. அவரைத் தேற்றவும் செய்தேன்.

என்னுடைய கதைகளில் வருகிற மிகத் துயரமான சம்பவங்களை துல்லியமாகச் சொல்லிக் கொண்டே இருந்தார். பிறகு அவருடன் ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமர்ந்திருந்து பேசினேன். இலக்கியம், அரசியலென பேச்சுக்கள் நீண்டன. அப்போதுதான் நான் ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் குறித்து அவரிடம் பேசினேன். சில ஓவியங்களை அவருக்கு காண்பித்தேன்.  ஏற்கனவே புகழேந்தியின் ஓவியங்களை தானும் இணையங்களில் பார்த்திருப்பதாகக் கூறினார். சில நிமிடங்கள் போனதும் “அவர் எப்போது ஈழத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு புலம்பெயர்ந்தார்”? என்று கேட்டார். யார் என்று கேட்டேன். ஓவியர் புகழேந்தியைக் கேட்கிறேன் என்றார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தானே, உங்களுக்கு அது தெரியாதா? என்றதும், அவருடைய ஓவியங்களைப் பார்த்து ஈழத்தமிழர் என்றல்லவா நினைத்தேன் என்றார். உண்மைதான், ஈழத்தமிழர்கள்  ஓவியர் புகழேந்தியை தம்மில் ஒருவராகவே  நினைக்கிறார்கள் என்று சொன்னேன். எங்களுக்குள் ஒருமித்த புன்னகை. நேசம் பரவக்கண்டேன்.

அவர் என்னிடம் சொன்னதோ, நான் அவரிடம் சொன்னதோ மிகையானதில்லை. ஓவியர் புகழேந்தியை ஈழம் அப்படித்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அவரும் ஈழத்தை அப்படித்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டுச் சூழலில் ஈழ விடுதலைப் போராட்டம்  என்பது கொந்தளிப்பான லட்சியத்தன்மைக்கும் ஒட்டுமொத்த தமிழர் இனத்து வீரநிலையின் வரலாற்றுக்கும் பூர்வ சாட்சியாக திரும்பிய ஒரு நிமிர்வான யுகமாக அமைந்தது. ஈழம் – அதனை வீரயுகமென பறைசாற்றியது.  இன்றைக்கு இணைய வெளியில் ஈழ விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாவனை  அறிவுஜீவிகள் சிலருக்கு இதெல்லாம் தெரியாது. ஈழ விடுதலைக்காக முதன்மைத் துணைநின்ற திராவிடர் கழகத்தினருக்கும்,  திராவிட இயக்கங்களின் பண்பாட்டுத் தன்மை அறிந்த  ஒவ்வொரு அமைப்பின்  சகோதரர்களுக்கும் நான் குறிப்பிடும் பந்தம் புரியும். இன்றைக்கும் அவர்களுக்கு ஈழமென்றால் லட்சியத்தன்மையின் இன்னொரு நாமம். இன்றைக்கும் பலருக்கு ஈழமென்றால் லட்சியத்தன்மையின் இன்னொரு நாமம்.

இந்தப் பின்புலத்திலிருந்து வந்த படைப்பாளிகள், அபிமானிகள் பல்லாயிரக்கணக்கானோர். அதிலொருவர் தான் ஓவியர் புகழேந்தி. அவர் ஏந்திய தூரிகை ஈழரின் வீரயுகத்தையும், அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளானதையும்  சாணுக்கு சாண் கோடுகளாக்கியது. ஓவியங்கள் வழியாக அவர் நிகழ்த்தியது கண்காட்சிகளை மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்குமான தொப்பூழ் கொடியை ஓவியர் புகழேந்தியின் ஓவியச் செயற்பாடு இன்னும் இன்னும் பிணைப்பாக்கியது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நான் சிறுவனாக இருந்த நாட்களில் ஈழமெங்கும் ஓவியர் புகழேந்தியின் கண்காட்சி நடந்தது. என்னுடைய உறவினர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்ததாகவும் நினைவு. சமாதான காலத்தின் சில கொடுப்பினைகளில் ஒன்று. ஈழத்தமிழர் விடுதலையை ஆராதிக்கும், ஆதரிக்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கலை முகமாக ஓவியர் புகழேந்தியை ஈழம் உள்வாங்கிக் கொண்டது. அந்த வகையில் புகழேந்தி கொடுத்து வைத்தவர். ஒரு விருந்தினராக வந்திருந்த புகழேந்தியை வீரயுகம் தங்களில் ஒருவனாகவே வழியனுப்பி வைத்தது.

