முன்னொரு காலத்தில் இயக்கத்தினால் தேடப்பட்டுவந்த பூனைச்சுமதியை வளசரவாக்கத்தில் வைத்துக் கண்டான் திருச்செல்வம். கறுப்புநிற அக்டிவா பைக்கில் இரண்டு சின்னப்பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு போகும் பூனைச்சுமதியின் உடல் மெலிந்து போய்விட்டதை எண்ணி திருச்செல்வம் சிகரெட் பிடித்தார். எப்படியாவது அவளின் வீட்டைக் கண்டுபிடித்து பழக்கமாகிவிடவேண்டும் என்ற உத்வேகம் திருச்செல்வத்திற்குள் கொப்பளித்தது. ஆயுதங்கள் மவுனிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த போராளிகளுள் திருச்செல்வமும் ஒருவர். இரண்டுவருடங்களில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை கருதி தமிழகத்திற்கு விமானம் மூலம் வந்திறங்கிய திருச்செல்வம் இத்தனை வருடங்களாக வளசரவாக்கத்தில் வசித்துவருகிறார்.

யார் யாரிடமோ கையேந்தி குடிக்கவும் வீடு தூங்கி சாப்பிடவும் தன்னை பழக்கிக்கொண்டிருந்தார். நாட்டிற்கு போகவேண்டும் அங்கு போனால் திருந்திவிடுவேன் என்று ஒப்புதல் அளிப்பார். இப்படியானதொரு நிலையில் பூனைச்சுமதியின் தரிசனத்தை கடவுள் ஏன் தந்தருளினார் என திருச்செல்வமே கேட்டுக்கொண்டார். பூனைச்சுமதியின் வாளிப்புகள் நிறைந்த சரீரத்தை நினைவுகளின் பக்கங்களில் தட்டிப்பார்த்தார். ஒவ்வொரு நுரைப்பிலும் வடிவின் போதை நிறைந்தது. இப்படியொரு அழகியை துரோகியென்று சுட்டுத்தள்ள எண்ணியது மடத்தனமென்று நினைத்தபடிக்கு நடக்கலானார். பூனைச்சுமதியின் வீடு வளசரவாக்கத்தில் எங்கிருந்தாலும் தன்னால் கண்டுபிடிக்க இயலுமென தனக்குத் தானே நம்பிக்கையூட்டினார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பூனைச்சுமதி இராணுவத்தின் ஆதரவாளர். இயக்க ஆதரவாளர்கள் பலரை இராணுவத்திற்கு காட்டிக்கொடுத்த குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டு தேசத்துரோகிக்கான தண்டனையை வழங்க புலிகள் இயக்கம் முடிவெடுத்திருந்தது. அந்நாட்களில் இராணுவத்தின் அனுசரணையோடு கொழும்புக்குச் சென்ற பூனைச்சுமதி சில வருடங்களில் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தாள். இயக்கம் அழிவைச்சந்தித்த இறுதி நாட்களில் தமிழகமே கொந்தளித்துக்கொண்டிருந்தது. பூனைச்சுமதி ஒரு பெட்டி மத்தாப்புக்களை வாங்கிவந்து வீட்டின் நடுவில் கொழுத்தி கொண்டாடினாள். இப்படியாகப்பட்ட பூனைச்சுமதியை சுட்டுத்தள்ள எண்ணியது மடத்தனம் என்று யோசிக்குமளவு திருச்செல்வம் மடையன் ஆகியிருக்கிறான் என நண்பர்கள் சிலர் கவலைப்பட்டனர். குட்டி யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் வளசரவாக்கம் பகுதியிலிருக்கும் ஈழத்தவர் எல்லோருக்கும் பூனைச்சுமதியை தெரியாது. ஆனால் இந்தப்பெயரை அறிந்த சிலர் இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் இயக்கத்தில் பொறுப்பாளர் தரத்தில் இருந்தவர்கள்.

