
நான் எங்கிருந்து
அழைக்கப்பட்டிருந்தேன்
இந்தச் சின்னஞ் சிறு பூமிக்கு
நான் எதுவரைக்கும்
இழுத்து வரப்பட்டேன்
இந்தக் கீழ்மை பாயும் வாழ்வுக்கு
இனியாவது
ஒரு மலரை இனிதாக்கும்
மகரந்த நரம்புகள்
என்னில் பெருகட்டும்
சிறிய கொடியைப் போல
அந்தரத்தில் பாவி
ஒளியை ஏந்துகிற
ஒவ்வொரு காலையிலும்
என் சித்தத்தை
தேனாக்குவேன்.
என் தேனைக்
காடாக்குவேன்.