அன்புள்ள முதல்வன்!

நீங்கள் பட்ட துயரங்கள் அளவற்றது. ஒரு தனிப்பேச்சில் நீண்ட நாட்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டீர்கள். கடுமையான மனக் கொந்தளிப்பும், இழப்பின் வெறுமையும் உங்களைச் சூழ்ந்திருக்குமென்று கருதுகிறேன். ஈழத்தில் நிகழ்ந்தவையே “மானாட மயிலாட” விளம்பர இடைவேளையில் பார்த்த நமக்கே தாங்க முடியாதிருந்தது. அந்தத் துயர் ஊழியைச் சந்தித்த நீங்கள் அதனை உங்களுடைய படைப்புக்களில் முன் வைக்கிறீர்கள். ஆனால் பரிதாபமோ, கண்ணீரை இழந்து ஆதரவு தேடும் குரலோ இல்லை. உங்களுடைய தனிப்பேச்சிலும் அத்துணை துல்லியமான இயல்பும், புன்னகையும் நகைச்சுவையும்  எப்படி இந்தக் கொந்தளிப்புக்களை கடந்து வந்தீர்கள்?

  • பிரவீன்

 

வணக்கம் பிரவீன்!

என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. ஆனால் நீங்கள் கேட்டிருக்கும் விதம் ஆழமும் செறிவும் கொண்டது. அதனாலேயே இந்த மடலினை வெளியிடுகிறேன்.

நான் துயரங்களால் விளைந்தவன். நடப்பு நூற்றாண்டின் மானுட இனப்படுகொலையின் குருதிச் சதுப்பிலிருந்து துளிர்த்தவன். இந்த எஞ்சுதல் அதிஷ்டவசத்தால் நிகழ்ந்தது என்று நம்பியதில்லை. ஊழின் தொடர்ச்சி என்னில் தங்கியிருப்பதால் இன்றும் உள்ளேன். சொல்லியழ எத்தனையோ காதைகள் உண்டு. ஆனாலும் நான் அழமாட்டேன். என்னுடைய சிறிய வயது முதலே இந்த அழுகைச் செயல் குறித்து கசப்பை உருவாக்கிக் கொண்டேன்.  கைவிரித்து அழுதும்  கைகூப்பித் தொழுதும் எம்மைக் காக்காது போன கண்ணீருக்கும் கடவுளுக்குமாய்ச் சேர்த்தும் நானே எழுதுகிறேன். என் எழுத்து தெய்வத்தையும் காக்கிறது என்பது மிகையான பிரகடனம் அல்ல, பதிக எழுத்தின் வழியாகவே தெய்வம் என்னிடம் வந்தடைந்தது.

இன்று என்னுடைய கதைகளை படிக்கிறவர்கள் பகிர்கிற கருத்துக்களைத் தொகுத்தால் “இவ்வளவு நம்பிக்கையாக எழுதுகிறீர்களே” என்னும் வியத்தலே பெரும்பான்மையாக உள்ளன.  அதிகமான துயரங்களைச் சந்தித்தவர்கள் இவ்வுலகிற்கு அளித்த மங்கலங்கள் ஏராளமுள்ளன. கலை இலக்கியத் தளத்தில் மாபெரும் முன்னோடிகளாக மிளிர்ந்திருக்கிறார்கள். அவர்களைத் தான் எப்போதும் நினைந்து கொள்வேன்.

சமணர்களால் திருநாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் அடைக்கப்பட்டப் போதும்  கல்லோடு கட்டி கடலில் எறியப்பட்ட போதும் அவர் தனது மொழிகொண்டு பாடினார். விக்டர் பிராங்கிளின் என்கிற யூதர் நாசி வதைமுகாமில் சந்தித்த கொடுமைகளை “வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல்” என்றெழுதி உலகத்தை உலுக்கினார். “ஆனி ப்ராங்” என்கிற சிறுமியின் நாட்குறிப்புக்கள் நெருப்புக்குள் உழன்று எழுதப்பட்டது. ஆஸ்விச் வதை முகாமின் கொடுமைகளை எழுதிய “பிரைமோ லெவி” யின் கதைகளை வாசித்து வாசித்து திகைப்பும் ஆச்சரியமும் கொண்டேன். மாண்டோவையும், மம்மூத் தர்விஷையும், கூகி வா தியாங்கோவையும், மால்கம் எக்சையும், அலெக்ஸ் ஹெலியையும், கஸ்தூரியையும், மலைமகளையும், அம்புலியையும், செல்வியையும், சிவரமணியையும் நான் நெஞ்சில் பூசிப்பது அவர்களின் எழுத்துக்களால் மட்டுமே. மாறாக எளிய துயரங்களால் வீழ்ந்து போனவர்கள் எவரையுமே நான் பொருட்படுத்தியதில்லை.