அடுத்தநாள் காலையில் கொஞ்சம் வெள்ளனவே எழும்பிய திருச்செல்வம் நான்கு பக்கமாக பிரியும் வீதியின் நடுவில் நின்று எந்தப்பக்கம் இறங்கலாம் என்று யோசித்தார். வலதுகைப்பக்க வீதியால் நடந்து செல்ல முடிவுசெய்தார். வீட்டின் முன்வாசலில் கோலமிட்டபடியிருந்த பல குடும்பப்பெண்களை உற்றுக்கவனித்துக்கொண்டு மிகவேகமாக நடந்துபோனார். பூனைச்சுமதி கோலம் போடும் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பாளா? ஒவ்வொரு வீட்டிலும் கீழ் வீட்டில் உள்ளவர்களே கோலம் போடுகிறார்கள் ஆகவே அவள் மேல் வீடொன்றில் வசித்தால் எப்படிக் கண்டுபிடிக்க இயலும்? இதுபோன்ற கேள்விகள் திருச்செல்வத்தை உந்தித்தள்ளத் தள்ள நடந்து களைத்தார்.

ஒரு பணக்கார குடும்பஸ்தன் தன்னிலும் பார்க்க நிறைகூடிய நாயொன்றை சங்கிலியால் பிடித்தபடி மேய்த்துக் கொண்டிருந்தான். அந்த நாயின் அகலமும் நீளமுமான வாயில் இருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. தெருவில் நிற்கும் நாய்கள் அதனைச் சுற்றிவளைத்து குரைத்துக்கொண்டிருந்தன. இன்னொரு பெண்மணி தன்னுடைய உடலைக் குறைக்க நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறாள் போலும். அவளின் பிருஷ்ட அசைவு தாராளமானதாய் இருந்தது. நடையில் வேகம் குறைந்து காலைப்பொழுதின் காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார் திருச்செல்வம். வீதிக்கு அந்தப்பக்கத்திலிருக்கும் சேரியில் இருந்து கூலி வேலைக்குச் செல்லும் சனங்கள் ஓரிடத்தில் குமிந்து நின்றனர். வாய் சிவக்க வெற்றிலையை போட்டு சப்பிக்கொண்டிருந்தனர். ஒரு குடிகாரன் தொப்பென விழுந்து மூக்குடைந்து அப்படியே தூங்கிக்கொண்டிருக்கிறான். மீன்கார அக்கா கூடையைச் சுமந்து கொண்டு வீதியில் ஏறுகிறாள். இப்படியாய் எத்தனையோ பேரைக் கண்டாலும் திருச்செல்வத்தால் பூனைச்சுமதியை காணமுடியவில்லை.

காலமை சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு சென்றான். தன்னுடைய கையிலிருந்த ஐம்பது ரூபாவை மீண்டும் எண்ணிப்பார்த்து பொக்கெற்றுக்குள் வைத்தான். சாப்பிட்டு முடித்து உணவகத்திற்கு வெளியே நின்று வீதியைப் பார்த்து நின்றான். கடுங்கோடையின் வெக்கை மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தது. அறையை நோக்கி நடக்க எத்தனிக்கையில் பூனைச்  சுமதி அதே அக்டிவாவில் மிக வேகமாக போய்க்கொண்டிருந்தாள். திருச்செல்வம் கைதட்டி பேர் சொல்லி அழைத்தும் அது பலனளிக்கவில்லை. இதனைப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு யாழ்ப்பாணி “அண்ணை உங்களுக்கு இதில போன ஆளைத் தெரியுமோ” என்று கேட்டதும் விழிப்படைந்து “ஓமோம் இவா புதுக்குடியிருப்பு குணம் வாத்தியாற்ற மூத்த மகள்தானே” கேட்டார் திருச்செல்வம். யாழ்ப்பாணிக்கு கோபம் தலைக்குள் எரிந்தது. என்னைப் பார்த்தால் விசரன் போல இருக்கோ உங்களுக்கு என்று பதிலுக்கு கேட்டதும், திருச்செல்வம் கொஞ்சம் கலக்கமுற்றார். மேற்கொண்டு அது தெரியாமலிருக்க “என்ன நீங்கள் இப்பிடி கதைக்கிறியள், எனக்கு குணம் வாத்தியாற்ற மூத்த மகளைப் போல இருந்தது, அது தான் கூப்பிட்டனான்”என்று சமாளித்தார். யாழ்ப்பாணியோடு தொடர்ந்து கதையாமல் விரைந்து நடந்து தனது அறைக்குள் நுழைந்தார்.

