
சனநெரிசல் மிகுந்த வீதியின் இரைச்சலுக்கு மத்தியில் ஒதுங்கி நின்றேன். அந்தி வெயிலில் கொஞ்சம் கடல் காற்று ஏறியிருந்ததது. எனக்கு எதிரேயிருந்த பழைய புத்தகக் கடையில் நின்றுகொண்டிருப்பவர் “உச்சவழு” புத்தகத்தை வாசித்தபடியிருந்தார். தொடர்ந்து அவரையே அவதானித்தேன். வாடிக்கையாளர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுத்து வியாபாரம் செய்துவிட்டு மீண்டும் உச்சவழுவை வாசிக்கிறார். கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு நகர இரைச்சலிலும் யாபாரம் பார்த்தபடி வாசிக்கும் இவரோடு சென்று பேசினால் தான் என்ன என்று தோன்றியது. அவருடைய நடைபாதைக் கடையில் விற்பனை செய்யப்படும் நூல்கள் எல்லாமும் பாடத்திட்டங்களுக்குரியவை. போட்டித் தேர்வுக்குரியவை. ஆனால் நான்கைந்து இலக்கியப் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. எல்லாமும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்கள். இவரை நான் எந்த இலக்கியக் கூட்டத்திலும் பார்த்ததில்லையே! இவருக்கும் இலக்கியக் கூட்டகளுக்கும் தான் தொடர்பில்லையே தவிர இலக்கியத்துக்கு நெருக்கம் இருக்கிறதென உணர்ந்தேன்.
இந்தப் புத்தகங்கள் என்ன விலையெனக் கேட்டேன். அய்யய்யோ, இவை எல்லாமும் நான் வாசிக்கும் புத்தகங்கள். என்னுடைய ஆசான் ஜெயமோகனுடையது என்றார். ஆசான், என்கிறாரே விஷ்ணுபுரம் அமைப்பில் பலரை எனக்குத் தெரியும். ஆனால் இவரை நான் கண்டிருக்கவிலையே என்கிற குழப்பம். அவர் என்னையே பார்த்துக் கொண்டு நின்றார். நீங்கள் ஜெயமோகனுடைய வேறு என்ன புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். புனைவுகள் எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன். வெண்முரசு உட்பட என்றார். என்ர தெய்வமே! இந்த பாக்யவான் யார்? இப்படியொரு வாசகனா! எனக்குள் பொறாமைச் சீற்றம். எச்சிலை விழுங்கிக் கொண்டு உங்களை எந்த இலக்கிய விழாவிலும் பார்ப்பதில்லையே என்றேன். வாசிக்கிறேன் வேறு எதுவும் தெரியாது என்று சுருக்கமாக முடித்தார். “சரி, நீங்கள் ஜெயமோகனைப் பார்த்து இருக்கிறீர்களா?” கேட்டேன். “இல்லை அந்தவொரு நாளுக்காக தவமிருக்கிறேன்” என்றார். சரி நான் ஜெயமோகனிடம் உங்களைப் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு புறப்படத் திரும்பினேன்.
செந்தில் உணர்ச்சிவசப்பட்டு என்னங்க சும்மா வந்தீங்க, பேசினீங்க, ஆசானிட்ட சொல்றேன்னுட்டு போறீங்க, யாருங்க நீங்க?” என்றார். எனக்கு எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியும். அவரைப் பார்க்கும் போது உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்றேன். என்னுடைய தொடர்பு இலக்கத்தை வாங்கிவைத்து விட்டு கண்டிப்பாக சொல்லுவீர்களா என்று கேட்டார். கண்டிப்பாக என்று உறுதியளித்து விட்டு வந்தேன்.
ஆனால் அன்றிரவு செந்தில் போன்றதொரு வாசகனைப் பலருக்கும் தெரியப்படுத்த வேண்டுமென எண்ணினேன். அவரை ஒரு நேர்காணல் செய்து வெளியுலகிற்கு மெய் வாசகர் யாரென அடையாளப்படுத்த வேண்டுமென எண்ணினேன். அடுத்த நாள் அவரை அழைத்து உங்களை ஒரு நேர்காணல் செய்ய விரும்புகிறேன் தருவீர்களா என்று கேட்டேன். முதலில் தயங்கினார். பிறகு அவரை ஊக்கமளித்து ஒப்புக்கொள்ளச் செய்தேன். அந்த நேர்காணல் “ஜெயமோகனுக்காக சங்கறுத்து குருதிப்பலி கொடுப்பேன்” என்ற முகப்பு அறிவிப்போடு வெளியானது. அவரை நேர்காணல் செய்த அன்றேன் ஜெயமோகன் அவர்களை அழைத்து செந்திலிடம் பேசுமாறு கோரிக்கை வைத்தேன். உடனேயே கொடுங்கள் என்றார்.
