அம்மாவுக்கு முட்டைக் கோப்பியடிப்பதில் நல்ல கைப்பக்குவம். படுக்கையை விட்டு எழுந்ததும்  முட்டைக் கோப்பியைத் தந்து ஒரே மிடக்கில் குடி என்பாள். முட்டை வெடுக்கு என்பதெல்லாம் மறைந்து வறுத்து திரித்த கோப்பியின் வாசனை அவ்வளவு சுதியாய் இருக்கும். நான் ஒரே மிடக்கில் குடித்து விடுவேன். தம்பிக்கு அருவருப்பு கொஞ்சம் இருந்தது.  வீட்டுக்கு வந்து தங்குகிற விருந்தினர்களுக்கும் முட்டைக் கோப்பி ஒரு அதிகாலைப் பிரசாதமாய் வழங்கப்படும். “இப்பிடியொரு முட்டைக் கோப்பிய வன்னியில எங்கையும் குடிக்கேலாது” என்று பலர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அம்மா முட்டைக் கோப்பி குடிப்பதில்லை. அதில் பெரிய விருப்பமில்லை. அவளுக்கு சாயத்தண்ணியும் பனங்கட்டியுமே சொர்க்கம். ஒரு கையில் பனங்கட்டியை வைத்துக் கடித்தபடி சாயத்தை உறிஞ்சி இழுப்பாள். அம்மா அதிகமாக சாயத்தண்ணி குடிப்பதாலேயே கறுப்பாக இருக்கிறாள் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்.

என்னுடைய அன்றாடத்தில் இருந்து முட்டைக் கோப்பி நின்று போனது. அம்மாவும் நானும் திசைக்கொன்றாக ஆக்கப்பட்ட நாட்களில் எல்லா வாசனையும் அழிந்திருந்தது. அம்மா என்பவள் எல்லாமுமானவள். காப்பரண். முட்டைக்கோப்பிக்கு பிறகு எந்தத் தேனீர் வகையையும் விரும்பியவன் கிடையாது. கண்டிப்பாக காலையில் ஏதேனும் ஒரு பானத்தை அருந்த வேண்டுமென்று எண்ணியதில்லை. யாழ்ப்பாணத்து பசும்பால் தனிச்சுவை. கிடைக்கும் போது அருந்தியிருக்கிறேன். அவ்வளவு தான். என்னுடைய சொந்தவூரில் சிலர் பனங்கள்ளில் வாய் கொப்பளித்து அதையே குடித்து நாளைத் தொடங்குவர். அதில் அவர்க்கு இன்ப வெறி கிட்டுமோ!

இன்றும் தான் எனக்கு தேனீர் வகைகள் கட்டாயமில்லை. ஒருநாள் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் தயாரித்து தந்த “சுலைமானி டீ”யை அருந்தினேன். அந்த உருசை பிடிபட்டது. ஏலக்காய், கராம்பு போட்டு ஒருவகை புத்துணர்ச்சி அருளிய பானமென்று கருதினேன். பிறகொரு நாள் அவரே ஆக்கித்தந்த தேனீரில் அதுவும் வாய்க்கவில்லை. நண்பர்களோடு பயணக்கும் போதும் பெரும்பாலும் தேனீர் குடிப்பதற்கு மறுத்துவிடுவேன். நித்திரையை விரட்டும் தேனீர் என்பதெல்லாம் ஒருவகை அசட்டுத்தனமான வதந்தி என்பேன். எனக்கு இரவில் தேனீர் குடித்தால் நன்றாக உறக்கம் சூழ்ந்துவிடும்.

இயக்குனர் ராம் அவர்களோடு இரவு வேளைகளில் அமர்ந்திருந்து உரையாடும் வாய்ப்புக்கள் இருந்தன. இப்போது அதுபோன்ற இனிய இரவுகள் மலர்வதில்லை. அவரின் இரவுகளுக்கு சாயத்தண்ணி (Black Tea) வாசனை. மணிக்கு மூன்று டம்ளர் விகிதம் விடியும் வரை தொடரும் மிடறுகள். ஆனாலும் அந்த இரவுகளில் நான் தேனீரைத் தவிர்ப்பதில்லை. ராமுடன் இலக்கியம் குறித்து உரையாடும் போது கிடைக்கும் தரிசனங்கள் அளவற்றவை. நான் அத்துணை விழிப்புடன் இருந்திருக்கிறேன். ராம் எனக்கொரு ஆசான்.  சில வேளைகளில் நானே தயாரித்து பரிமாறிய சாயத்தண்ணியையும் அந்த இரவுகள் அருந்தியுள்ளன. ராம் அம்மாவைப் போல சாயத்தண்ணி ப்ரியர்.