உத்தரிப்பாலும் அலைக்கழிப்புக்களாலும் புதைபடுமளவுக்கு சாதாரணன் கிடையாது எழுத்தாளன். அவனுக்குள் அதுதான் நெருப்பாக எழுகிறது. எப்போதும் அணைந்திடாத ஆக்கத்தை அளிக்கவல்ல அந்த நெருப்பைத் தான் அவனுள்ளம் வணங்குகிறது. யுகம் யுகமாய்க் கவிந்து இறுகிய இருள் மலைகளை அவனுள்ளத்தின் ஒளி கொண்டே நடந்தேறுவான். அகத்தில் ஒளியுண்டெனில்  திசையில் இருளில்லை. என்னுள் அப்படித்தான் ஒரு சோதி வளர்த்தேன். மீளமுடியாத துயரமென்று ஒன்றில்லை. ஏனெனில் மீள்ந்தவர்கள் இங்குள்ளனர்.

என்னுடைய கொந்தளிப்பும் இழப்பின் வெறுமையும் எப்போதும் என்னிடம் இருப்பவை. நான் மேற்கூறிய சோதிக்கு நான் வார்க்கும் நெய்யாக அது விளங்குகிறது. என்னுள்ளத்தின் துயர இருளை ஒருபோதும் பிறரிடம் அப்படியே கையளிக்கமாட்டேன். என்னுடைய படைப்புக்களில் துயரம் வெளிப்படுவதாக பலர் சொல்வர். உண்மையில் அது என்னுடைய துயரல்ல. இந்த நூற்றாண்டின் உள்ளத் துயர். பாலகன் பாலச்சந்திரன் மீது பாய்ந்த தோட்டக்களையும், சிரிய சிறுவன் அயலான் குர்தியின் கரையொதுங்கிய சடலத்தையும் வேடிக்கை பார்த்த ஒட்டுமொத்த மானுடத் திரளின் துயர்.

நான் கொந்தளிப்புக்களை கடந்து வந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அது மிகையான அவதானம். என்னுடைய கொந்தளிப்பு இந்த நூற்றாண்டு வரைக்கும் தொடரும். ஆனால் அது வெறுமென கண்மூடித்தனமான அரற்றலாகவோ, உணர்ச்சியாகவோ உருக்கொள்ளாது.  மேற்கூறிய பிரைமோ லெவி, மம்மூத் வரிசையில் ஒருதலைமுறை என்னை அடையாளப்படுத்தும் வகையில் கொந்தளிப்பை கைமாற்ற விரும்புகிறேன். என்னுடைய துயருக்கு  நானொரு அறம் வகுத்திருக்கிறேன். துயரின் கொந்தளிப்பை கலையாக்கி கையளிப்பதே அது.

என்னுடைய புன்னகையும் இயல்பும் நான் வகுத்த அறத்தினால் நேர்ந்தது. நான் அதிதனித்துவமான உள்ளத்தோடு இருக்கிறேன். இந்த உலகோடு புன்னகைக்குமளவு சிறு நன்மையேனும் எனக்குச் செய்திருக்கிறதா என்று யோசித்துப்பார்த்தால் எல்லா விதத்திலும் என்னை வஞ்சித்திருக்கிறது என்பதே மேலெழும் கசப்பு. ஆனால் உலகம் எனக்குத் தருவித்த கசப்போடு அதனைச் சந்திக்க விரும்பவில்லை. ஏனெனில் நான் அபத்த எதிர்வினைகளால் செயல் புரிபவன் கிடையாது.  எழுத்தாளன். தீயூழின் சாம்பலிலிருந்து நல்லூழ் சமைப்பவன். இந்தப் பிரகடனத்தை எவரும் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை.  இது என்னுடைய துயர அறத்தின் கொந்தளிப்பான கர்வம். இன்னும் புரியச் சொன்னால் என்னுடைய நற்றுணை.

 

அகரமுதல்வன்

Loading
Back To Top