என்ன பூனைச் சுமதியோட புகலிடத்தை புலி கண்டுபிடிச்சதோ என்று அறையிலிருந்த ஜீவகாந்தன் நக்கலாக கேட்டதை திருச்செல்வம் பொருட்படுத்தவில்லை. தன்னை விசாரித்த யாழ்ப்பாணி யாராக இருக்கக்கூடுமென யோசித்துக்கொண்டிருந்தார். சிலவேளையில் இப்போது இயக்கமாக நினைத்துக்கொண்டு இருக்கும் சிலர்களில் ஒருவராக இருக்குமோ?அப்படியெனில் தன்னைப்பற்றிய அறிக்கையை அவர்களின் தலைமைக்கு கொடுத்து மரணதண்டனையை வழங்கிவிடக்கூடுமென திருச்செல்வம் பயந்தார். அன்றைக்கு முழுக்கவே வெளியில் செல்லாமல் அறைக்குள் ஒடுங்கிப்போயிருந்தார். “அப்படியெல்லாம் ஒரு புதிய இயக்கமும் கிடையாது தலைமையும் இல்லை நீ சும்மா பயந்து செத்துப்போயிடாத, எழும்பி வா சாப்பிட” என்று ஜீவகாந்தன் அழைத்தார்.

இரவுச்சாப்பாடு பெரும்பாலும் கொத்துரொட்டி. வளசரவாக்கம் ஸ்ரீதேவிக்குப்பம் சந்தியில் உள்ள ஈழஉணவகத்தில் இருவரும் போய்ச்சாப்பிட்டனர். இந்தக் கடையில்தான் தியாகிகளும் –துரோகிகளும் அகதிகளாக சந்திக்கும் வரலாற்று நிகழ்வுகள் நடந்தபடியிருக்கும். ஜீவகாந்தன் முக்கியமான பொறுப்பில் இருந்தவர். யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆதரவு சக்திகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை செய்தவர். அவரின் கடுமையான தாக்குதல் திட்டங்களுக்குள் தப்பிப்பிழைத்து இந்தியாவிற்கு வந்தவர்களில் இருவரை இதே கடையில் வைத்து நேருக்குநேராக சந்தித்து இருக்கிறார். அதில் ஒரு நாற்பது வயதானவன் என்ன பொறுப்பாளர் துரோகிகளை சுடத்தொடங்கி எதிரிகளிட்ட தோத்துப்போய்ட்டியளே என்று கேட்டான். அங்கிருந்தவர்களுக்கு மத்தியில் ஜீவகாந்தன் எதுவும் கதையாமல் ஒரு புன்னகையை உதிர்த்து கொத்துரொட்டி சாப்பிடுவதை தொடர்ந்தார்.

பூனைச்சுமதிக்கு ஒரே யோசனையாக இருந்தது. இத்தனையாண்டுகளில் தன்னை யாரும் இந்தப்பேரைச் சொல்லி அழைத்ததே இல்லை. பெரும்பாலும் தன்னை அடையாளம் கூட கண்டுபிடிப்பதில்லை. ஆனால் இன்றைக்கு இப்படி கைதட்டி பேர் சொல்லி அழைத்தது யார் என்ற பதற்றம் அவளுக்குமிருந்தது. எப்போது வேண்டுமானாலும் தான் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் இத்தனையாண்டுகளாக வாழ்ந்துவரும் பூனைச்சுமதிக்கு இன்று வேறு பெயர். வேறு ஊர். வேறு வாழ்க்கை.