செந்தில் ஏற்கனவே பல ஆண்டுகள் பழகிய ஒரு மனிதரிடம் பேசுவதைப் போல ஜெ வீட்டிலுள்ள எல்லோரையும் சுகம் விசாரித்தார். உண்மையில் தரையில் கால் பதியாத பரவசமும் பக்தியும் கொண்டதொரு மனிதனின் உடல் அடையும் நடுக்கத்தை செந்தில்குமாரிடம் பார்த்தேன். ஆனந்தக் கண்ணீர் பெருகிய அவரது விழிகளில் ஆசானின் ஆசிர்வாதம் ஒளியாகத் திரண்டிருந்தது. செந்தில் என்னுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு நன்றி நன்றியென பலதடவைகள் சொல்லி கட்டியணைத்துக் கொண்டார். இந்த நேர்காணல் வெளியானதன் பிறகு குருதிப்பலி செந்தில் என்று அழைக்கப்பட்டு பிறகு வெண்முரசு செந்திலென பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஓரிரு இலக்கிய மேடைகளில் உரையாற்றவும் செய்தார்.
கடந்த இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டில் வெண்முரசு செந்தில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதில் மீள் வாசிப்பு செய்யப்படும் வெண்முரசு வரிசை நூல்கள். திகைக்க வைக்கிறார். வாசிப்பது என்றால் பக்கங்களை புரட்டித் தள்ளுவது அல்ல. ஆழமாக செறிவாக கண்டடைவுகளோடு நிதானமாகச் செல்கிறார். இவரைப் போன்ற வாசகர்கள் சமூக ஊடகங்களில் இருந்து, தற்போது வாசிப்பில் என்று புகைப்படம் மட்டும் பதிவேற்றம் செய்யாதவர்கள். செந்திலைப் போன்ற இன்னொரு வாசகனை இன்னும் நான் காணவில்லை.
இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டில் அவர் வாசித்த நூல்கள்
- குகை.
- ஈராறு கால் கொண்டு எழும் புரவி
- அந்த முகில் இந்த முகில்.
- சங்க சித்திரங்கள். (மீள் )
- அறம்.(மீள் )
- ஆயிரம் ஊற்றுகள்.
- ஜெயமோகன் சிறுகதைகள்.
- தெய்வங்கள் பேய்கள் தேவதைகள்.
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்.
- பொன்னிறப் பாதை
- மலர்துளி.
- துணைவன்
- கதாநாயகி
- முதுநாவல்.
- பேய் கதைகளும் தேவதை கதைகளும்.
- எழுகதிர்.
- பொழிவதும் கலைவதும்.
- ஆலம்.
- கன்னி நிலம்
- விசும்பு.
- கோபல்ல கிராமம்
- அல்கிஸா
- பயணக் கதைகள்.
- குள்ள சித்தன் கதைகள்
- ஆரோக்கிய நிகேதனம்.
- குற்றமும் தண்டனையும்
- அசடன்
- வெண்ணிற இரவுகள்.
- ஆராச்சார்
- யாத்வஷேம்.
- பத்து இரவுகளின் கனவுகள்
- சுழலும் சக்கரங்கள்
- கழிவறை இருக்கை
- பிஞ்சகன்
- கையளவு
- சூடியப்பூ சூடற்க (மீள் )
- பட்ட விரட்டி
- பேய்ச்சி.
- கடல்புறத்திலே
- சுதந்திரத்தின் நிறம்
- காலதானம்.
- சிவப்புக்கல்த்துடன் ஒரு பச்சை பறவை
- மீச்சிறுத்துளி
- விரிசல்
- கறப்பழி.
- பாராபாஸ்
- கடவுள் பிசாசு நிலம்
- பேட்டை
- கோசலை
- மானக்கேடு
- செம்மீன்
- அம்மன் நெசவு
- விலங்கு பண்ணை
- தீர்க்கதரிசி
- முதற்கனல்.(மீள் )
- மழைப்பாடல்.(மீள் )
- நீலம்.(மீள் )
- பிரயாகை.(மீள்)
- யதி- தத்துவத்தில் கனிதல்