நானும் சில காலங்கள் சாயத்தண்ணியை விரும்பினேன். திரையுலகில் தேனீர் குடிப்பது ஒருவகையான சடங்கு. பிதிர்க்கடன் செய்வதைப் போல சிலர் தவறாமல் செய்து கொண்டே இருப்பர். “வாங்க நண்பா ஒரு டீ சாபிட்டிட்டே பேசலாம்” என்ற அழைப்பு திரையுலகின் மந்திரம். என்னுடைய திரையுலக அனுபவத்தில் நான் மெல்லிய புன்னகையோடு முடிந்தமட்டும் தவிர்க்கும் அழைப்புக்களில் இதுவுமொன்று. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அதிகத் தேனீராலும் சிகரெட்டாலும் வயிற்றை நிரப்பி உடலைக் கெடுத்துக் கொண்டார்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கதைகளில் வருகிற  “முட்டைக் கோப்பி” எப்படியிருக்குமென தமிழ்நாட்டு நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்பார்கள். ஈழ இலக்கியத்திலுள்ள உணவு வகைகளைப் பட்டியல் போட்டு வைத்திருக்கும் நண்பர்கள் சிலரை அறிவேன். மதுரையிலிருக்கும் எழுத்தாளர் இளங்கோவன் முத்தையாவுக்கு முட்டைக் கோப்பி என்பது என்னவென்பதில் ஒரு உலகியல் தவிப்பு இருந்தது. அவர் என்னுடைய சகோதரர்.  ஒருமுறை காலை உணவுக்காக வீட்டிற்கு வந்திருந்த போது, முட்டைக் கோப்பியை அம்மா தயாரித்துக் கொடுத்தாள்.  இலக்கியத்தின் வழியாக அறிந்த ஒரு உணவை உண்டு களித்து “அப்பாடா ஒரு மாதிரி முத்துலிங்கத்தோட முட்டைக் கோப்பியை குடிச்சாச்சு” என்றார். “இலக்கியம் சோறு போடுமா என்று கேட்பவர்களுக்கு முட்டைக் கோப்பியே போடுமென்று”  இளங்கோவிடம் பகிடியாகச் சொன்னேன்.

முட்டைக் கோப்பி தயாரிப்பது எப்படி என்பதற்கு இன்றைக்கு குறிப்புக்கள் ஆயிரம் உள்ளன. ஆனால் அது நுணுக்கமான வேலை. எல்லோராலும் முட்டையையும், கோப்பித் தூளையும் போட்டு அடிக்க முடியுமென சிலர் கருதலாம். உண்மை தான். ஆனால் அப்படி அடிப்பதால் முட்டையும் கோப்பியும் ஒன்றாகுமே தவிர அங்கு “முட்டைக் கோப்பி” என்கிற அற்புதம் பிறக்காது.

சில மாதங்களுக்கு முன்பு நாட்டு முட்டைகளை வாங்கி வந்தேன். அம்மாவிடம் முட்டைக் கோப்பி வேண்டுமென்று சொன்னேன். அவள் தொடர்ச்சியாக அடித்து தந்தாள். ஒரே மிடக்கில் குடி என்ற அவளது ஸ்வரம் நாளின் ஆசிர்வாதம். கொஞ்ச நாட்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. பிறகு நின்று போனது. நாட்டு முட்டைகளை நகரத்தில் நம்பி வாங்க இயலாது. எல்லாவற்றிலும் நகல்களும், போலிகளும் விளைந்து நிற்கின்ற சந்தை நகரம்.  நான் நாட்டு முட்டை வாங்கும் அம்மாவின் கடையை சில நாட்கள் காணவில்லை.  அம்மா அந்த முட்டைகளை சிறந்தது என்கிறாள். சரி அந்தக் கடை திறகட்டுமென காத்திருந்தேன்.

இன்று திரையுலகில் எனக்கு வாய்த்த ஒரு அற்புதமான நண்பரைச் சந்தித்தேன். “என்ன இவ்வளவு மெலிந்து போய்விட்டீர்கள் முதல்வன், முகமெல்லாம் ஒடுங்கிப் போய் இருக்கிறீர்கள்” என்று அதிர்ச்சியானார்.  இப்போது கடையுணவு எடுத்துக் கொள்வதில்லை அதனால் தான் என்றேன். நண்பர் நம்புவதாயில்லை. கொஞ்சம் உடம்பு போட்டுக் கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கு அழகு என்றார்.  அழகுக்கு என்னங்க தேவையென்று சட்டென முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். வீட்டிற்கு வந்தால் அம்மா சமையலறையில் நாட்டு முட்டைகள் அடுக்கப்பட்டிருகின்றன. அம்மாவிடம் விஷயத்தைக் கேட்டால் ” அந்தக் கடை திறந்து கிடந்தது. என்னைக் கூப்பிட்டு உங்க பையங்கிட்ட குடுங்கன்னு” சொல்லி முட்டைக் கடை அம்மா கொடுத்திருக்கிறாள்.

நாளைக்கு காலை இரண்டு அம்மாக்களால் ஆக்கப்பட்ட முட்டைக் கோப்பியை அருந்தப் போகிறேன். எத்தனை அழகானவன் நான். நண்பா! முட்டைக் கோப்பியால் ஆசிர்வாதம் கிட்டுவதெல்லாம் அழகுதான் என்பதை நீரறிவீரோ!

 

 

 

 

 

 

Loading
Back To Top