“மேனகா அல்பிரட். ஊர் கேரளம் அங்கின ஒரு சிற்றூர்.என்ர வீட்டுக்காரர் வெளிநாட்டில உள்ள கொம்பனியில வேலை செய்கிறார்.நானும் என்னோட இரண்டு பிள்ளைகளும் மட்டும் தான்.ரூலெட் போட்டிருந்திச்சு அதுதான் விளிச்சேன்”.

மாசம் எட்டாயிரம் ரூபாய். அட்வான்ஸ் அறுபதாயிரம். நாளைக்கு காலையில   நான் சென்னைக்கு வந்திடுவேன். நீங்க அதே அட்ரசுக்கு வந்திடுங்க முடிச்சிடலாம்.

ஆ..சரி.நன்றி

பூனைச்சுமதி இப்போது வசித்துவரும் ஸ்ரீலக்ஸ்மி நகர் வீட்டை வாடகைக்கு கேட்கும் போது இப்படித்தான் போனில் பறைந்தாள். தன்னையொரு மலையாளப் பெண்ணாக காண்பித்து அவள் வாழ்ந்துவருகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் அதே வீட்டிலேயே இருக்கிறாள். மாதத்தின் மூன்றாம் திகதியே வாடகைப்பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வங்கியில் செலுத்திவிடுவாள். ஒரு பிரச்னையும் நேர்ந்ததில்லை. சுற்றத்தில் இருக்கும் சில குடும்பங்களோடு மட்டும் ஒரு மெல்லிய உறவைப் பேணிவந்தாள். தனக்கு தெரிந்த ஈழத்தமிழில் மலையாள ஒலியை அதிகப்படுத்தி சிலரோடு உரையாடுவாள். இந்த ஒலியையும் சந்தத்தையும் பயின்று கொள்ள அவள் எடுத்த பிரயத்தனங்கள் ஏராளம். நிறைய மலையாளப்படங்களை பார்த்துப் பார்த்து கொஞ்ச மலையாள சொற்களையும் அறிந்திருந்தாள். ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அவளே மறந்து போன பூனைச்சுமதியை அவளுக்கு ஞாபகப்படுத்தியது யார்? என்று இரவிரவாக யோசித்துக் கொண்டே இருந்தாள். துருப்பிடித்த அச்சத்தின் பதைபதைப்பு அவளை நடுங்கச்செய்தது. தன்னை வேட்டையாடும் அந்தக்குரலை அவள் ஒரு கனவைப் போல எண்ண முயன்றாள். கொஞ்சம் கொஞ்சமாக மேனகா அல்பிரட் பூனைச்சுமதியாக தன்னை உணரத்தொடங்கிய இந்த இரவின் உருவத்தில் குருதித் தடங்கள் அலையலையாய் எழுந்தன.

திருச்செல்வம் அதே கடையில் அடுத்தநாளும் காத்திருந்தார். எதிரே அதே யாழ்ப்பாணியும் நின்றுகொண்டிருந்தான். அங்கிருந்து விலக எண்ணி கொஞ்சம் தள்ளிப்போய் நின்றார். ஆனால் நேரமாகியும் பூனைச்சுமதி அந்த வீதியால் வரவில்லை. யாழ்ப்பாணி அருகில் வந்து என்ன இண்டைக்கு உங்கட குணம் வாத்தியாற்ற மூத்த மகளைக் காணவில்லையோ என்று கேட்டான்.

