
இறந்து போன உங்கள் அம்மாவை எங்கே புதைத்தீர்கள்?
அவள் இறக்கவில்லை
குண்டுகளால் கொல்லப்பட்டாள்.
சிதறிய அவளின் மாமிசத் துண்டங்களை
கடல் மணலில் அரித்தெடுத்தேன்.
புதைப்பதற்கு விருப்பமில்லாத
அந்தச் சின்னஞ்சிறு மாமிசத்தை
“I”வடிவ பதுங்குகுழியில் வைத்து
அழுது கரையாமல் கடலில் வீசினேன்.
நீச்சல் தெரியாத அம்மாவின்
மாமிசம்
ஊழின் முற்றுகைக்குள்ளால்
சாவின் திகைப்போடு
அலைகளில் எழுந்து மிதந்தது.