புகழேந்தியின் ஈழம் குறித்த ஓவியங்கள் இயக்குனர் ராம் நடத்திய காட்சி என்கிற இணையத்தளத்தில் தொடர்ந்து வெளியானதாக அறிந்திருக்கிறேன். இன்றைக்கு ஈழ விடுதலை சார்ந்து தங்களின் அபிமானத்தை ஆற்றக் கூடியவர்களுக்கு காட்சி ஒரு திறவுகோலாக அமைந்திருக்கிறது. புகழேந்தியின் கோட்டோவியங்கள் அசாதரணமானவை. உயிரிழையும் ஆன்மாவோடு இருப்பவை. பிடுங்கப்பட்ட எனது நிலத்தில் பறிபோன வாழ்வை ஒரு தொன்மமாக காண்பிக்கிறார் புகழேந்தி. ஓவியங்கள் என்பது வண்ணங்களுக்கு உவந்தளிக்கப்பட்டவை அல்ல. கறுப்பு வெள்ளை ஓவியங்களில் புதையுண்ட வாழ்வின் வண்ணங்களை மீட்டெடுக்கும் குலக்கலைஞனாக ஓவியர் புகழேந்தி தமிழர் வரலாற்றில் தன்னிருப்பை உறுதி செய்கிறார்.

ஓவியர் புகழேந்தி அடிப்படையில் கல்விப்புலத்தைச் சார்ந்தவர். தன்னுடைய சிறிய வயதிலேயே ஓவியத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றவர். ஓவியம் குறித்து புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஈழத்துடனான தன்னுடைய உறவை பல தலைப்புக்களில் வெவ்வேறு அனுபவங்களின் ஆதாரத்தோடு முன் வைத்திருக்கிறார். தமிழீழம் குறித்த அவருடைய ஒவ்வொரு நூல்களும் ஆவணங்கள். தமிழர் விடுதலைப் போராட்டம் சார்ந்து முன்வைக்கப்படும் அவதூறுகளுக்கு ஏளனங்களுக்கு முறையாக பதில் அளிப்பவை. ஓவியர் புகழேந்தியை ஈழவிடுதலைக்கான ஓவியங்களை மட்டும் வரைபவராக குறுக்குவதிலோ , மட்டுப்படுத்துவதிலோ எனக்கு விருப்பம் இல்லை.

உலகில் எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தனது தூரிகையால் அதற்கு எதிராக கலையைத் தருவித்தவர். பெரியாரின் தொடர் ஓவியங்கள் இவரின் மகத்தான செயல்களில் ஒன்று.  குஜராத் பூகம்பத்தை முன்வைத்து வரைந்த நீள ஓவியம் ஒரு சாதனை. புகழேந்தியின் ஓவியங்களுக்கு கவிஞர் இன்குலாப், உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன், எழுத்தாளர் சூரியதீபன் ஆகியோர் எழுதிய கவிதைகள் சில ஞாபகத்தில் அதிர்கின்றன.

இவரின் அளப்பரிய கலைச்சேவையைப் பாராட்டி “ஓவியர் புகழேந்தி கலை – மானுடப் பணியில் நாற்பது ஆண்டுகள்” என்ற நிகழ்வொன்று நடைபெற இருக்கிறது அறிந்தேன். இதனை முன்னெடுத்தவர்களுக்கு நன்றி.     ஓவியர் புகழேந்தி கொண்டாடப்படவேண்டியவர். இனிவரும் நாட்களில் அவரை கலையுலகம் கொண்டாடும். ஏனெனில் ஓவியர் புகழேந்தி முன்னுதாரணமற்ற ஓவியப் படைப்பாளி. கலை கோரும்  அழகியல் கோட்பாட்டை விடவும் மானுட உத்தரிப்புக்கு எதிராக செயல் புரிவது அவசியமென எண்ணியவர். தூரிகையால் மாடமாளிகைகளை, நட்சத்திர விடுதிகளை அலங்கரித்து ஓவியம் படைக்கும் உலகியல் அழிவுக்குள் தனது கலையைத் திணிக்காதவர். அவர் தூரிகையும் வண்ணங்களும் மானுட விமுக்திக்காய் இயங்கின. உண்மையில் புகழேந்தியைப் பெற்றது தமிழ் சமூகத்தின் நல்லூழ். அவரினால் புகழ் ஏந்தட்டும் தமிழ் கலைவெளி.

 

 

 

 

 

Loading
Back To Top