நீ ஆர் தம்பி? உமக்கு என்ன வேணும்? நான் ஆரைப்பார்த்துக்கொண்டு நிண்டாலும் உமக்கு என்ன? என்று திருச்செல்வம் பொங்கிக் கதைத்தார். யாழ்ப்பாணி சூழலை விளங்கிக் கொண்டு அங்கிருந்து மறைந்து போனான். வெயில் அடிக்கத் தொடங்கியும் அப்படியே நின்றார். வீதியில் அனல் எழுந்தது. முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு அக்டிவா பைக்கில் கடை நோக்கி வந்து கொண்டிருந்தாள் பூனைச்சுமதி. திருச்செல்வம் பைக்கை கைபோட்டு மறித்தார். ஆனால் பூனைச்சுமதி பைக்கை நிறுத்தவில்லை. இவளின் ஞாபகக்குகையின் புகைமூட்டங்களுக்கு மத்தியில் ஒரு புலியைப்போல துலங்கி வந்தது திருச்செல்வத்தின் முகம். இந்தச் சம்பவத்திற்கு பிறகும் திருச்செல்வம் பூனைச்சுமதியின் வீட்டைத் தேடிக்கொண்டே இருந்தார். பூனைச்சுமதி கடைக்கு சென்று வீடு திரும்புவதற்குள் ஏகப்பட்ட பதற்றங்களைச் சந்தித்திருந்தாள். தன்னைச் சுட்டுக்கொல்லவேனும் இயக்கமொன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்குமென பயந்து போனாள். இரண்டு பிள்ளைகளையும் பள்ளிக்கூடம் கூட விடாமல் வீட்டிற்குள் வைத்தே பூட்டிவைத்திருந்தாள். திருச்செல்வம் இரண்டு மூன்று நாட்கள் அந்தக் கடையில் காத்திருப்பதை தவிர்த்திருந்தார். மர்மமான யாழ்ப்பாணி பற்றிய பயம்  இவரை உலுக்குவித்தது. திருச்செல்வம் பற்றிய பயம் இவளை உறைவித்தது. இப்படியாக ஒருவரையொருவர் கண்டும் காணாமலும் அச்சுறுத்தலானார்கள்.

வெப்ப சலன மழை பெய்ய ஆரம்பித்தது. ஐந்து நாட்களுக்கு மேலாக வீட்டிற்குள் முடங்கிப்போயிருந்த பூனைச்சுமதி கதவைத் திறந்து வெளியே வந்தாள். உள்ளே பிள்ளைகள் இருவரும் தொலைக்காட்சியில் காட்டூர்ன் பார்த்தபடியிருந்தனர். மழையின் துளிகள் பூமியிலிருக்கும் வெப்பத்தை காற்றில் கலந்தன. அதன் வாசம் வெளியெங்கும் அடர்ந்து நின்றது. வீட்டைக் கண்டுபிடித்து விடலாமெனும் நப்பாசையில் குடையுமில்லாமல் மழையில் நடந்து போனார். கொஞ்சம் தூரமாகவே திருச்செல்வத்தைக் கண்ட பூனைச்சுமதி வீட்டின் வெளியே வந்து மழையில் நனைந்தபடி எதுவந்தாலும் எதிர்கொள்ள காத்திருந்தாள்.

திருச்செல்வம் அவளைக் கண்டுவிட்டார். வேகமாக நடக்க ஆரம்பித்தார். அவள் அழையாமலே வீட்டின் வாசற்படிக்கட்டில் போய் அமர்ந்திருந்தார். மழையின் துளிகள் சாய்ந்து பெய்தன. காற்றின் அற்புதமான கணத்தின் மொட்டவிழ்ந்து குளிர் வழிந்தது. பூனைச்சுமதி மழையில் நனைந்தவாறே படிக்கட்டில் அமர்ந்திருக்கும் திருச்செல்வத்தைப் பார்த்துக் கேட்டாள்.

“நீ ஏன் என்னைத் திரத்திக் கொண்டு திரியிறாய்? உனக்கு என்ன வேணும், என்ர உயிரா” 

“உன்ர உயிர் எனக்கு என்னத்துக்கு சுமதி. எனக்கு ஒண்டும் வேண்டாம். உன்னை அண்டைக்கு கண்ட நாளில இருந்து கதைக்கவேணும் போல இருந்தது.அதுதான் வந்தனான்”.

“எடுத்ததும் மண்டையில போட்டுவிட நிப்பியள். இப்ப என்னத்தை கதைக்க போறியள். கதையுங்கோ” – என்றாள் பூனைச்சுமதி.  

