01

விதை முட்டித் திறந்த 

மண்ணில் 

நிழல் விழுத்தி நிற்கிறது 

மரம்

கிளையினில் கூடுகட்டி 

இரையூட்டும் தாய்ப்பறவை 

கண்விழித்த குஞ்சுகளுக்கோ 

காற்றில் துடிக்கும் இலைகளே 

சிறகு.

 

02

திகைத்துத் திறந்த கணமொன்றில் 

எழுந்தருளிய தெய்வம் 

என்னிடம் சொன்னது 

நீயொரு சொல் 

நீயொரு ஊழி எச்சம் 

நீயொரு அழியாச் சுழி 

தொடர்ந்ததை 

இடைநிறுத்திச் சொன்னேன் 

எனக்கும் திகைப்புக்கு பிறகு திறக்கும் 

கணமொன்று உண்டு.

அன்று உன் முன் எழுந்தருளுவேன் 

தெய்வமே

அதுவரை நீயே தெய்வம்.

Loading
Back To Top