அன்புள்ள முதல்வனுக்கு!

உங்களை சில இலக்கிய விழாக்களில் பார்த்து பேசியிருக்கிறேன். உற்சாகமாக பழகுவீர்கள். அர்த்தமற்ற உரையாடல்களை நிகழ்த்துபவர்களிடமிருந்து விலகி நிற்பதையும் கவனித்திருக்கிறேன். உங்கள் உரைகள் எனக்குப் பிடித்தமானது. சில நேரங்களில் உரைகளைக் கேட்கும் போது, அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறேனோ என்று யோசிப்பேன். செயல்களின் வழியாக நிறைவடையும் உங்களைப் பார்த்து பொறாமை கொண்டிருக்கிறேன். நான் பணிபுரியும் ஐ.டி துறை குறித்து உங்களைப் போலானவர்களுக்கு இருக்கிற பார்வையை அறிந்துமிருக்கிறேன். ஆனாலும் உங்களிடம் கேட்கவேண்டுமென்று தோன்றிய கேள்வி இது, எழுத்தாளனாக நீங்கள் அடையும் மகிழ்ச்சி தான் என்ன?

  • பாலகுரு

 

வணக்கம் பாலகுரு,

“அர்த்தமான வாழ்வு” என்பதே ஒரு லட்சியக் கனவு. அதனை நோக்கியே நாம் செயல்கள் புரியவேண்டும். இலக்கிய விழாக்களில் கலந்து கொள்பவராக உங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மடலின் இறுதியில் நீங்கள்  கேட்ட கேள்வி இந்த அறிமுகத்தின் மூலமே அர்த்தம் பெறுகிறது. இலக்கிய சகவாசம் எதுவுமில்லாத ஒருவர்  இந்தக் கேள்வியைக் கேட்டால் பதில் அளிப்பது என்னுடைய பொறுப்பல்ல. ஏனெனில் அர்த்தமற்ற எவையோடும் சகவாசம் கொள்ளும் பழக்கமில்லை எனக்கு.

மகத்தானவைகள் என நாம் போற்றுபவை யாவும் அர்த்தங்களால் வழிநடத்தப்பட்டவை. வரலாறு எங்கும் பெருஞ்செயல்களின் வழியாக அமைக்கப்பட்ட பாதைகளிலேயே என் பாதங்களை வைக்க விரும்புகிறேன். இது வெறுமென மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. எல்லாவிதமான கொந்தளிப்புக்களோடும் அமர்ந்திருந்து எழுதும் என்னுடைய பெருவிருப்பமும் நெறியும். செயல்களால் மட்டுமே வாழ்வின் மகிழ்வை பெருக்க நினைக்கும் அறத்தை விரதமெனக் கொண்டிருக்கிறேன்.

செயல்களின் வழியாக நிறைவடைந்தேன் என்கிற எண்ணம் கிளைக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமானது. எழுத்தாளனாக அர்த்தங்களால் ஆன வாழ்வை  உருவாக்கும் நான், ஒரு லெளகீகனாக அர்த்தமற்ற பணிகளில் அழுந்தப்படுவதுமுண்டு. உப்புச் சப்பற்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதெல்லாம் எழுத்தாளனின் அர்த்தபூர்வமான செயல்களில் வராது அல்லவா. ஆனாலும் இவ்வகை சலிப்புக்களின் புதை சேற்றிலிருந்து எழுத்தாளன் தாமரையாக மலர்ந்து கொண்டேயிருப்பான்.

அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ என்று யோசிக்கும் உங்களுக்கு சொல்வதற்கு ஒன்றுண்டு. இதுபோன்று அர்த்தமற்று எண்ணாதீர்கள். ஏனெனில் நமக்கு புறத்திலிருந்து ஏகப்பட்ட நிபந்தனைகள் உள்ளன. நான்கு பேர் என்ன நினைப்பார்கள் என்று மிரட்டும் சமூக வாழ்வு அவசியமாகிறது. இந்த நிபந்தனைகளை உடைத்தெறிந்து விட்டு வாழ்வதெல்லாம் பாழ்கிணற்றில் முகம் பார்க்கும் வேலை. வாழ்வை அர்த்தம் ஆக்குகிறேன் எனச்சொல்லி வீதிக்கு வந்து வீணாய்ப்போனவர்களை எல்லாத்துறைகளிலும் காணலாம். இலக்கியத்தில் உதாரணங்கள் ஏராளமுள்ளன.  நீங்கள் ஐ.டி துறையில் பணியாற்றுகிறீர்கள். அங்கிருந்து இலக்கிய விழாக்களில் பங்கெடுப்பதுவே ஒரு அர்த்தபூர்வமான முயற்சி என்றே கருதுகிறேன். மேற்கொண்டு நீங்கள் குற்றவுணர்ச்சி அடையும்படியாக இங்கு எதுவுமில்லை.

எழுத்தாளனாக அடையும் மகிழ்ச்சி பலதுண்டு. அடிப்படையில் என்னுடைய வாழ்வின்  உளக்கொந்தளிப்புக்கள், புலம்பெயர் அலைந்துழல்வுகள் என நீண்டு செல்லும் நெருக்கடிகள் யாவற்றிலுமிருந்து ஆசுவாசம் கொள்வது எழுத்தாளனாகவே. மகிழ்ச்சியென்பது நம்மிடம் வந்தமையும் அமைதி. அது பலரால் வழங்கப்பட்ட ஆசியால் அருளப்படுவது. எழுத்தாளனாக மகிழ்ச்சியடையும் ஒவ்வொரு நாளையும் இவ்வுலகம் எனக்குத் தந்தருளுகிறது.

 

 

 

 

Loading
Back To Top