“சுமதி இஞ்சபார் உன்னைச் சுடவேணுமெண்டு இயக்கம் தேடினது உண்மை தான். ஆனால் இன்றைக்கு அதொண்டும் இல்லை எல்லாமே அழிஞ்சு போச்சு. இயக்கம் உன்னைச் சுடுமென்று நீ எப்பிடி நம்பினியோ அதுபோல நீ சுடப்படவேண்டிய ஆள் தான் என்று நம்பின ஆளில நானுமொருத்தன். நீ நிறையப்பேரை காட்டிக்குடுத்தனி. அதை நாங்கள் மறந்தாலும் நீ மறக்கமாட்டாய்.இப்ப நான் அதை கதைக்க விரும்பேல்ல” என்றான்.

“உள்ள வாங்கோ”-திடீரென பூனைச்சுமதி இப்படிச் சொன்னதை அவனால் நம்பமுடியாமல் இருந்தது. அவளின் நனைந்து போன சரீரத்தின் மீது இவனின் கண்கள் வண்ணத்துப் பூச்சியைப் போல நின்று சிறகடித்தது. தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பிள்ளையளுக்கும் திருச்செல்வத்தை அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் கார்ட்டூனில் கண்களை வைத்துக் கொண்டு “ஹாய் அங்கிள்” என்றனர். தன்னுடைய அறைக்குள் திருச்செல்வத்தை வைத்துக்கொண்டு கதவிற்கு தாழ்ப்பாளை போட்டாள். வெளியே மழையின் அழகை இயற்கை எழுதியபடியிருந்தது. தலையைத்துவட்ட அவசியமின்றி உடலின் சூடு ஈரத்தைப் போக்கியிருந்தது. பூனைச்சுமதி அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து புதிதாக உடுப்பை அணிய எத்தனித்தாள்.

ஒரு பெண்ணின் உடலிலிருந்து வெளிக்கிளம்பும் வாசம், காமத்தின் பீடத்தில் விளக்கேற்றும் மாயச்செயல்களை செய்துவிடுகிறது. அந்த அறையில் செங்கழுநீர் மலர்கள் இதழ்களை விரித்து மலர்கிறது. துயில் எழும் உடல்களின் ஊற்றில் அனைத்து அச்சமும் கரைகிறது. திருச்செல்வமும் பூனைச்சுமதியும் இறுக அணைத்தபடி நின்றனர். புதிய வேதமொன்றை பிரசவிக்க எண்ணும் அவதாரம் போல முயங்கிச் சரிந்தனர். வானத்தில் வளைந்து பெருத்த வானவில் அப்போது தோன்றியிருந்தது. மின்னலின் வெளிச்சம் கட்டில் வரையும் மின்னிப் பரவின. உடைப்பெடுக்கும் ஆற்றின் வல்லபம் போல இயங்கி முடித்திருந்த திருச்செல்வம் பூனைச்சுமதியை நெற்றியில் முத்தமிட்டு எழும்பினான். பொய்கையில் நீராடிய களிப்பு இருவரின் முகத்திலும் பந்தல் போட்டுநின்றது. அன்றைக்கிரவு குழல் புட்டும் மீன்குழம்பும் சாப்பிட்டு முடித்துவிட்டு அல்பிரட் மேனகாவின் வீட்டிலிருந்து வெளியேறிய திருச்செல்வத்தை இருட்டில் நின்றுகொண்டிருந்த மர்மமான யாழ்ப்பாணி பின்தொடர்ந்து நடக்கலானான்.

ஜீவகாந்தனுக்கு தொடர்புகொண்டு தன்னை யாழ்ப்பாணி பின்தொடர்வதை தெரிவித்தும் அதில் எந்த மாற்றமும் நிகழவில்லை. திருச்செல்வம் அறைவரைக்கும் எதுவும் கதையாமல் நடந்துவந்த யாழ்ப்பாணி ”துரோகியோட படுத்து எழும்பினாலும் தேசத்துரோகம் தான் மிஸ்டர் திருச்செல்வம்” என்றான். திக்கென்று வேர்க்கத்தொடங்கி இதயம் படபடத்து துடித்தது. திருச்செல்வம் அப்படியே உறைந்து நின்று திரும்பிப்பார்க்கையில் யாழ்ப்பாணி மறைந்து போயிருந்தான். நடந்தவை அனைத்தையும் ஒன்றுகூட மறைக்காமல் திருச்செல்வன் சொல்லிமுடித்தான்.

“மச்சான் நான் சொல்லுறன் என்று கோவிக்காதே, நீ அவளில மையல் கொண்டு இண்டைக்குப் போய் படுத்திட்டாய். இது தொடர்ந்துது என்றால் உனக்குக் கூடாது. கண்டிப்பாய் ஏதாவது பிரச்சினை உனக்கு வரலாம்.கவனமாயிரு” என்று ஜீவகாந்தன் எச்சரித்தார்.

மொட்டை மாடியில் நின்று கொண்டு வானத்தைப் பார்த்தார் திருச்செல்வம். நட்சத்திரங்கள் சில பூத்திருந்தன. மழை பெய்து ஓய்ந்த பின்னர் குளிர்ந்து கிடக்கும் பூமியின் தளிர்கள் காற்றில் அசைந்தன. இன்றைக்கு பூனைச்சுமதி அவனிடம் சொன்ன துயர்மிகுந்த சம்பவங்களை எண்ணி எண்ணி கலங்கினான். திக்குத் தெரியாத ஒரு பெண்ணின் கண்ணீரையும் அந்த நேரத்து நியாயங்களையும் இப்போதுவரை அவனாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் அவள் அதற்காக வருந்துகிறாள். மன்னிப்புக்கோருகிறாள். இராணுவத்தோடு சேர்ந்து இயங்கியதை ஒப்புக்கொள்கிறாள். இந்த இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கவே உயிரை பிடித்துவைத்திருப்பதாக அவள் கண்ணீர் சிந்தினாள். திருச்செல்வம் எத்தனையோ ஆறுதலையும் சமன்படுத்தல்களையும் சொன்னாலும் அவளால் அழுகையையும் குற்றவுணர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

“நான் செய்தது தேசத்துரோகம் தான், ஆனால் என்னைத் தேசம் மன்னிக்காதா? உங்கள் துவக்குளில் ஒன்றேனும் மவுனிக்காமல் எனக்காக காத்திருக்கிறதோ என்று அச்சமாய் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் அமைதி குறித்து எனக்கு நிறைந்த நடுக்கம் இருக்கிறது. நீங்கள் கூட என்னைச் சுடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களுள் ஒருவர்தானே” என்றாள்.

மனித வாழ்வு நழுவி இரத்தத்தில் விழுந்து உதிரும் நாட்கள் அவை. அப்போது புலிகளுக்கு ஆதரவானவர்களை இராணுவ ஒட்டுக்குழுக்களும்-அரசுக்கு ஆதரவான ஆட்களை புலிகளும் சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்த கொடும் ஊழ் ஒரு கொடியாகி படர்ந்து வளர்ந்தது. அப்படியான தாக்குதல்களை செய்துவந்தவர்களுள் ஜீவகாந்தனைப் போல திருச்செல்வமும் மிகமுக்கியமானவர். இராணுவத்தின் ஆட்களை அதிரடியாக போட்டுத்தள்ளும் சாகஸத்தில் இவருக்கு பெரிய ஈடுபாடு இருந்தது. தேசத்துரோகிகளை அழித்தொழிக்கும் இந்த நடவடிக்கையில் திருச்செல்வத்தின் இலக்குகளில் பூனைச்சுமதியும் அடக்கம். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் ஒரு மழைநாளில் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் பூனைச்சுமதி நின்றுகொண்டிருந்தாள். தகவல் கிடைத்து திட்டம் தீட்டப்படுவதற்குள் பேருந்தில் ஏறிச்சென்று தப்பியிருந்தாள். அப்படியொன்று நிகழாதிருந்தால் திருச்செல்வத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட தேசத்துரோகியாக வரலாற்றில் இடம்பிடித்திருப்பாள் பூனைச்சுமதி.

நினைவின் சரீரம் ஓங்கி ஒலித்து திருச்செல்வத்தை குமிறி அழச்செய்தது. எங்கே நிலம்? எங்கே தியாகம்? எங்கே துரோகம்? எங்கே வெற்றி? எங்கே தோல்வி? என்று எத்தனையோ “எங்கே” அந்த மொட்டை மாடியில் திருச்செல்வத்தை சுற்றிவளைத்தது. இரவின் புள்ளினங்கள் கூவி உருகும் சில நிமிடங்களில் திருச்செல்வம் இயல்புக்கு திரும்பினார்.

ஒருமாத பழக்கத்திற்கு பிறகு வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அல்பிரட் மேனகாவும் இரண்டு பிள்ளைகளும் திருச்செல்வமும் வளசரவாக்கம் அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு ஒன்றாகப் போயினர். யாழ்ப்பாணி அவற்றைக் கண்காணித்துக் கொண்டிருந்ததை திருச்செல்வம் கவனித்தார். தேவாலயத்தில் பூசை முடிந்து பிள்ளைகள் இருவரையும் வீட்டில் கொண்டு போய் இறக்கிவிட்டு திருச்செல்வத்தின் அறைக்கு வந்தாள். அவனின் இரண்டு உடுப்பு சூட்கேசுகளையும் தூக்கிக் கொண்டு பைக்கில் வைத்தாள். திருச்செல்வம் மொட்டைமாடியில் இருந்த தனது போர்வையை மடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பூனைச்சுமதியை சந்திக்க கூடாது என்பதாலேயே ஜீவகாந்தன் அறையைவிட்டு ஏற்கனவே வெளியேறி இருந்தான். யாழ்ப்பாணி இவற்றையெல்லாம் இன்னொரு உயரமான வீட்டின் மொட்டை மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அல்பிரட் மேனகாவின் சுற்றத்தினர் யார் இவரு? யார் இவரு? என்று கேட்கத்தொடங்கியதும் எந்தத் தயக்கமுமின்றி இவர்தான் என்னுடைய கணவர் என்று சொல்லத்தொடங்கினாள். வீட்டு உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு தனது கணவர் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாக தகவல் சொன்னாள். துள்ளி எழுந்து கட்டியணைத்து என்னை உனது கணவனாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி என்றார் திருச்செல்வம். சிலநாட்களில் தன்னைப் பின் தொடர்ந்த யாழ்ப்பாணி காணாமல் போயிருப்பதை திருச்செல்வத்தால் உணரமுடிந்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு சுமதி கருவுற்று இருப்பதாக அறிந்ததும் ஜீவகாந்தனுக்கு தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். நல்ல சந்தோஷம் திரு என்று மறுபுறத்தில் இருந்து பதில் வந்தது. ஏற்கனவே காணாமல்போயிருந்த யாழ்ப்பாணியை நேருக்கு நேர் சந்திக்கலாம் என்கிற அளவுக்கு இனம்புரியாத துணிச்சலும் உற்சாகமும் தனக்கு வந்திருப்பதாக திருச்செல்வம் சொன்னார். சுமதி தன்னுடைய மேடு பரவிய வயிற்றில் திருச்செல்வத்தின் கைவிரல்களை வைத்து தடவினாள். அவனின் கைவிரல்களை சிசுவின் பசுமை பற்றிவிட்டது. இருவரும் கட்டித்தழுவி கண்ணீரில் உடல்மாறி நனைந்தனர்.

தியாகியும் துரோகியும் சேர்ந்து  குடும்ப நடத்த அகதிவாழ்வில் பூரணசுதந்திரம் உண்டென்று ஜீவகாந்தன் யாருக்கோ போனில் சொல்லிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் இருந்தவன் “இல்லை அண்ணை புண்டையாண்டிய சுடவேணும். இவன் செய்தது பச்சைத் துரோகம்” என்றான். ஜீவகாந்தன் தொடர்பை துண்டித்து வானத்தை அண்ணாந்து பார்த்தார். அந்த இரவில் ஒரு பறவை சூனியத்தின் புள்ளியைப் போல தனித்துப் பறந்தது.

அப்போது உலகம் அத்தனை விதத்திலும் பைத்தியக்காரத்தனமாகவே இருந்தது.

Loading
Back To Top